கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சுதந்திரப் போராட்ட வீரர் ஜெகநாத ஐயர் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"கமுதி கோட்டை போரில் இருந்து தப்பித்த ஜெகநாத ஐயர், பின்னாட்களில் சிவகங்கையில் வைத்து வெள்ளைகாரன் கையில் சிக்கினார். கமுதியில் இருந்து கிளம்பி சிவகங்கை வந்த ஜெகநாத ஐயர், மருது பாண்டியரோடு இணைந்து வேலை செய்துவந்தார். சிவகங்கை மன்னர் பெரிய உடையனத்தேவரை பிடிக்கும்போது ஜெகநாத ஐயரையும் வெள்ளைக்காரன் பிடித்துவிடுகிறான். அப்போதும் அவர்தான் ஜெகநாத ஐயர் என்று அவனுக்குத் தெரியாது. பின், யாரென்று விசாரிக்கையில்தான் தெரியவந்தது.
விசாரணையின்போது ’நீதான் லூசிங்டன்னை கொலை செய்ய முயற்சித்தாயா’ என்று கேட்டபோது, அவன் என் கையில் இருந்து தப்பித்துவிட்டான் என்று கர்வமாக ஜெகநாத ஐயர் சொல்லியிருக்கிறார். பிடிபட்டுவிட்டோம் என்ற பயம் அவருக்கு துளியும் இல்லை என கர்னல் அக்னியூவ் பதிவுசெய்திருக்கிறான். அதன் பிறகு அவரை ராமநாதபுரம் கொண்டு செல்கின்றனர். பெரிய உடையனத்தேவர், ஜெகநாத ஐயர், ஷேக் உசைன் உள்ளிட்ட 72 பேரை கை, கால்களில் சுமக்க முடியாத அளவு விலங்கிட்டு சிவகங்கையில் இருந்து ராமநாதபுரம்வரை நடத்தியே அழைத்துவந்திருக்கிறார்கள். ராமநாதபுரத்தில் வைத்து ஆயிரம் கசையடிகள் கொடுத்திருக்கிறார்கள். அவருடன் இருந்த குமாரன், கண்ணன் அந்த கசையடியிலேயே இறந்துவிட்டார்கள். ஆனால், அத்தனை அடிகளையும் தாங்கிக்கொண்டு ஜெகநாத ஐயர் உயிரோடு இருக்கிறார். அதன் பிறகு எஞ்சியிருந்தவர்களை நாடு கடத்த முடிவெடுக்கிறார்கள். வெட்டிக்கொலை செய்தல், தூக்கில் போடுதல் என்றால் அந்த நிமிடம்தான் வலியிருக்கும். நாடு கடத்தல் என்றால் சாகும்வரை வலியை அனுபவிக்க வேண்டும்.
பின்னர், தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்று நெல்சன் என்ற பழைய கப்பலில் பினாங்கிற்கு நாடு கடத்துகிறார்கள். இந்தச் சம்பவம் 1802 பிப்ரவரி 4இல் நடக்கிறது. கப்பலில் போகும்போதே சிலர் இறந்துவிடுகின்றனர். பெரிய உடையனத்தேவர், ஜெகநாத ஐயர், ஷேக் உசைன் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும்தான் பினாங்கிற்கு உயிரோடு செல்கிறார்கள். அவர்களை அங்கிருந்த தகர பேக்டரியில் கொத்தடிமையாக வேலை செய்ய வைத்துள்ளனர். எலிக்கடியாலும் நாய் கடியாலும் பெரிய உடையனத்தேவர் இறந்துவிடுகிறார். ஜெகநாத ஐயர் எப்படி இறந்தார் என்பது இன்றுவரை தெரியவில்லை. 15 வயது பையனாக நாடு கடத்தப்பட்ட துரைச்சாமி என்ற பையன் மட்டும் அவனுடைய கடைசி காலத்தில் திரும்ப அனுப்பப்பட்டதாக சொல்கிறார்கள். பீரங்கி முன்னால் நிற்கவைத்து சிங்கம்செட்டியை கொன்றதுபோல நம்மையும் கொலை செய்திருக்கலாமே என்று நினைக்ககூடிய அளவிற்கு இவர்கள் பினாங்கில் சித்ரவதையை அனுபவித்திருக்கிறார்கள்".