Skip to main content

சபரிமலை 27 வருட வழக்குப் பாதை மற்றும் தீர்ப்பு... 

Published on 28/09/2018 | Edited on 28/09/2018

1991-ஆம் ஆண்டு முதல் 2018 வரை ஒரு வழக்கு, உரிமைப் போராட்டம் என்றும் கூட சொல்லலாம். பொதுவுடைமையாக கொண்டாடப்பட வேண்டிய கடவுளை, குறிப்பிட்ட வயது (10 முதல் 50) பெண்களை மட்டும் ஒதுக்கிவைத்துவிட்டு தனிஉடைமையின் வழிபாட்டில் இருந்தது.

 

ss

 

 

27 வருடங்களாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதா வேண்டாமா என்று வழக்கு நடந்துவந்தது. இதில் ஒவ்வொரு முறையும் கேரளாவில் ஆட்சி மாற்றங்கள் நிகழும்போதும், அவர்களின் மாற்றுக் கருத்துக்களைச் சொல்லிவந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை தகர்க்க யார் வழக்குத்தொடுத்தது, இந்த வழக்கு விசாரணையின்போது கிளம்பிய ஒரு நடிகையின் பரபரப்பு அறிக்கை, அதன் பின் கேரள அரசின் நிலைப்பாடுகள், இந்த வழக்கில் இளம் வழக்கறிஞர்களின் பங்கு என்ன என்பதை எல்லாம் பார்ப்போம்.

 

1991-ல் முதல் முறையாக எஸ். மஹாதேவன் என்பவர் சபரிமலை தரிசனத்திற்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அந்த வழக்கை கேரளா உய்ரநீதிமன்றம் தள்ளுபடி செய்து, 10-50 வயது பெண்கள் செல்ல இந்து மத நம்பிக்கை மற்றும் சபரிமலை தேவஸ்தானம் விதி படி தடை என்று அறிவித்து.

 

2006-ல் உன்னிகிருஷ்ண பணிக்கர் என்னும் சாமியார் சபரிமலை கோவிலில் பூஜை நடத்தினார், அந்தப் பூஜையின் முடிவில் இதற்குமுன்பு வயதுவந்தப் பெண் யாரோ ஒருவர் கோவிலுக்குள் வந்துசென்று இருக்கிறார் அதற்கான அறிகுறியிருக்கிறது என்று கூறினார்.

 

சில மாதங்கள் கழித்து கன்னட நடிகை ஜெயமாலா "1986-ஆம் ஆண்டு எனக்கு 26 வயதாக இருக்கும்போது சபரிமலை கோவிலுக்குள் சென்றேன், அப்போது கூட்டநெரிசல் காரணத்தால் ஐயப்பன் விக்கிரதைத் தொட்டேன்" என்று கூறினார்.

 


2006-ல் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கேரளாவை சேர்ந்த இளம் வழக்கறிஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கைதொடுத்தது.

 

2007-ல் கேரளாவின் இடது ஜனநாயக கூட்டணி அரசு சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என்று கருத்து தெரிவித்தது.

 

2006-ல் தொடுக்கப்பட்ட வழக்கு, இரண்டு வருடங்கள் கழித்து 2008-ஆம் ஆண்டு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சென்றது.

 

அதன் பின் சில வருடங்களாக இந்த வழக்கு, விசாரணைக்கு வராமல் இருந்தது. இதற்கிடையில் 2015-ஆம் ஆண்டு மாதவிடாய் அறியும் கருவி கண்டுபிடித்த பிறகே பெண்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்தது.

 

2016-ல் சபரிமலை விவகாரத்தில் கேரளா அரசு தலையிடாது என்று அப்போதைய கேரளா முதல்வர் உம்மன் சாண்டி அறிவித்தார்.

 

2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகளான நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், இந்து மல்ஹோத்ரா அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அதே வருடம் பெண்கள் சபரிமலைக்கு வரும்போது தங்கள் வயதுக்கான ஆதாரங்களைக் கொண்டுவர வேண்டும் என்று தேவசம் போர்டு அறிவித்தது.

 

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் முடிவடைந்து செப்டம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதன் அடிப்படையில் இன்று உச்சநீதிமன்றம் 'கடவுள் வழிபாட்டில் இரட்டைமுறை என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது மற்றும் கடவுள் வழிபாட்டில் ஆணும் பெண்ணும் சமம் மேலும் மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுப்பது சம உரிமையை உறுதி செய்யும் அரசியல் சட்டதின் 14-ஆம் பிரிவை மீறுவதாக உள்ளது' என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார். மேலும் சபரிமலை கோவிலில் பெண்களுக்கும் அனுமதி என்று 4:1 என்ற கணக்கின்படி தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இதில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் இந்த தீர்புக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.