யார் இந்த திடீர் விளம்பர மாடல்கள்?
தொழிலதிபர்களே நடிப்பதன் ரகசியம்

பல்பொடியென்றாலும், வைரநகையென்றாலும் விளம்பரங்கள் வெறும் அறிவிப்புகளாக இருந்த காலமெல்லாம் போய், விளம்பரங்கள் பல படிகள் மாறிவிட்டன. நேரடியாக பொருளின் பெருமையை சொன்னதெல்லாம் அந்தக் காலம். சொல்ல வேண்டியவற்றை உணர்வுகளாகக் கடத்திய 'லியோ காபி', 'இன்றுனது மணநாள் என்னை விட்டுச் செல்லும் நாள்' என்று தந்தை கரைந்து பாடும் லலிதா விளம்பரங்கள் ஒரு கட்டம். அந்தப் பொருளோ சேவையோ நம் துணையாய் இருக்கும் என்று உணரவைக்க முயற்சித்த 'ஹட்ச்' நாய், 'பன்றிக்குட்டி உண்டியல்' பாங்க் ஆஃப் இந்தியா விளம்பரங்கள் ஒரு கட்டம். 'வைரம் தான் காதல்', 'வெள்ளையாக இருந்தால் தான் அழகு' என்று புதுப்பாடம் புகட்டிய சில விளம்பரங்கள் ஒரு வகை. துணி விளம்பரங்கள் என்றாலே நடிகைகள் வேண்டுமென்கிற விளம்பரங்கள் ஒரு வகை. 'புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?' என்ற கேள்வியில் சஸ்பென்ஸ் வைத்து, பேசா பொருளை, ஊரையே பேச வைத்து பின்னர் ரகசியம் களைத்து வெற்றி பெற்ற விளம்பரங்கள் ஒரு வகை. இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வகை விளம்பரங்கள், பொருளையும் மக்கள் மனநிலையையும், ரசனையையும் பொறுத்து ட்ரெண்டாக இருக்கும். ,'ஸ்ரீதேவி இந்த சோப்பை உபயோகிக்கிறார், நீங்களும் உபயோகியுங்கள்' என்று சொன்னால் வாங்கும் மக்கள் இன்றில்லை. இயற்கை விவசாயம், சித்த வைத்தியம், தயாரிப்பு முறைகள், A1 A2 பால், மரபணு மாற்றம் தவறு என்றெல்லாம் மக்கள் சிந்தித்தும் பேசியும் வருவதால் விளம்பரங்களும் நிறம் மாறியிருக்கின்றன. பொருளின் விவரங்கள், இதுவரை பயன்படுத்தியதில் உள்ள தவறுகள், லாப ரகசியங்கள்(?) வரை தயாரிப்பாளர்கள் நேரடியாக மக்களிடம் பேசும் விளம்பரங்கள் அதிகரித்துள்ளன. சமீபமாக அப்படி பிரபலமான சில தொழிலதிப விளம்பர மாடல்களை சற்று கவனிப்போம்...
'ஆச்சி' பத்மசிங் ஐசக்

தொலைக்காட்சியில் மக்கள் புடை சூழ நடந்து வந்து, "இனியொரு விதி செய்வோம்" என்று பாடி நம்மை ஆச்சி மசாலா வாங்கச் சொல்லுபவர் அந்த நிறுவனத்தைத் தொடங்கிய பத்மசிங் ஐசக். தொடக்கத்தில் கோத்ரேஜ் (Godrej) நிறுவனத்தில் 'ஏரியா சேல்ஸ் மேனேஜர்' (விற்பனை மேலாளராக) ஆக பணிபுரிந்த இவர் சொந்த நிறுவனம் ஆரம்பிக்கும் ஆசையில் தொடங்கியதுதான் ஆச்சி மசாலா நிறுவனம். ஒரே ஒரு அடிப்படையான குழம்பு மசாலா பொடியுடன் தொடங்கி, இப்பொழுது கிட்டத்தட்ட 200 பொருட்களுக்குமேல் விற்பனை செய்துகொண்டிருக்கிறார். அவரது அம்மாவின் கைப்பக்குவத்திற்கு அடிமையானவர் சமையல் பொருட்களின் மூலம் ஆதிக்கம் செலுத்துகிறார்.
'லலிதா' கிரண் குமார்

