'பிரபஞ்சத்தைக் கடவுள் படைக்கவில்லை. இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டு அது சுயமாக உருவானது' இப்படி ஒரு கந்தகக் கருத்தை உதிர்த்து மானுடத்தின் புருவத்தையே திடுக்கிட வைத்த இயற்பியல் அரசன் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்.
ஹாக்கிங் - ஜேன்
வானியல் விஞ்ஞானி கலிலியோ இறந்து 300வது ஆண்டான 1942, ஜனவரி 8ஆம் தேதி இங்கிலாந்து ஆக்ஸ்போர்டில் டாக்டர்.பிராங்க் மற்றும் இசோபல் தம்பதிக்குப் பிறந்தார் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங். ஸ்டீபன் 1950 முதல் 1953 வரை செயின்ட் அல்போன்ஸ் பள்ளியிலும் உயர் கல்வியை ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழங்களிலும் படித்தார். பள்ளிக் காலங்களில் இவர் அந்த அளவு நுட்பம் கொண்டவர் கிடையாது. விளையாட்டுகளில் தனித்து நின்று வேடிக்கை பார்ப்பார், ஆனால் நகைச்சுவை பண்பாளர்.
தனது 21வது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் படிக்கட்டுகளில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டது தொடர் பரிசோதனையில், நரம்புகளின் குறைப்பாட்டால் தசைகள் ஊட்டம் பெறாமல் உடல் குறைவுறும் நோயான 'அமையோட்ரோபிக் லேட்டரால் ஸ்க்லரோசிஸ் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். மோட்டார் நியூரான் என்னும் இந்நோய் குழந்தைகளையும், இளம் வயதினரையும் இலக்காக வைத்து தாக்கும் தன்மை கொண்டது. மூளையில் உள்ள நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மெல்ல மெல்ல உடலுறுப்புகளை செயலிழக்கச் செய்யும் தன்மை வாய்ந்தது. நரம்பு வழி மற்றும் உடலியக்கச் செயல்திறன் நாளடைவில் குறைந்து இறுதியில் செய்திகள் அனுப்பும் ஆற்றலை மூளை இழந்துவிடுகிறது. எனினும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை சிந்தித்திடும் ஆற்றல் பழுதடைவது இல்லை. இந்நோய்த் தொற்றின் பிறகு ஹாக்கிங் வாழ்க்கை சக்கர நாற்காலியின் தயவில் சுழன்றாலும், இவருக்கான ஆய்வு உலகம் விரிந்துகொண்டே வந்தது. தன்னம்பிக்கையின் பற்றுதலைக் கைவிடாதவர் ஹாக்கிங். நோய்க்கே விருந்தோம்பல் வைத்து வெளியனுப்பும் வகையில் இயற்பியல், குவாண்டம், கருந்துளை ஆராய்ச்சிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
ஹாக்கிங் - எலைன்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மொழியியல் மாணவியான ஜேன் வைல்ட் என்பவரை 1965ல் திருமணம் செய்துகொண்டார். இவரது நோயின் சுமைதாங்காமல் ஜேன், ஹாக்கிங்கிடமிருந்து பிரிந்தார். அதன் பிறகு தனக்கு பணிவிடை செய்ய வந்த செவிலியர் எலைன் மேசனை மணந்தார். லூசி, ராபர்ட், டிம் என்று மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதன் பின் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு, மூச்சுக்குழல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்கு பின், தன் பேச்சுத்திறனையும் இழந்தார் ஸ்டீபன் ஹாக்கிங். அதன் பின் கணினி மூலம் பேசத்தொடங்கினார். ஆம் அவர் பேச நினைப்பதை அந்த கணினி மூலம் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த கணினியை டேவிட் மேசன் என்பவர் உருவாக்கினார். இதன் மூலம் ஹாக்கிங் பல அறிவியல் கட்டுரைகள் மற்றும் உரையாடல்கள் நிகழ்த்தினார்.
2007 -2008 ஆம் ஆண்டுகளில் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்திலும், ஆப்பிரிக்காவிலும் ஹாக்கிங்க்கு சிலைகள் வைக்கப்பட்டன. ஹாக்கிங் இந்த மனித இனத்தை தன் அறிவாலும் அறிவியலாலும் பாதுகாத்து வந்தார். அந்த வகையில், 'எங்கே தண்ணீர் இருக்கிறதோ அங்கே உயிர்கள் இருக்கும்', மனிதனை விட அறிவில் சிறந்த உயிரினம் எப்போதாவது வரக்கூடும் என்றெல்லாம் கூறி எச்சரித்தும் தனது தொலைநோக்கு பார்வையை அகலப்படுத்தியும் வந்தார்.
எடிங்க்டன் பதக்கம், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பதக்கம், உலக இயற்பியல் விருது என பல விருதுகளை ஹாக்கிங்கிற்கு வழங்கி, விஞ்ஞான பூமி தம்மை பெருமைப்படுத்திக்கொண்டது. ரோம் நாட்டில் கிறிஸ்துவ தலைமை சபையின் சார்பில் 'கடவுளும் பிரபஞ்சமும்' என்கின்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் ஸ்டீபன் கலந்துகொண்டார். உலக கத்தோலிக்க மதத்தலைவர் போப்பும் இதில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் மதத்தலைவர்களும், விஞ்ஞானிகளும் தலைகுனிந்து வாழ்த்து பெற்றனர். ஆனால் போப் ஹாக்கிங்கிடம் வந்து அவர் நெற்றியில் கை வைத்து ஆசிர்வதித்தார். ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கை வரலாற்றை அறிவியல் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ 'தன்னம்பிக்கையின் நாயகன் ஸ்டீபன் ஹாக்கிங்' என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார். இந்நூலை மங்கை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
'நான் மரணத்திற்கு அவசரப்படவில்லை' என்ற ஸ்டீபன் தனது நெடுநாள் கனவாக இருந்த விண்வெளி ஆய்வுக்குச் செல்லவேண்டும் என்ற ஆசையையும் மரணத்தின் சிறகுகளால் தற்போது நிறைவேற்றிக் கொண்டார்.