மோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்காது: வானதி சீனிவாசன் பேட்டி
நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளின் தேவை இருக்காது என்று தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கூறியிருக்கிறார்.
நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:-
எல்லாப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். யோகா என்பது வெறும் உடற்பயிற்சியாக மட்டும் அல்லாமல், அதில் இந்து மத சம்பிரதாயங்கள் சடங்குகள், ஓம் உள்பட இடம்பெறும் நிலையில் ஒரு மதசார்பற்ற அரசின் சார்பில் யோகாவை கட்டயமாக்குவது சரியல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியிருக்கிறரே?
இன்று உலக நாடுகள் மத்தியில் நமது இந்திய நாட்டைச் சார்ந்த யோகா கலை பிரபலமாகிக்கொண்டு வருகிறது. சர்வதேச ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டு, ஜூன் 21 உலகம் முழுக்க கொண்டாடப்படும் வேலையில் யோகா எப்படி அறிவியல் ரீதியாக ஒரு மனிதனுக்கு நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்ட இந்த சூழலில், யோகாவை எதிர்த்து ஏதோ ஒரு குறிப்பிட்ட மதத்தை புகுத்துவதைப்போல உள்ளது என கி.வீரமணி அவர்கள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
யோகா மூலம் இந்து மதத்தை புகுத்த வேண்டிய அவசியம் இல்லை. யோகா என்பது இந்து மதத்தை கடந்த ஒரு சர்வதேச அளவிலான உடலுக்கும், மனதிற்கும் நன்மை பயக்கும் பயிற்சியாக மாறிக்கொண்டிருக்கிறது.
மத்திய அரசை குளிர செய்யும் வகையில் யோகாவை கட்டமாயமாக்கி திணிப்பது பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என்று கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் கூறுகிறார்களே?
எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் மத்திய அரசை குற்றம் சாட்டுவதா?. தூய்மை இந்தியா என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. தமிழகத்தில் கூட தூய்மை பிரச்சார வாகனம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்திய நாடு தூய்மையாக இருக்க வேண்டும். சுற்றுப்புரத்தை தூய்மையாக வைப்பதுதான் முதல் சேவை என பிரதமர் கூறுவதை அவர்கள் தவறு என்று கூறுகிறார்களா?. நாங்கள் குப்பை போடுவோம், எல்லா இடத்தையும் அசுத்தமாக வைத்திருப்பதுதான் தங்கள் நோக்கம் என்று அவர்கள் கூறுகிறார்களா?. எது எதற்குத்தான் மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்று இல்லையா. எல்லாவற்றுக்கும் மத்திய அரசை எதிர்க்க வேண்டுமா.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மாநில சுயாட்சி மாநாட்டில், மோடி அடுத்த முறை பிரதமரானால் மாநில கட்சிகளே இல்லை என்ற நிலைமையை உருவாக்குவார் என திருமாவளவன் பேசியிருக்கிறாரே?
கட்டாயமாக. உண்மை. நூறு சதவீதம் திருமாவளவனோடு நான் உடன்படுகிறேன். மோடி அடுத்த முறை பிரதமரானால் மாநில கட்சிகளுடைய தேவையே மக்களுக்கு இருக்காது. ஏனென்றால் மாநிலத்தினுடைய வளர்ச்சி, மாநிலங்களுடைய பன்முகத்தன்மை, இவற்றையெல்லாம் காப்பாற்றுகின்ற மிகப்பெரிய ஒரு தலைவராக அவர் இருப்பார். அந்த இடத்தில் மாநில கட்சிகளின் தேவை இல்லை.
அதே மாநாட்டில் மாநில முதல் அமைச்சர்கள் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்று மோடி கருதுகிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?
அந்தக் கட்சியில் அவருக்கு அத்தனை பேரும் தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அந்த ஆசையை அவர் வேறு விதமாக மோடியை வைத்து சொல்கிறார்.
முதல்வராகும் ஆசை தனக்கும் உண்டு என்று கமல் கூறுகிறார். போர் எப்போது வந்தாலும் தயாராக இருக்க வேண்டும் என தனது ரசிகர்களிடம் ரஜினி கூறுகிறார். இவர்களின் அரசியல் பேச்சு பின்னணியில் பாஜக இருப்பதாக பேசப்படுகிறதே?
தமிழகத்தில் எது நடந்தாலும் அதற்கு பாஜக பின்னணி, பாஜக ஆதரவு, பாஜக எதிர்ப்பு என்று பாஜகவை முன்னிலைப்படுத்துகின்ற அரசியல் இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆக இன்று தமிழகத்தில் நடக்கக் கூடிய அத்தனை விசயங்களுக்கும் பாஜக வளர்ந்து வந்து, அந்த செயல்களையெல்லாம் செய்யக்கூடிய இடத்தில் நாங்கள் வந்திருக்கிறோம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளட்டும்.
அரசியலுக்கு வருவது என்பதை பொறுத்தவரை அவர்களுடைய விருப்பம். அவர்களை ஏற்றுக்கொள்வதும், கொள்ளாததும், ஆதரவு கொடுப்பதும் மக்களுடைய விருப்பம். அரசியல் கட்சி ஆரம்பித்து யார் வேண்டுமானாலும் முதல்வராக வர ஆசைப்படலாம், கனவு காணலாம். ஆனால் மக்களுடைய அங்கீகாரத்தை பெறுவதற்கு அவர்களிடம் இருக்கக் கூடிய நேர்மையும், உழைப்பும், சமுதாய அர்ப்பணிப்பும் முக்கியம். அதை வளர்த்துக்கொண்டால் நல்லது. அப்படி இல்லாவிட்டால் கனவு கனவாகவே இருக்கும்.
-வே.ராஜவேல்