பொய் சொன்ன சீனிவாசன் பதவியில் நீடிக்கலாமா? சி.ஆர்.சரஸ்வதி பேட்டி
பதவிப் பிரமாணம் செய்ததற்கு மாறாக பொய் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அம்மாவைப் பார்த்ததாக பிள்ளை மேல் சத்தியம் செய்த சீனிவாசன் இப்போது இப்படி பேசுகிறார் என்று டி.டி.வி. தினகரன் அணியின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறுகிறார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை சந்தித்து பேசியதாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் சொன்னது பொய் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை பழங்காநத்தத்தில் 22.09.2017 வெள்ளிக்கிழமை இரவு நடந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த டி.டி.வி. தினகரன் அணியின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி,

பிள்ளைகள் மீது சத்தியம் செய்தார்
கடந்த 11.03.2017 அன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இதே திண்டுக்கல் சீனிவாசன், ''அம்மா மருத்துவமனையில் இருக்கும்போது நான், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு, உதயக்குமார் எல்லோரும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் அறிவித்தவுடனேயே போய் பார்த்தோம். அம்மாவுக்கு ட்ரிப்ஸ் ஏறிக்கிட்டு இருந்தது. படுத்திருந்தாங்க. எங்களுக்கு கண்ணு கலங்குச்சு, கவலைப்படாதீங்க சீனிவாசன் என சொன்னாங்க. ஆசிர்வாதம் பண்ணுனாங்க, போய் வெற்றியோடு திரும்பி வாங்கன்னு சொன்னாங்க. போட்டோ எடுத்துகிட்டுமான்னு கேட்டோம். இந்த மாதிரி நிலைமையில எப்படி போட்டோ எடுத்துக்கிறதுன்னு சொன்னாங்க. அதுவும் நியாயம்தானே, மருத்துவமனையில ட்ரிப்ஸ் ஏறிக்கிட்டு இருக்கும்போது எப்படி போட்டோ எடுக்க முடியும். இதெல்லாம் பன்னீர்செல்வத்துக்கு தெரியாதா. அம்மாவின் ரத்தத்தை உறிஞ்சு குடித்த பன்னீர்செல்வம் பேசுவது பொய்'' என்று சொன்னவர், ''என் பிள்ளைகள் மேல் சத்தியமாக அம்மாவை பார்த்ததாக'' சொன்னவர் இதே மாண்புமிகு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
இல்லாததை சொல்ல முடியாது. இன்று எல்லாவற்றுக்கும் சாட்சி இருக்கிறது. பதிவு இருக்கிறது. விஞ்ஞான காலத்தில் இருக்கிறோம். அவர் அன்னைக்கு பேசிய பதிவு அப்படியேதான் இருக்கு. ஒரு அமைச்சர் மாறி மாறி பேசுவது எந்த வகையில் நியாயம்.
எந்த சூழ்நிலையிலும் ஒரு அமைச்சர் பொய் சொல்லக் கூடாது. ஒரு வருடமாக மன்னிப்பு கேட்காமல் என்ன செய்தார். அம்மா இறந்த ஒரு வருடமாக பன்னீர்செல்வம் சொல்வதெல்லாம் பொய் என்றவர், நாங்க அம்மாவை பார்த்தோம், நல்லா இருந்தாங்க என்றவர், இப்ப என்ன திடீன்னு மாறி பேசுகிறார். தன் பதவியை காப்பாற்றிக்கொள்வதற்காக எந்த லெவலுக்கும் பேச தயாராகிவிட்டார்கள். மனசாட்சியை தூக்கி வேற இடத்தில் வைத்துவிட்டார்கள்.
டெல்லிதான் தமிழகம் வரும்

லண்டன் டாக்டர் ரிச்சர்டு வந்த பின்பு யாரையும் அனுமதிக்கவில்லை. நோய் தொற்று ஏற்படும் என்பதால் டாக்டர்களை தவிர யாருக்கும் அனுமதியில்லை என்றார். எல்லோருமே அம்மாவுக்கு சிகிச்சை அளித்த அந்த வார்டிலேயேதான் இருந்துட்டு வந்தோம். எல்லா டாக்டர்களும் அம்மா நல்லாயிட்டு வராங்கன்னு சொன்னாங்க. அமைச்சர் விஜயபாஸ்கரும் அம்மா நல்லாயிட்டு வராங்கன்னு சொன்னார். அப்பல்லோ மருத்துவமனை என்னென்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சொன்னாங்க. மருத்துவ சிகிச்சையில் எந்த ஒளிவும் மறைவும் கிடையாது.
சிபிஐ விசாரணை நடத்துங்கள்
சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப பதவிக்காக மாறி மாறி பேசுபவர்களை என்ன சொல்வது. இதுவரை அதிமுக டெல்லிக்கு போனதில்லை. அதிமுகவை டெல்லிதான் வந்து பார்க்கும். ஆனால் இப்போது அதிமுக மந்திரிகள் நினைத்தால் டெல்லிக்கு செல்கிறார்கள். நாளைக்கே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லுங்கள், அம்மாவுக்கு கொடுத்த சிகிச்சை விவரங்களை கேட்டு பெறுங்கள்.
இவர்கள் ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து விசாரணை நடத்துவோம் என்கிறார்கள். டிடிவி தினகரன் சொன்னதுபோல், சிபிஐ விசாரணை நடத்துங்கள். அப்போதுதான் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். சிபிஐ விசாரணை வைக்கட்டும். சிபிஐ விசாரணையில் எல்லா தெளிவுகளும் பெறப்படும். உண்மைகள் விளக்கப்படும். அப்போது இந்த மந்திரிகளெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும்.
-வே.ராஜவேல்