கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பெருங்காமநல்லூர் படுகொலை குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
"குற்றப்பரம்பரை சட்டம் என்பது ஆங்கிலேயர்களுக்கு எதிராக இருந்த மண்ணின் மைந்தர்கள் மீதும், பழங்குடியின மக்கள் மீதும் போடுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம். ஆனால், அதில் 1914ஆம் ஆண்டு ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அது முழுக்க முழுக்க பிரமலைக் கள்ளர் சமூகத்தை குறிவைத்தே கொண்டுவரப்பட்டது. அதற்கான குறிப்புகள் மதுரை ஆவணங்களில் உள்ளன. வெள்ளைக்காரனின் அதிகார வலிமை பற்றியெல்லாம் தெரியாத அம்மக்கள், எங்கள் மீது எப்படி இந்தச் சட்டத்தை போடலாம் என்று வெள்ளைக்காரனை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை திருமலை நாயக்கர்தான் மன்னன். அவர்தான் அவர்களுக்கு கண்கண்ட கடவுள். பின், சேதுபதி, பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மனை தெரியும். இவங்கதான் எங்க மன்னன். உனக்கு வரி கட்ட மாட்டோம், உன்னால முடிஞ்சத பாரு என்றுதான் அந்த மக்கள் அன்றைக்கு இருந்திருக்கிறார்கள். அதேபோல கத்தி, அருவா, கம்புதான் அவர்களுக்குத் தெரியும். வெள்ளைக்காரன் வைத்திருக்கும் துப்பாக்கி பற்றியெல்லாம் பெரிதாக தெரியாது.
பெருங்காமநல்லூரில் 1920 ஏப்ரல் 3ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடக்கிறது. ரைபிள் 303ஐ அவர்கள் மீது வெள்ளைக்காரன் பயன்படுத்தினான். அதில் சுட்டால் 6 முதல் 7 பேர் உடலை பிய்த்து எறிந்துவிடும். அந்த ரைபிளை 3000 பேர் இருந்த கூட்டத்திற்குள் பயன்படுத்தினான். ஒரு பெண் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். இதுதான் பெருங்காமநல்லூர் படுகொலை என அறியப்படுகிறது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919ஆம் ஆண்டு நடக்கிறது. அடுத்த ஆண்டே பெருங்காமநல்லூர் படுகொலை நடக்கிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை தேசிய கண்ணோட்டத்தில் பார்த்தவர்கள் பெருங்காமநல்லூர் படுகொலையை சாதிய கண்ணோட்டத்தில் குறுக்கிவிட்டார்கள். அது விடுதலைக்காக நடந்த போராட்டமாகவும் இதை ஒரு சாதிக்காரர்களின் போராட்டமாகவும் சுருக்கிவிட்டதால் பெருங்காமநல்லூர் படுகொலை வரலாற்றிலேயே இடம்பெறவில்லை.
வரலாறு என்பது வரலாற்று ஆசிரியர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படுவதுதான் வரலாறாக ஏற்றுக்கொள்ளப்படும். வெள்ளைக்காரன் அந்த மக்களை திருடன் என்று சொன்னான். இவர்கள் தங்களை போராளி என்று சொன்னார்கள். இந்த சர்ச்சைக்கு இன்றுவரை பதில் கிடைக்கவில்லை. எனவே பெருங்காமநல்லூர் படுகொலை கடந்த காலத்தில் நடந்த ஒரு சம்பவமாகத்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதன்முதலில் பாகிஸ்தானின் சிந்து பகுதியில் சுதந்திரத்திற்காக போராடிய ஹர் என்ற முஸ்லீம் மக்கள் மீது போடுவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம், பெங்கால், ராஜஸ்தான், மராட்டியம் என விரிந்து பல மண்ணின் மக்களை அழித்து முடித்துவிட்டு 1911இல் தமிழ்நாட்டிற்கு வந்தது. இதுதான் குற்றப்பரம்பரை சட்டத்தின் உண்மையான வரலாறு".