அரசியல்வாதிகள், அதிகாரிகள், நடிகர்கள் உட்படப் பலதரப்பட்ட மக்களும் கடந்த சில மாதங்களாகவே கருங்காலி மாலையைப் போட்டி போட்டுக்கொண்டு அணிந்து வருகிறார்கள். அந்த அளவுக்கு கருங்காலி மாலைகளை அணிவதற்கு என்ன காரணம் என்பதை அறிய விசாரணையில் இறங்கினோம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் அருகே இருக்கும் ராமலிங்கம்பட்டியில் பாதாள செம்பு முருகன் கோவில் உள்ளது. இக்கோவில் மற்ற கோவில் போல் இல்லாமல் பூமிக்கடியில் 16 அடி ஆழத்தில் செம்பு உலோகத்தால் முருகன் காட்சியளிப்பதால் பாதாள செம்பு முருகன் கோவில் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதுபோல் இக்கோவிலில் மற்ற முருகன் கோவில்களுக்கு மாலை அணிவிப்பது போல் இந்த செம்பு முருகனுக்கு மாலையெல்லாம் அணிவித்து பூஜை செய்வது கிடையாது. அதற்குப் பதிலாக கருங்காலி மாலையை அணிவித்து தான் பூஜையே செய்வார்கள். அப்படி பூஜை செய்த கருங்காலி மாலையைத்தான் முருக பக்தர்களுக்கும் வழங்கி வருகிறார்கள். அதனால் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் இருந்தும் வந்து செல்கிறார்கள்.
பாதாள செம்பு முருகனுக்கு பூஜை செய்யப்பட்ட கருங்காலி மாலையை அணிவிப்பதின் மூலம் ராகு - கேது, செவ்வாய் தோஷங்கள் நீங்கும். அதுபோல் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியமும் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வீடு, நிலம், சொத்துக்களும் சேரும். குலதெய்வங்கள் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதுபோல் உடல் நலத்திற்கும் நல்லது. அதனாலேயே முருக பக்தர்கள் உள்படப் பலதரப்பட்ட மக்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி வருகிறார்கள். இதில் பிரபல இயக்குநர் பாரதிராஜா, தனுஷ், சிவகார்த்திகேயன், யோகிபாபு, ஐயா வீரமணி உட்பட நடிகர், நடிகைகள் மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினருமே கருங்காலி மாலையை ஆர்வமாக வாங்கி அணிந்து வருகிறார்கள். இதனால் கோவிலில் கருங்காலி மாலைக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது.
அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சிலர், வெளியூரிலிருந்து வரும் பக்தர்களிடம் செம்பு முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட கருங்காலி மாலை என்று கூறி ரெட்டியார்சத்திரம், ஸ்ரீராமபுரம், மூலச்சத்திரம், திண்டுக்கல் உட்பட சில பகுதிகளில் நின்று கொண்டு மூன்றாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் ரூபாய் வரை போலியான கருங்காலி மாலைகளை விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் தினசரி 300க்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் போலியான கருங்காலி மாலையை வாங்கிச் சென்று பல ஆயிரங்களை இழந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட கருங்காலி மாலைகள் ஒரு சில நாட்களிலேயே கலர் போய் வெளுத்து விடுகிறது. அந்த அளவுக்கு சாயம் கலந்த போலி கருங்காலி மாலையை பக்தர்களுக்கு கொடுத்து ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் ஒரிஜினல் கருங்காலி மாலை கருநிறத்தில் சாயம் போகாமல் இருக்கும் என்றனர் அப்பகுதியைச் சேர்ந்த பாதாள செம்பு முருகன் பக்தர்கள் சிலர்.
இது சம்பந்தமாக பாதாள செம்பு முருகன் கோயிலின் அறங்காவலர் அறிவானந்த சுவாமிகளிடம் கேட்டபோது, “இறைவனுக்கு எப்படி பூ மாலைகள் சாத்தி வழிபடுவது வழக்கமோ, அதுபோல பாதாள செம்பு முருகனுக்கு தொன்றுதொட்டு செவ்வாய் பகவானுக்கு உரிய கருங்காலி மாலைகளை பூஜை செய்து பக்தர்களுக்குக் கொடுத்து வருகிறோம். ஒரிஜினல் கருங்காலி குச்சிகளை வெளிநாடான ஆப்ரிக்கா மற்றும் அரியானா, கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து வாங்கி கருங்காலி மாலையாக தயார் செய்து முருகனுக்கு பூஜை செய்த பின் பக்தர்களுக்குக் குறைந்த விலையில் கொடுத்து வருகிறோம். அதிலேயும் உடல் ஊனமுற்றோருக்கு இலவசமாக கொடுத்து வருகிறோம். இந்த கருங்காலி மாலைகளைப் பக்தர்கள் அணிவதன் மூலம் உடல்நலத்தில் எந்த ஒரு நோய் இருந்தாலும் அதைத் தீர்க்கக்கூடிய சக்தியாக இருந்தும் வருகிறது. அதனால் பக்தர்கள் ஆர்வமாக கருங்காலி மாலையை வாங்கி வருகிறார்கள். ஆனால் பக்தர்கள் அதிகமாக வருவதால் கருங்காலி மாலையை பூஜை செய்து கொடுப்பதில் குறைந்தது 18 மணி நேரமாவது தேவைப்படுகிறது. ஆனால் எங்களால் கருங்காலி மாலையை பூஜை செய்யாமல் கொடுக்கவும் முடியாது.
காலப்போக்கில் உடனடியாக பக்தர்களுக்கு கருங்காலி மாலை கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். அதனால் தான் பக்தர்களுக்கு கருங்காலி மாலை பூஜை செய்வதில் காலதாமதமும் ஏற்பட்டு வருகிறது. அதனால் சில பக்தர்கள் மன வருத்தமும் அடைகிறார்கள். இப்படிப்பட்ட பக்தர்கள் ராமலிங்கம்பட்டி ஊர் எல்லையில் இருந்து எல்லப்பட்டி வரை அமைதியாகச் சென்று போனாலே கருங்காலி மாலைகளுக்கு கிடைக்கக்கூடிய பலன்களும் கிடைக்கும். ஆனால் கருங்காலி மாலைகள் உடனே பக்தர்களுக்கு கிடைக்காததால் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பலர் போலியான கருங்காலி மாலைகளை பக்தர்களிடம் கொடுத்து ஏமாற்றி பல ஆயிரங்களை தினசரி சம்பாதித்தும் வருகிறார்கள். இதற்கு எங்கள் கோவில் நிர்வாகம் பொறுப்பு கிடையாது. கோவிலைத் தவிர எங்கும் கருங்காலி மாலை விற்பனை செய்வது கிடையாது. அதனால் பக்தர்கள் போலியை நம்பி ஏமாறாதீர்கள்” என்று கூறினார்.