Skip to main content

‘ஜவாஹிருல்லா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்’ -  மனிதநேய மக்கள் கட்சி

Published on 14/03/2025 | Edited on 14/03/2025

 

 will appeal to the Supreme Court in the Jawahirullah case

மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  ஜவாஹிருல்லா வழக்கின் தீர்ப்பை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம் என்று அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வழக்கறிஞர் மு.ஜைனுல் ஆபிதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள அறிக்கையில், “கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் 30 தேதி கோவையில் முஸ்லிம்களுக்கெதிராக சங் பரிவார கும்பல்களும், காவல்துறையின் ஒரு பிரிவினரும் இணைந்து நடத்திய தொடர் கலவரம், கொள்ளை, துப்பாக்கி சூட்டில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதோடு கோடிக்கணக்கான சொத்துகள் சூறையாடப்பட்டன. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்காததையடுத்து சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள் சிலரால் கோவை முஸ்லிம் நிவாரண நிதி {Kovai Muslim Relief Fund, (CMRF) } என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கப்பட்டு பொது மக்களிடம் நிதி திரட்டப்பட்டு கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கும் நிதி வழங்கப்பட்டது. இந்த நிவாரண நிதிக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழக சொந்தங்களும் பண உதவியை அளித்திருந்தனர்.

இந்த மனிதாபிமான உதவிகள் கோவை மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்தது. இதை பொறுக்காத அன்றைய வாஜ்பேயி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு வெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றதாகவும், வருமான வரித்துறையை ஏமாற்றியதாகவும் இரண்டு வழக்குகளை தொடுத்தது. முதல் வழக்கு சிபிஐயால் விசாரிக்கப்பட்டது, இரண்டாவது வழக்கு வருமான வரித்துறை(Income Tax)யால் விசாரிக்கப்பட்டது. 

சிபிஐ இந்த வழக்குக்கு சற்றும் தொடர்பில்லாத தமுமுக தலைவர்கள் பேரா.ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி ஆகியோரை வழக்கில் சேர்த்தது. நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தமுமுக கடும் எதிர்ப்பு பிரச்சாரம் செய்ததே இதற்கு காரணம் என கருதப்படுகிறது. தமுமுக தலைவர்களை வழக்கில் சேர்த்ததற்கு கோவை நிவாரண நிதி அலுவலகம் தமுமுக வளாகத்தில் செயல்பட அனுமதித்ததாக காரணம் கூறப்பட்டது. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் என மனித உரிமை ஆர்வலர்களால் கண்டிக்கப்பட்டது. இவ்வழக்கு சென்னை எழும்பூர் மெட்ரோபாலிட்டன் (ACMM) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வருமான வரி வழக்கை விசாரித்த வருமான வரித்துறை அதிகாரிகள் கோவைக்கு நேரில் சென்று நிவாரண நிதி பெற்ற அனைவரையும் விசாரித்து இந்த நிதியில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அனைத்து நிதிகளும் முறையாக வழங்கப்பட்டு கணக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து வருமான வரித்துறை தீர்பாணையம் தமுமுக மீதான குற்றச்சாட்டை கடந்த 2003 ல் தள்ளுபடி செய்தது.

சிபிஐ வழக்கில் கடந்த செப்டம்பர் 30,2011 அன்று மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் கோவை நிவாரண அறக்கட்டளையின் நிர்வாக உறுப்பினர்கள் மூவருக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும் வழங்கியது. இதில் நிசார் அஹ்மது அவர்கள் 2018 ல் இறந்து விட்டார். இந்த வழக்கில் அந்நிய நாடுகளின் நிதியோ, அந்நிய நாட்டவர்களின் நிதியோ ஏதும் பெறப்படவில்லை என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.எனினும் இடைக்கால பிணை வழங்கியது.

இதையடுத்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் (Addl.CBI Special Court) விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் தமுமுக சார்பாக மூத்த வழக்கறிஞர்கள்  பி.குமார் மற்றும் வி ராகவாச்சாரி ஆகியோர் ஆஜராகி சிறப்பான வாதங்களை எடுத்து வைத்தனர். நன்கொடை அளித்தவர்கள் அனைவரும் வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்கள். எனவே வெளிநாட்டு நிதி ஒழுங்காற்று சட்டம் (FCRA) மீறப்படவில்லை என வலுவாக வாதித்தனர்.  இவ்வழக்கில் கடந்த 16.6.2017 வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சிபிஐ நீதிமன்றம் உறுதி செய்தது.

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இன்று 14-03-2025 நீதிபதி வேல்முருகன் அளித்த தீர்ப்பில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ய ஒரு மாத அவகாசம் அளித்தும் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கை உச்ச்நீதிமன்றத்தில் மனிதநேய மக்கள் கட்சி சட்ட ரீதியாக எதிர் கொள்ளும். உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் நீதியை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்