அதிமுக - பாஜக கூட்டணியில் தே.மு.தி.க. இணையும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்ததால் தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வரும் யோசனை ஸ்டாலினுக்கு இருக்கவில்லை. பாமகவிடம் மட்டுமே ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியபடி இருந்தனர். பேரங்கள் படியாத நிலையில் அதிமுக பக்கம் தாவியது பாமக. அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததை அடுத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு உருவானது.
பாஜகவும் அக்கூட்டணியில் இணைந்ததை அடுத்து அதிமுக கூட்டணிதான் வலிமையானது என்கிற தோற்றம் உருவானது. மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வர விஜயகாந்தை சந்தித்து பேசியது பாஜக தலைமை. விஜயகாந்தின் உடல்நலன் கருதி அவரை சிரமப்படுத்துவதை தவிர்த்து பிரேமலதாவிடமும், சுதீசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயல்.
அப்போது பல்வேறு புள்ளிவிபரங்களைச் சுட்டிக்காட்டி விட்டு தங்களுக்கான டிமாண்ட்டை முன்வைத்த பிரேமலாதா, "பாமகவை விட அதிக வலிமை கொண்ட கட்சி தேமுதிக. அவர்களுக்கு வட தமிழகத்தில் மட்டும்தான் கட்டமைப்பு உள்ளது. ஆனா, தேமுதிகவுக்கு தமிழகம் முழுவதும் வலிமையான கட்டமைப்பு இருக்கிறது. அதனால், 8 லோக்சபா சீட்டும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வேண்டும். பாமகவிற்கு தேர்தல் நிதி தந்தது போல எங்களுக்கும் 500 சி தரப்பட வேண்டும் " என கோரிக்கை வைத்தார்.
அதை கேட்டு மிரண்டு போனார் பியூஸ்கோயல். அங்கிருந்தபடியே அமைச்சர் தங்கமணியை தொடர்புகொண்டு விவாதித்துவிட்டு, " அதிமுக தரப்பில் 3 சீட்டுகள் மட்டுமே ஒதுக்க முடியும் என சொல்கின்றனர். ராஜ்யசபா சீட் கிடையாது. அதற்கு பதிலாக உள்ளாட்சி தேர்தலில் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் " என தெரிவித்திருக்கிறார்.
இதனை ஏற்க மறுத்த பிரேமலதாவும் சுதீசும் இறுதியாக, "8 சீட்டிலிருந்து ஒன்றை குறத்துக் கொள்கிறோம். 7 சீட்டும், 500 சி யும் எனில் ஓ.கே.! அதே சமயம் , அதிமுக மேடைகளில் ஏறமாட்டோம். இடைத்தேர்தல் தொகுதியில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்யமாட்டோம். பாஜகவுடன் தான் எங்களுக்கு கூட்டணி " என கறாராக தெரிவித்திருக்கிறார்கள். இதில், பியுஸ்கோயலுக்கே உடன்பாடில்லை. உடனே, தேமுதிக தலைமையின் விருப்பத்தை அதிமுக தலைமைக்கு பியூஸ்கோயல் தெரிவித்த போது, " போகாதா ஊருக்கு வழி கேட்கிறார்கள். அவர்களது டிமான்டுகளை ஏற்பது சாத்தியமல்ல. தேமுதிகவை விட்டுவிடுவோம்" என அழுத்தமாக தெரிவித்துவிட்டார் எடப்பாடி.
இந்த நிலையில்தான், " உங்களின் எதிர்பார்ப்பு மிரட்சியாக இருக்கிறது. 3 சீட் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். தேர்தல் செலவுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். மற்றபடி உங்கள் முடிவு" என சுதீசிடம் கூறிவிட்டு கிளம்பிவிட்டார் பியூஸ் கோயல். இதனால் அப் செட்டானார் பிரேமலதா. அப்போது, திமுக கூட்டணி குறித்து யோசித்தனர். திமுகவின் மனநிலையை அறிந்துகொள்ள திருநாவுக்கரசை அழைத்தார் சுதிஷ். அதன்பேரிலேயே விஜயகாந்தின் உடல்நலத்தை விசாரிப்பதற்காக சென்றார் திருநாவுக்கரசர்.
விஜயகாந்தை சந்தித்துவிட்டு திரும்பிய திருநாவுக்கரசர், சந்திப்பின் விபரங்களை திமுக தலைமைக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து , கட்சியின் மூத்த தலைவர்களிடம் விவாதித்திருக்கிறார் ஸ்டாலின். அந்த விவாதத்தில் , " தேமுதிகவை நம் பக்கம் கொண்டு வரலாம் " என பலரும் கருத்துக்களை வெளிப்படுத்திய நிலையில், விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின்.
விஜயகாந்துடனான ஸ்டாலினின் சந்திப்பு அதிமுக தரப்புக்கு கிலியை உருவாக்கியிருக்கிறது. இந்த சந்திப்பு குறித்து தேமுதிக தரப்பில் விசாரித்தபோது, " கூட்டணி குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 லோக்சபா ஒதுக்கியிருப்பதால் அதே எண்ணிக்கையை கேட்டுள்ளோம். திமுக தரப்பில் 4 சீட்டுக்கு ஓகே சொல்லியிருக்கிறார்கள். அதேசமயம், காங்கிரஸ் தலைமையிடம் பேசிவிட்டு இறுதி முடிவை தெரிவிப்பதாக சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஒரு வேளை , காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 10 சீட்டில் ஓரிரு சீட்டுகளை விட்டுத்தருமாறு கேட்டு அதனையும் சேர்த்து எங்களுக்கு தரலாம் என திமுக திட்டமிடுவதாக தெரிகிறது " என்கின்றனர்.
இதற்கிடையே, தேமுதிகவை வளைக்க திமுக எடுத்து வரும் முயற்சியில் அதிர்ச்சியைடைந்திருக்கும் எடப்பாடி, தற்போது 5 சீட்டுகள் தருகிறோம் என தேமுதிக தலைமைக்கு தகவல் அனுப்பியபடி இருக்கிறார்.