இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று காலை சிகிச்சை பலனிற்றி காலமானார். அவருக்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை தலைவருமான ஸ்டாலின் குணசேகரன், தா.பாண்டியனுடனான தனது 50 வருட நினைவுகளை நக்கீரன் இணையத்துடன் பகிர்ந்துகொண்டார்.
ஸ்டாலின் குணசேகரன் கூறியதாவது; “நான் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த காலத்தில், ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் எனும் ஊரிலிருந்த பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் தா.பாண்டியன் பேசினார். அப்போது அதனைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஈரோடு மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிய 10 நபர்களில் என் தந்தையும் ஒருவர். 1952ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர், 17 வயதில் தீவிரமாகப் பணியாற்றினார். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பாடத் திட்டங்களோடு சேர்ந்து மற்றவையும் படிக்க வேண்டும் என என்னிடத்தில் முதன்முதலில் சொன்னவர் என் தந்தை. அவர் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். ஆனால், அவர் இருந்த இயக்கத்தில், பெரிய சான்றோர்கள், அரசியல் மேதைகள் பலர் இருந்தனர். அவர்கள் பேச்சை எல்லாம் அடுத்த தலைமுறையினரும் கேட்க வேண்டும் எனும் விருப்பம் என் தந்தைக்கு இருந்தது. அதன் அடிப்படையில், அவர் சென்ற கூட்டத்திற்கு என்னையும் அழைத்துச் சென்றார். நானும் விளையாட்டாக அந்த உரையைக் கேட்கத் துவங்கினேன். தா.பாண்டியன், ஒன்றரை மணி நேரம் அந்த உரையை நிகழ்த்தியிருப்பார். என்னையும் மறந்து அந்த உரையை ரசித்துக் கேட்டிருக்கிறேன் என்பது இப்போது என்னால் உணரமுடிகிறது.
அதன் பிறகு எனது 10வது வயதிலேயே அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் எனும் ஒரு அமைப்பில் இணைந்தேன். அதன் பிறகு மாணவர் மன்ற மாநாடுகளில் இவரது உரையைக் கேட்க முடிந்தது. சிக்க நாயக்கர் கல்லூரியில் நான் பி.யு.சி. படித்துகொண்டிருந்த காலத்தில், முதன் முதலாக அவரை எங்கள் கல்லூரிக்கு அழைத்தோம். அதற்கு எங்கள் கல்லூரி முதல்வர் ஒப்புக்கொள்ளவில்லை. அவரிடம் தயவுபண்ணி கேட்டு அவரை அழைத்துவந்தோம். அதன் பிறகு தொடர்ந்து நான்கு ஆண்டுகாலம் நாங்கள் அங்கு படிக்கும்வரை அவரை அங்கு அழைத்தோம். அதன்பிறகு நான் வெளியேவந்த பிறகு ஆறு ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக தா.பாண்டியன் கலந்துகொண்டது எங்கள் கல்லூரியில் மட்டும்தான் என நான் கருதுகிறேன்.
கடைசி ஆண்டு அந்த கல்லூரியின் முதல்வர் அனந்த பத்மநாப நாடார், “நான் இந்த ஆண்டு பணி நிறைவு பெறுகிறேன். ஆனால், தா.பாண்டியன் இந்த கல்லூரிக்கு வந்து உரை நிகழ்த்துவதில் ஓய்வென்பது இருக்கக்கூடாது. அடுத்தடுத்து ஆண்டுகளிலேயே இவர்வந்து பங்கேற்க வேண்டும். இவர் நமது கல்லூரியின் சிறப்பு விருந்தினர் மட்டுமல்ல, கல்லூரிக்கு வருகைதரும் பேராசிரியரும் கூட” என அவர் குறிப்பிட்டது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அந்த ஆறு ஆண்டுகாலம் அவர் சிறப்புரை, நான் வாழ்த்துரை எனப் பேசுவோம். ஈரோடு புத்தகத் திருவிழாவுக்குக்கூட இரண்டு முறை அவரை அழைத்தோம் கிட்டத்தட்ட 10,000 நபர்களுக்கு முன்னால், ‘கல்லும் கதை சொல்லும்’ என்ற தலைப்பில் சிற்பக் கலை பற்றி ஒன்னேகால் மணி நேரம் அவர் ஆற்றிய உரையை, நியூ சென்ச்சுரி’ நிறுவனம் ஒரு புத்தகமாகக் கூட வெளியிட்டிருக்கிறார்கள்.
