தமிழகத்தில் பொங்கல் விழாவை கொண்டாட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது போல, செரியலூரில் தேங்காயோடு தேங்காய் மோதி உடைக்கும் போட்டி நடத்தப்பட்டது. பல சுற்றுகளில் போட்டியிட்டு கடைசி தேங்காயை உடைத்து வெற்றி பெற்ற தேங்காய்க்கு பரிசும், சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
தை திருநாளை தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையாக 3 நாட்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாட்களில் கிராமங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுகின்றனர். இந்த வகையில் தமிழகம் எங்கும் மாடுகளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது போல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது வித்தியாசமான போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, திருவாப்பாடி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பைங்கால், சாணாகரை, பேராவூரணி, தென்னங்குடி, வலப்பிரமன்காடு, செருவாவிடுதி, களத்தூர் மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதாவது எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வதும். இந்த மோதலில் உடையும் தேங்காயை, மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ. 500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவர்களும் உள்ளனர்.
இதுவரை அனைத்து ஊர்களிலும் யார் வேண்டுமானாலும் விரும்பியவர்களின் தேங்காய்களுடன் மோதிக் கொண்டு உடையும் தேங்காயை எடுத்துச் செல்லும் விளையாட்டு நடந்தது. ஆனால், கடந்த ஆண்டு முதல் செரியலூர் கிராமத்தில் உள்ள இளைஞர்களால் களம் அமைத்து போர் தேங்காய் உடைக்கும் போட்டியும் வெற்றி பெறும் தேங்காய்க்கு ரூ. 1000 பரிசும் அறிவித்திருந்தனர்.
இந்த போட்டியில் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் தேங்காய்களுடன் வந்து பதிவு செய்து போட்டியில் கலந்து கொண்டனர். 4 சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியின் இறுதியில் தஞ்சை மாவட்ட சாணாகரை கிராமத்தைச் சேர்ந்த குரு என்பவரின் தேங்காய் பல தேங்காய்களை மோதி உடைத்து முதல் பரிசை வென்றது. அந்த தேங்காய்க்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. இரண்டு பரிசை தஞ்சாவூர் மாவட்டம் முத்துக்குமாரின் தேங்காய் வென்றது.
இது குறித்து குளமங்கலம் அபிராமி பாலு கூறும் போது, இது எங்களின் சந்தோசத்துக்காக நடத்தப்படும் போட்டி. இந்த போட்டியால் யார் உயிருக்கும் ஆபத்து இருக்காது. கைகளில் வேண்டுமானாலும் காயம் ஏற்படலாம். போர்காய் தேங்காய்களுக்காக ஒவ்வொரு கிராமமாக அலைந்து தேங்காய்கள் வாங்க வேண்டும். 2 மாதங்களுக்கு முன்பே தேங்காய் வாங்கிவிட்டோம். கடந்த ஆண்டு ரூ. 300, 400 க்கு கிடைத்த தேங்காய் இந்த ஆண்டு கஜா புயல் தென்னை மரங்களை சாய்த்ததால் இதற்காக ஒதுக்கப்பட்ட தென்னை மரங்களும் அழிந்துவிட்டது. அதனால் இந்த தேங்காய் விலை ரூ. 1000 வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுகளில் போர் தேங்காய் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம் என்றார்.