"எங்க வேணும்னாலும் வாங்குங்க...எங்க கிட்ட விசாரிச்சுட்டு வாங்குங்க" என்று வித்தியாசமான அப்ரோச்சுடன் வருபவர் லலிதா ஜுவல்லரி கிரண் குமார். சாதாரண, சிறிய நகை வியாபாரியின் மகனாகப் பிறந்து 12 வயதில் 10கிராம் நகையுடன் ஆரம்பித்த விதை இப்போது லலிதா ஜூவல்லரி என்ற பெயரில் விருட்சமாக வளர்ந்து உள்ளது. படிப்பு மட்டுமே மூலதனம் என நினைப்பவர்களுக்கு இவர் ஒரு முன்னுதாரணமே.
'ராம்ராஜ்' நாகராஜ்

வேட்டி கட்டுவது பழமை என்று ஒரு தலைமுறை நினைக்கத் தொடங்கிய காலத்தில், தனது மெல்ல அதை மாற்றி, வெண்மையான வேட்டிக்கு வேறு நிறம் கொடுத்தவர் இவர். இன்று வேட்டி கட்டுவது பெருமையென, பாக்கெட் வைத்து, எலாஸ்ட்டிக் வைத்து, வெல்க்ரோ வைத்து வேட்டி கட்டித் திரிகிறது இளைஞர் பட்டாளம். அந்த வகையில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையை மீட்டெடுத்த பெருமை இவருக்கும் உண்டு. பட்டு நூலை மூலதனமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் ராம்ராஜ் நிறுவனம். அந்த காலகட்டத்தில் அரசு வேலைக்காக காத்திருந்தவர்கள் மத்தியில் அதை ஒதுக்கிவிட்டு தொழிலைத் தொடங்கி வெற்றி கண்டவர் இவர்.
போத்தீஸ் ரமேஷ்

'சரவணா ஸ்டோர்' சரவணன் அருள்

விளம்பர உலகில் பவர் ஸ்டாராக நுழைந்து சூப்பர் ஸ்டாராகி விட்டார் இவர். விமர்சனங்களை விளம்பரமாக மாற்றி வெற்றி கண்ட வித்தகன். மலிவு விலைக் கடை என்ற பெயரைப் போக்கி மாடர்னாகக் கொண்டு செல்கிறார். வெள்ளைத் தோல், அல்ட்ரா மாடர்ன் ஆட்களாகவே பார்த்து வந்த துணிக்கடை விளம்பரங்களில், 'இப்படி உடுத்தினால் நாமும் நாயகனாய்த் தெரிவோம் போல' என்ற எண்ணத்தை பார்ப்பவர்கள் மனதில் அமைதியாகப் பதித்தவர். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் செல்வரத்தினத்தின் மகன் இவர். பல ஆண்டுகளுக்கு முன்னரே திநகர் கடையில் இருந்த சினேகாவுடன் இவர் விளம்பரத்திற்கு கொடுத்த போஸ்களை பெரிய போஸ்டர்களாய் கண்டிருக்கலாம். அதன் அடுத்த கட்டம் தான் ஹன்சிகா, தமன்னா என ஜோடி போட்டு ஆடும் ஜாலி ஆட்ட விளம்பரங்கள். இவரது இரண்டாவது மகளுக்கு கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது என்பது இவரது வயதை 'கெஸ்' பண்ணுபவர்களுக்கான செய்தி.
'வசந்த் & கோ' வசந்தகுமார்

இவர் சமீபத்தில் வந்தவர் அல்ல. இதற்கெல்லாம் ஆரம்பம் என்றே சொல்லலாம். 'இந்தியாவின் நம்பர் ஒன் டீலர்' என்ற கணீர் குரலுக்கு சொந்தக்காரர். வாடிக்கையாளர்களுக்கும் கடை அதிபருக்கும் நெருக்கமான உறவுள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்தியதே இவரது விளம்பர யுக்தி. நடிகர்களை நம்பாமல் நம்பிக்கையோடு விளம்பரங்களில் நடித்து பிரபலமான முதல் தமிழ் தொழிலதிபர் இவர் தான். தொழிலதிபர், அரசியல்வாதி, டி.வி. சேனல் உரிமையாளர் சிறந்த பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். 1978ல் முதல்கிளையை ஆரம்பித்து இன்று 60 கிளைக்களுக்கு மேல் வளர்ந்திருக்கும் வசந்த் & கோ நிறுவனத்தின் உரிமையாளருக்கு அறிமுகம் தேவையில்லை.
வாழ்க்கை வணிகமயமாகிவிட்ட இந்த நாட்களில் விளம்பரங்கள் நம் தொலைக்காட்சி, தொலைபேசியென எல்லா நம் ஜன்னல்களையும் திறந்து வந்துகொண்டுதான் இருக்கின்றன. தேர்வு எப்பொழுதும் நம் கையில் தான்.
வசந்த்
கமல்