Skip to main content

ஊனம் என்பது தன்னம்பிக்கையாளர்களுக்கு இல்லை! -சாதிக்கும் கவிஞர் சுந்தரமூர்த்தி!

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

 

p


நேற்று சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை உலகமே கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது. சென்னையிலும் மாற்றுத் திறனாளிகளின் தன்னம்பிக்கைப் பேரணிகள், கலை நிகழ்ச்சிகள் என பரவலாக நிகழ்ச்சிகள் அரங்கேறின. இந்த நிலையில், ’மாற்றுத் திறனாளி’ என்ற சொல்லைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இலக்கியத்தில் தன் சிந்தனைத் திறத்தாலும் உழைப்பாலும் சாதித்து வருகிறார் சென்னை வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த இளைஞரான கவிஞர் பொ.சுந்தரமூர்த்தி. 


உற்சாகம் மிகுந்த இளைஞரான இவர், ’நண்பர்கள் பதிப்பகம்’ என்ற பதிப்பு நிறுவனத்தை,  தன்னைப் போன்ற சக நண்பர்களோடு  சேர்ந்து நடத்திவருகிறார். இதன் மூலம் தமிழ்ப் படைப்பாளர்கள் பலரின் இலக்கியப் படைப்புகளை நூலாக்கி, அவர்களுக்கும் வெளிச்சம் தரும் முயற்சியில், தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். 

 

p


இயற்கை தன்னை மாற்றுத் திறனாளியாக்கி வஞ்சித்த போதும், இயற்கையையும் இலக்கியத்தையும் வாழ்க்கையையும் வஞ்சிக்காது, அவற்றைப் போற்றி வாழ்கிற தன்னம்பிக்கையாளர் இவர். போலி இலக்கியம் பெருகிவரும் இன்றைய சூழலில், இவர் சிறந்த கவிஞராகவும் திகழ்ந்து வருவது பாராட்டுக்குரியது.  முகநூல் வெளியில் தொடர்ந்து தன் விழிபுணர்வுக் கவிதைகளை படைத்துவரும், சுந்தரமூர்த்தி நிறைய நிறைய விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார். இவருக்கென்று தனி வாசகர் வட்டமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


”என் குறை தெரியாமல் என்னை உயிரில் வைத்துக் காத்துவரும் பெற்றோர்களே என் தெய்வம். ஊனம் என்பது என்னைப் போன்ற தன்னம்பிக்கையாளர்களை எதுவும் செய்யாது. 


கவிஞர் கனகா பாலனைப் போன்ற இலக்கிய உறவுகள் என்னை உற்சாகமாக இயங்க வைக்கிறார்கள். இயங்கிக்கொண்டே இருக்கிறேன்” என்கிறார் சுந்தரமூர்த்தி.


இவரது அண்மைக்காலக் கவிதைத் தொகுப்பான ’இதோ எழுதுகிறேன்’ என்ற நூல்,  இலக்கிய உலகின் கவனத்தைப் பெற்று வருகிறது. அந்த நூலில் மின்னும் ஒரு சில ஹைகூ கவிதைகள் இங்கே...

*
கருக்கொண்டதெல்லாம்
கவிதையென்றால்
அம்மாதான் என் முதல் கவிதை.
*
மூன்றாகப் பிரிந்தும்
ஒற்றுமையாகப் பறக்கிறது
தேசியக் கொடி!
*
நுரைதள்ளியும்
சாகவே இல்லை
அலைகளின் முயற்சி!
*
புலி வேசம்
போட்டவனின் முகத்தில்
வறுமைக் கோடு
*
பள்ளிக்குச் செல்லும் அவசரத்திலும்
தலைசீவிப் பொட்டுவைக்கிறாள்
பொம்மைக்கு சிறுமி
*
மாலை நேர மழை
குடையிருந்தும் நனைகிறது
பூக்காரியின் கண்கள்.
*
ஜாதி மல்லி
தள்ளி நிற்கிறது
பட்டாம்பூச்சி
*
ஆடம்பரத் திருமணம்
நிரம்பி வழிகிறது
குப்பையில் உணவு
*
ஆசையாய்த் திருடிய
அழகுப் பெட்டியில்
புத்தர் சிலை.
*
உழைத்துக் களைத்துப் போனாரோ?
வண்ண ரூபாய்க் காகிதத்தில்
கருப்பாய் காந்தி
*
என் தாய்ப் பாசம் கூட
தோற்றுத்தான் போகிறது அம்மா
உன் பிள்ளைப் பாசத்திடம்
*
-சுந்தரமூர்த்தி, மேலும் மேலும் சாதனை படைப்பார் என்ற நம்பிக்கையை அவரது சிந்தனைகளே உணர்த்துகின்றன. இவரைப் போன்ற நம்பிக்கையாளர்களால்தான் இந்த பூமி, தன் அச்சில் அச்சுப் பிசகாமல் சுழன்றுகொண்டிருக்கிறது. 

தொடர்புக்கு: சுந்தரமூர்த்தி எண் - 9962514140