Skip to main content

சாக்கடை கால்வாயில் தூய்மை பணியாளர்களே நேரடியாக இறங்கி கழிவகற்றும் அவலம்! இதுதானோ 'ஸ்மார்ட் சிட்டி?!!'

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

salem district smart city project sanitary workers municipal corporation

 

முதல்வரின் சொந்த ஊரான சேலம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்டு வந்தாலும், சாக்கடை கால்வாய்களில் இன்றும் தூய்மைப் பணியாளர்களே நேரடியாக இறங்கி மனித கழிவுகளை அகற்றும் பணிகளைச் செய்யும் அவலம் தொடர்ந்து வருகிறது.

 

சேலம் மாநகராட்சி, தமிழ்நாட்டின் ஐந்தாவது பெரிய மாநகரமாக திகழ்கிறது. பொலிவுறு நகரம் எனப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சியும் சேர்க்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நவீன பேருந்து நிலையங்கள், சாலை உள்கட்டமைப்பு, பாதாள சாக்கடைத் திட்டம், நவீன வாகன நிறுத்துமிடம், சிறுவர் பூங்காக்கள், திறந்தவெளி வைஃபை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இதெல்லாம் ஒருபுறம் இருப்பினும், சாக்கடைக் கால்வாய்களில் இன்றும் தூய்மைப் பணியாளர்களே இறங்கி, அடைப்புகளை சரி செய்வதும், மனித கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்படும் அவலமும் தொடர்கிறது. பொது சாக்கடைகளில் மனிதர்களை இறக்கி, பணியில் ஈடுபடுத்துவது அப்பட்டமான சட்ட விரோதமான செயல் என்பதோடு, மனித உரிமை மீறல் குற்றமுமாகும்.

 

salem district smart city project sanitary workers municipal corporation

 

கழிவகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கான தடை மற்றும் மறுவாழ்வுச் சட்டம்- 2013ன் கீழ், மாநகராட்சி உள்பட எந்த ஒரு உள்ளாட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங்களும் கழிவகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

தவிர்க்கவே இயலாத சூழ்நிலைகளில் தூய்மைப் பணியாளர்களைப் பயன்படுத்துவதாக இருந்தால், அவர்களுக்கு 'கம்' பூட்ஸ், கையுறை, ஏப்ரன், கண்ணாடி, கிருமி நாசினி திரவம், சோப்பு உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களைக் சாக்கடை அடைப்புகளை நீக்கும் பணிகளில் ஈடுபடுத்துவதாக இருப்பின், அப்போது சம்பந்தப்பட்ட முகமைகளின் மேற்பார்வையாளர்களும் உடன் இருக்க வேண்டும் என்கிறது மேற்கண்ட சட்டம்.

 

ஆனால், சேலம் மாநகராட்சியில் தொடர்ந்து இந்த விதிகள் மீறப்பட்டு வருகின்றன. தொடரும் இந்த அவலம் குறித்து, 'பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடை கால்வாயில் இறக்கி விடப்படும் துப்புரவு தொழிலாளர்கள்!' என்ற தலைப்பில் கடந்த மார்ச் 26, 2020ம் தேதியிட்ட நக்கீரன் இணையத்தில் கட்டுரை வாயிலாக சேலம் மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

 

salem district smart city project sanitary workers municipal corporation

 

எனினும், இந்த நிலையில் இதுவரை பெரிய அளவில் மாற்றம் இல்லாததோடு, அதிகாரிகளின் அலட்சியப் போக்கும் தொடர்கிறது. சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட 14- வது கோட்டம், உடையப்ப செட்டி காலனிக்குள் நுழையும் பகுதியில், மாவட்ட மைய நூலகத்திற்கு எதிரில் உள்ள சாக்கடைக் கால்வாயில் தூய்மைப் பணியாளர் ஒருவர் நேரடியாக கால்வாயில் இறங்கி அடைப்பை சரி செய்து கொண்டிருந்ததை காண முடிந்தது. அவருக்கு உதவியாக பெண் தூய்மைப் பணியாளரும் இருந்தார்.

 

சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளரிடம் விசாரித்தபோது, அவருடைய பெயர் முனியப்பன் என்பதும், சேலத்தை அடுத்த மன்னார்பாளையத்தை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. 

 

நிரந்தர தூய்மைப் பணியாளர்கள் தவிர, மகளிர் மற்றும் ஆண்கள் சுய உதவிக்குழுக்கள் மூலமும் மாநகராட்சி நிர்வாகம் தூய்மைப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. 9,400 ரூபாய் ஊதியம் வழங்கப்படுவதாக சொல்லும் தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு காலுறை, கையுறைகள், மாஸ்க் ஆகியவை கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினர். அவர்களிடம் பேசினோம்...

