Skip to main content

"இந்தி தெரியாது போடா" என்ற வார்த்தை சரியான ஒன்றா..? - சுப.வீ பதில்!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020
jh

 

கடந்த சில நாட்களுக்கு முன் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு வார்த்தை "இந்தி தெரியாது போடா" என்ற வாக்கியம். மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகத் தமிழக இளைஞர்களால் இந்த கருத்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டது ஒருபுறம் என்றால், அதையே டீ சர்ட் வடிவில் பிரபலங்கள் அணிந்து வந்து அந்த வாக்கியத்துக்கு மேலும் வலு சேர்த்தனர். லட்சக்கணக்கான ஹேஸ்டேக்குகள் ட்விட்டரை அதிர வைத்தன. சினிமா பிரபலங்கள் ஆரம்பித்து பாமரன் வரையில் டீ சர்ட் அணிந்து இந்தி திணிப்புக்கு எதிரான தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில் இது சரியான முறைதானா, இந்த எதிர்ப்பு மத்திய அரசின் காதுகளில் விழுமா போன்ற பல்வேறு கேள்விகளை நாம் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களிடம் முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு 'இந்தி தெரியாது போடா' என்று ட்விட்டரில் இளைஞர் ட்ரெண்ட் செய்தனர். பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். முதலில் இந்தி தெரியாது போடா என்பதை நாகரிகமான ஒன்றாகக் கருதுகிறீர்களா?

 

இதை அந்த நோக்கத்தில் இளைஞர்கள் பார்க்கவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. மொழி திணிப்புக்கு எதிராக தங்களுடைய கருத்தைக் காட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். அன்றைய தினம் சமூக வலைதளங்கள் முழுவதும் இந்த கருத்து மேலோங்கி இருந்து வந்தது. இதே போன்ற ஒரு உணர்வு 1965ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்டது. மாணவர்கள், இளைஞர்கள் எல்லாம் இந்தி திணிப்புக்கு எதிராகச் சாலைகளில் கூடினார்கள். அப்போது நான் மாணவராக இருந்தேன். அதே மாதிரியான ஒரு எழுச்சி இனிமேல் ஏற்பட வாய்ப்பு இருக்காதோ என்று நாங்கள் எல்லாம் நினைத்திருந்தோம். ஆனால் தமிழக இளைஞர்கள் எப்போது மொழியைத் திணித்தாலும் அதனை எதிர்ப்பார்கள் என்பது ஆளும் வர்க்கத்துக்கு தற்போது புரிந்திருக்கும். எனவே இளைஞர்களின் எண்ணங்களுக்கு அவர்கள் மதிப்பளிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு. அதனை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

 

இதைக் கவர்ச்சிக்காக இளைஞர்கள் செய்கிறார்கள் என்று நிச்சயம் சொல்ல முடியாது. அப்படி என்றால் அவர்கள் திருவள்ளுவர் படம் போடத் தேவையில்லை. நிச்சயமாக இதை ஒரு பொழுதுபோக்காகவோ அல்லது பேன்ஸியாகவோ நான் கருதவில்லை. 'இந்தி தெரியாது போடா' என்ற வார்த்தையை யாரோ ஒரு இளைஞர் எழுதி இருக்கிறார். என்னை எழுதச் சொல்லியிருந்தால் இந்தியை என்னாலும் தமிழகம் ஏற்காது என்று எழுதி இருப்பேன். இளைஞர்களின் சிந்தனை ஒட்டமும், வேகமும் சற்று வித்தியாசமாக இருக்கின்றது. அதை அனுபவம் வாய்ந்த தலைவர்கள் ஷேர் செய்கிறார்கள் என்று பார்க்கும் போது, அது அவர்களின் உணர்வின் வெளிப்பாடாகத்தான் நாம் அதனைப் பார்க்க வேண்டும். வாக்கியமாகப் பார்க்கத் தேவையில்லை. இளைஞர்கள் மாற்றுச் சிந்தனை கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களின் உணர்வை நாம் ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 

 

1965ம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அப்போதைய முதல்வர் பக்தவச்சலம் பெயரைக் குறிப்பிட்டு காட்டமாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் தற்போது அதை நாங்கள் விருப்புவதில்லை. இது இளைஞர்களின் வேகம். 50 ஆண்டுகளுக்கு முன்பே அப்படி இருந்தது என்றால் தற்போது சொல்லவே வேண்டாம். இளைஞர்கள் தீயாகப் பற்றிக்கொள்வார்கள். அவ்வாறு பற்றிக்கொண்ட விளைவுதான் இன்றைக்கு இந்தியாவைத் தாண்டி செய்தி உலகம் முழுவதும் சென்று சேர்ந்திருக்கின்றது. இந்த சொற்களைத் தாண்டி உள்ளே இருக்கின்ற கோபம், மொழி உணர்வு ஆகியவற்றை நாம் விட்டுவிட்டுப் பார்க்க முடியாது. இந்தி திணிப்பு போராட்ட காலத்தில் கூட இதுதான் நடைபெற்றது. அப்புறம் தான் துப்பாக்கிச்சூடு வரைக்கும் மாநில அரசு சென்றது. எனவே உணர்வுகளை எந்த அரசாலும் கட்டுப்படுத்த முடியாது. அதையும் தாண்டி மொழி உணர்வு என்பது ஒவ்வொரு தமிழர்களுக்கும் கூடவே உள்ள ஒன்று. எனவே அதிகார பலத்தால் அதனை ஒன்றும் செய்ய முடியாது.