அதேபோல் எழுத்து என்றால், அவருக்கு நிகர் அவர்தான் என நான் எண்ணிப்பார்க்கிறேன். அவர் எழுத்தை அவர் பிழைதிருத்தி நான் பார்த்ததில்லை. அடித்து எழுதி நான் பார்த்ததில்லை. அவரை பார்த்து 50 ஆண்டுகாலம் ஆகியிருந்தாலும், அவருடன் நெருக்கமாக 40 ஆண்டுகாலம் தொடர்ந்து இருந்திருக்கிறேன். அவர் பல கட்டுரைகளை எழுதும்போது அவரின் அருகிலிருந்திருக்கிறேன். அவர், படபடவென அடுத்தடுத்த பக்கங்களில் எழுதிவிட்டு இறுதிப் பக்கத்தில் ஒரு கோட்டைப் போட்டுவிட்டு பக்கத்தில் இருப்பவர்களிடம் கொடுத்துவிடுவார். அதன்பிறகு அதனை 'ஜனசக்தி'யில்தான் பார்க்க முடியும். கவித்துவத்துடன் அந்த கட்டுரை அமைந்திருக்கும். 'நா', 'பேனா' இரண்டும் விளையாடும் என்பார்களே அதுபோல பேச்சாளராக, மிகப் பெரிய எழுத்தாளராக, மிகப் பெரிய சிந்தனையாளராக, மிகப் பெரிய கட்டுரையாளராக, ஏராளமான தொழிற்சங்களின் தலைவராக இவர் திகழ்ந்ததைப் பக்கத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு கடந்த 40 ஆண்டுகாலமாக எனக்குக் கிடைத்தது.
இலங்கை தமிழர்களுக்காக அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் என்ற முறையிலே அவர் அறிவித்த உண்ணாவிரதப் போராட்டம் தமிழகத்திலே மாபெரும் மாறுதலை ஏற்படுத்தியது. ஏனென்றால் அந்தப் போராட்டத்திற்கு 500 பேர்தான் வருவார்கள் என எண்ணி பந்தல் போட்டிருந்தோம். ஆனால், கிட்டத்தட்ட 7,000 பேர் பங்கேற்றனர். காலை முதல் மாலை வரை பந்தல் விரிவு படுத்தும் வேலையே நடந்தது. அந்த அளவிற்கு மக்களின் நாடிப்பிடித்து மக்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதி இடைவிடாமல் பாடுபட்ட அந்த இதயம் இப்போது ஓய்வு பெற்றிருக்கிறது.
நான் அருகிலிருந்து பார்த்த காரணத்தினால் சொல்லுகிறேன், சித்தாந்தத் தெளிவும் ஆங்கிலத்தில் பெரும் புலமையும் பெற்றவர். அவரின் தந்தை அந்த காலத்தில் தலைமை ஆசிரியர். தாய் துணை ஆசிரியர். இவரது மூத்த சகோதரர் தா.செல்லப்பா, தமிழகத்தின் தலை சிறந்த பொருளாதார பேராசிரியர்களில் ஒருவர். இவரது இளைய சகோதரர் தா.பொன்னிவளவன் இந்நேரம் உயிரோடு இருந்திருந்தால், தா.பாண்டியனுக்கு நிகராக தமிழகத்தில் பேசப்பட்டிருப்பார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவர் பேரவை தலைவராகப் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்.
ஒரு கதாநாயகனைப் போல் கல்லூரியிலிருந்தவர் தா.பாண்டியன். பிறகு அதே கல்லூரியிலே துணைப் பேராசிரியராக நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர். அதன்பிறகு கல்லூரி பேராசிரியர் வேலை வேண்டாம் என்று ஒதுக்கிவைத்துவிட்டு கட்சியின் முழுநேர ஊழியராகப் பல்லாண்டுகாலம் செயல்பட்டவர். அநேகமாக, அவர் தமிழகத்தில் செல்லாத கிராமம் இல்லை. தமிழகத்தில் ஜீவாவுக்குப் பிறகு மக்களால் மதிக்கப்பட்ட பொதுவுடைமை இயக்கத்தின் பெரும் தலைவர் தா.பாண்டியன். அதனால்தான் அவரை அப்போதே 'இளைய ஜீவா' என அழைத்தார்கள். 1960 தொடக்கத்தில், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ எனும் அமைப்பை, ஜீவா பிரகடனப்படுத்தியபோது, அதன் பொதுச் செயலாளராக தா.பாண்டியனைத்தான் தேர்வுசெய்தார். ஜீவாவால் தேர்வு செய்யப்பட்ட 'இளைய ஜீவா' தா.பாண்டியன் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை” என்று தெரிவித்தார்.