Skip to main content

“பாஜக வேல் யாத்திரை செய்து நாம் தமிழர் கட்சியை வளர்க்கிறது” -சீமான் கிண்டல்!

Published on 21/11/2020 | Edited on 21/11/2020
jkl

 

 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடப்பு அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் பதில்கள் வருமாறு, "ஏழு பேர் விடுதலை தொடர்பாக பல்வேறு அழுத்தங்களை நாம் இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து கொடுத்து வந்தோம். அதன் ஒரு கட்டமாக தற்போது அதற்கான கால சூழ்நிலைகள் கனிந்து வருகின்றன. ஆனால் இதிலும் மத்திய அரசு சித்து விளையாட்டை விளையாட முனைகிறது. ஆளுநர் தேவையின்றி காலம் கடத்துகிறார். உச்சநீதிமன்றம் தெளிவாக கூறிவிட்டது. தமிழக அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்யலாம் என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டது. 

 

ஆனால் ஆளுநர் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து வருகிறார். தற்போது பாஜக தோவையில்லாத விளையாட்டை விடையாடி வருகிறது. அயோத்தியில் ராமரை எப்படி தொட்டு விளையாடினார்களோ, கேரளாவில் எப்படி ஐயப்பனை தொட்டி ஆட்டம் காட்டினார்களோ அதேபோல் இங்கே வேலை தொட்டு பார்க்கிறார்கள். அவர்கள் வேலை இப்போதுதான் தொடுகிறார்கள். அவர்கள் கட்சி ஆரம்பித்து எத்தனை ஆண்டுகாலம் ஆகிறது. ஆனால் தற்போதுதான் வேல் ஞாபகத்துக்கு வருகிறதா? நான் இவர்களுக்கு முன்பே வேலை கையில் எடுத்தவன். எனவே இவர்கள் வேல் யாத்திரை செய்வது என்பது என்னை வளர்ப்பது போலத்தான். பாஜக வேலை தூக்கிக்கொண்டு சென்று நாம் தமிழர் கட்சியை மக்கள் மனதில் விதைக்கின்றது. 

 

சினிமாவில் டூப் போடுவார்கள். நான் ஒரு கதாநாயன் என்றால், எனக்கு பதில் மற்றொருவர் டூப் போட்டு நடிப்பார்கள். அவர்கள் என்ன கஷ்டப்பட்டு நடித்தாலும் கைத்தட்டு எனக்குத்தான் கிடைக்கும். அதை போல இவர்கள் வேல் எடுத்துக்கொண்டு என்ன குட்டிகரணம் போட்டாலும் அதன் முழு பலனும் எங்களுக்குத்தான் வரும். எங்களை தான் மக்கள் மன்றத்தில் அவர்கள் நினைவுப்படுத்தி வருகிறார்கள். எனவே தேவையில்லாத ஆணியை பாஜக பிடுங்கி வருகிறது. எனவே அது மக்கள் மன்றத்தில் அவர்களுக்கு எதிரான மனநிலையையே ஏற்படுத்தும் என்பது மட்டும் நிஜம். நான் என்ன பேசி வந்தேனோ அதையே தற்போது பாஜகவினர் பேசி வருகிறார்கள். ஆடு மாடு வளர்க்க வேண்டும், இயற்கை விவசாயம் என்கிறார்கள்.

 

இதை நான் இன்றைக்கு நேற்றைக்கா பேசி வருகிறேன். பத்து ஆண்டுகளாக தொண்டை தண்ணி போகுமளவுக்கு தொடர்ந்து பேசி வருகிறேன். இவர்கள் இன்றைக்கு வந்துவிட்டு அதைப்பற்றி பேசுகிறார்கள். நான் சில ஆண்டுகளுக்கு முன்பு பேசியபோது கேலி செய்து சிரித்தார்கள். தற்போது ஆட்டை தூக்கிக்கொண்டு தோளில் போட்டுக்கொண்டும் படம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு கொள்கை கோட்பாடு என எதுவும் இல்லை. இந்த தமிழ்நாடு என்ற கோட்டைக்குள் அவர்கள் நுழைய பல்வேறு சித்து விளையாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த ஆட்டு விளையாட்டை மேற்கொள்கிறார்கள். இதற்கெல்லாம் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். அவரக்களுக்கு தோல்வி ஒன்றே பரிசாக கிடைக்கும்" என்றார்.