 

salem district smart city project sanitary workers municipal corporation

 

''எங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம், ரப்பர் கையுறை ஒரு செட் கொடுத்திருக்கு. அதைப் போட்டுக்கொண்டு சாக்கடைக் கால்வாயில் இறங்கி வேலை செய்தாலும், ஆணி, உடைந்த கண்ணாடி துண்டுகள், பாட்டில்கள், பிளேடு, தகரங்கள் கைகளை கிழிக்கத்தான் செய்யுது. இந்த வேலைக்கு வந்த புதுசுல சாக்கடையில இறங்கினாலே கால், கைகளில் சேத்துப்புண் வந்துடும். எங்க பொழப்பு இதுதானுங்களே... இப்ப எல்லாம் பழகிப்போச்சு. சேத்துப் புண்ணெல்லாம் வர்றத்தில்ல.

 

பொம்பளைங்க எல்லாம் சமயபுரம் அம்மன் மகளிர் குழு மூலமாகவும், ஆம்பளைங்க எல்லாம் பாபா சாமி குழு மூலமாகவும் வேலைக்கு எடுத்திருக்காங்க. அந்த குழு தலைவருங்க மூலமாகத்தான் சம்பளம் கொடுக்கிறாங்க. முன்னாடிலாம் பி.எப்., அது இதுனு சம்பளத்துல பிடித்தம் செய்ததுபோக கைக்கு 8,500 ரூபாய் வரும். இப்ப, அதுக்கெல்லாம் பிடிக்கிறாங்களானு தெரியல... 9400 ரூபாய் கொடுக்கிறாங்க. வேலைக்கு வந்தாததான் சம்பளம். வேலைக்கு வராத நாள்களுக்கு சம்பளத்துல புடிச்சுக்குவாங்க,'' என்றனர் தூய்மைப் பணியாளர்கள்.

 

காலுறை, கையுறைகள் வழங்கப்பட்டாலும்கூட பல நேரங்களில் தூய்மைப் பணியாளர்கள் அணிய மறுக்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதேநேரம், அவர்களுக்கு சீரான கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்பதில் இருந்தும் மாநகராட்சி நிர்வாகம் இடறியிருக்கிறது.

 

இது தொடர்பாக சேலம் மாநகராட்சி சுகாதார அலுவலர் ஒருவரிடம் பேசினோம். ''சேலம் மாநகராட்சியில் சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்வதற்கென ரோபோ இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இரண்டு அடி அகலமுள்ள கால்வாய்களைச் சுத்தப்படுத்த, 60 கோட்டங்களுக்கும் சேர்த்து நான்கு குட்டி ரோபோ இயந்திரங்கள் இருக்கின்றன. என்றாலும், மிகக்குறுகலான இடங்களில் அடைப்புகளைச் சரி செய்ய சில நேரங்களில் தூய்மைப் பணியாளர்களை பயன்படுத்த நேரிடுகிறது. அப்படி பயன்படுத்துவதும் தவறுதான்.

 

நீங்கள் குறிப்பிடும் அந்த இடத்தில், சாக்கடை கால்வாய் வழியாக பிஎஸ்என்எல் நிறுவனத்தன் ஆப்டிகல் பைபர் கேபிள் வயர்கள் செல்கின்றன. குடிநீர் குழாய் இணைப்புகளும் உள்ளன. அதனால் அங்கே அடைப்புகளை ரோபோ இயந்திரங்கள் கொண்டு சரி செய்வதிலும் நடைமுறை சிக்கல் இருக்கிறது,'' என்றார்.

 

மஹராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்கள், பொது சாக்கடைகளைச் சுத்தப்படுத்தும் பணிகளில் ரோபோக்களை பயன்படுத்தும் தொழில்நுட்பத்திற்கு முழுமையாக மாறிவிட்டன. இவ்விவகாரத்தில் தமிழகம் இன்னும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறது.

 

துப்புரவுத் தொழிலாளர்கள் இனி, தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என தமிழக அரசு பெயர் மாற்றம் செய்திருக்கிறது. பெயர்தான் மாறியிருக்கிறதே தவிர, அவர்கள் பணி நேரத்தில் எதிர்கொள்ளும் சிரமங்களும், நடைமுறைச் சவால்களும் மாறவில்லை. ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் நாகேஷ், 'நாய்க்கு பேரு வெச்சியே சோறு வெச்சியா?' எனக் கேட்பார். அதுபோல, தூய்மைப் பணியாளர்கள் என பெயர் மாற்றம் மட்டும் செய்தால் போதுமா? என தமிழக அரசும் சிந்திக்க வேண்டும்.

 

ஒருபக்கம், நிலவுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பும் தொழில்நுட்பத்தில் முன்னேறி கொண்டிருக்கிறோம். ஆனால் மற்றொருபுறம்,'ஸ்மார்ட் சிட்டி' என்ற பெயரில், இப்போதும் மனிதர்களைக் கொண்டே சாக்கடைக் கால்வாய்களை சுத்தப்படுத்தி கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு கரோனா நிவாரணமாக 5 கிலோ அரிசியும், பருப்பும் வழங்கியதோடு மறுவாழ்வு கிடைத்துவிட்டதாக கருதி விட்டதா சேலம் மாநகராட்சி?