Skip to main content

இருவிரல் பரிசோதனை; ஆளுநரின் கருத்தும் உண்மை நிலவரமும்!!

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

Chidhambaram child marriage issue

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அதற்கு முன்பும் பத்து வயது கூட நிரம்பாத சிறுமிகள் வயதில் மூத்த ஆண்களுக்கு மணமுடிக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். இப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல்லாயிரம். இதுபோன்ற கொடுமைகள் மதம், பண்பாடு, கலாச்சாரம், புனிதம், கற்பு, பாதுகாப்பு என்ற பெயரில் அரங்கேறிக் கொண்டிருந்தன.

 

இந்தக் கொடுமைகளைத் தடுக்க 1891-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் சட்ட முன்வடிவாக முன்வைக்கப்பட்டு 1929-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி சட்டமாக நிறைவேற்றப்பட்டு 1930-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி சாரதா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பெண்ணுக்கு 14 வயதும் ஆணுக்கு 18 வயதும் பூர்த்தியான பின்பு திருமணம் செய்து வைக்கவேண்டும் என இந்தச் சட்டம் கூறியது. (தற்போது இது பெண்ணுக்கு 18, ஆணுக்கு 21 என உள்ளது).

 

இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகளில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி பாலகங்காதர திலகர் இந்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார். திலகரின் சீடராக இருந்த வ.உ.சிதம்பரனார் இந்த சட்டத்தை வரவேற்றார். எதிர்ப்புகள் இருந்தபோதும் குழந்தை திருமணத்தை அப்போதே சட்டம் இயற்றி தடை செய்துள்ளனர்.

 

Chidhambaram child marriage issue

 

இப்படி சட்டம் தடை செய்யும் குழந்தை திருமணத்தை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது தீட்சிதர்களாக உள்ளவர்களும் குழந்தை திருமணம் செய்து கொண்டவர்கள்தான். அவர்களின் குழந்தைகளுக்கும் குழந்தை திருமணத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

 

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே குழந்தை திருமணம் நடத்த பத்திரிகை அடிக்கப்பட்டதை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த வி.வி.சாமிநாதன் பேட்டியுடன் நக்கீரன் பிரசுரித்தது. மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற குழந்தை திருமணங்களையும் அதைத் தடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்களின் போராட்டத்தையும் நக்கீரன் இதழும் இணையமும் பதிவு செய்துள்ளன.

 

Chidhambaram child marriage issue

 

சிதம்பரம் நகரத்திலுள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளியில் பயிலும் தீட்சிதர்களின் பெண் குழந்தைகளை அவர்கள் பூப்படைந்தவுடன் 7 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு ஏற்கனவே 2 அல்லது 3 வயதில் தீட்சிதர்களுக்குள்ளே ஒப்பந்தம் செய்து கொண்டவாறு கணவரின் வீடுகளுக்கு மேளதாளம் முழங்க அனுப்பிவிடுவார்கள்.

 

இந்த நிலையில்தான் சமூகநலத் துறையினருக்கு இதுபோன்ற தகவல் ஆதாரப்பூர்வமாக வந்ததன் அடிப்படையில் கடந்த ஆண்டு நான்கு குழந்தை திருமணங்கள் நடைபெற்றதற்கு உறுதுணையாக இருந்த தீட்சிதர்கள் மீது சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இதில் சிலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இதற்கு தீட்சிதர்கள் தரப்பு, தாங்கள் தனி சமய மரபினர் என்றும், தங்களின் சமயத்தில் தலையிட அரசுக்கு உரிமை இல்லையெனவும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை கீழவீதியில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரச்சனையை திசைதிருப்ப நடராஜர் கோயிலை அரசு எடுக்கவே இதுபோன்று செய்வதாகக் கோஷமிட்டு தீட்சிதர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Chidhambaram child marriage issue

 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியோ சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமணமே செய்யவில்லை என்றும், ஆனால் கன்னித்தன்மையைப் பரிசோதிக்க இருவிரல் சோதனை நடைபெற்றது எனவும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு இது எடுத்துக்காட்டு என்று கூறினார்.

 

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டாண்டுக் காலமாக மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் குழந்தை திருமணம் நடைபெற்று வருகிறது. தற்போது தீட்சிதர்களாக உள்ளவர்களின் குழந்தைகளின் வயதைக் கணக்கிட்டால் குழந்தை திருமணம் நடந்துள்ளதா என்று எளிதில் தெரியும்” என்று கூறினார். மேலும், “சமூகத்தில் குழந்தை திருமண சட்டத்தில் நடவடிக்கை எடுத்தால் கண்டுகொள்ளாத ஆளுநர், தீட்சிதர்களுக்கு மட்டும் வக்காலத்து வாங்குவது ஏன்?” எனக் கேள்வியெழுப்பினார்.

 

“இருவிரல் சோதனை அல்ல... சட்டத்திற்கு உட்பட்டே சோதனை நடைபெற்றுள்ளது” என தமிழகக் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு ஆளுநரின் அபாண்டத்துக்குப் பதில் கூறினார்.

 

இந்நிலையில் சிதம்பரம் பகுதியிலுள்ள பா.ஜ.க.வினர் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்து வருவதை ஆளுநருக்கு ரகசியமான முறையில் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிலிருந்து அவர் வாய் திறக்கவில்லை. இதன்பின்பே மாணவர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசுகையில், அவர் குழந்தை திருமணம் செய்துகொண்டதாகவும், அவர் மனைவி கல்லூரிக்குச் செல்லவில்லை என்றபோதும் அவருக்குப் பக்கபலமாக இருந்தார் என்றும், அதனால் அவருக்கு உலகத்தையே எதிர்க்கும் திறனை மனைவி அளித்தார் என்றும் பேசியுள்ளார். 

 

இந்த நிலையில் புதன்கிழமை தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ஆனந்த் மற்றும் மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொள்ள சிதம்பரம் நகருக்கு வருகை தந்தனர். இவர்கள் நடராஜர் கோவில் உள்ளே சம்பந்தப்பட்ட தீட்சிதர்களின் குழந்தை மற்றும் தீட்சிதர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் அப்போது பரிசோதனை செய்ததாகக் கூறப்படும் மருத்துவர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய உறுப்பினர் ஆனந்த், “நடராஜர் கோவில் தீட்சிதர்கள் உள்ளிட்ட மூன்று தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டோம். விசாரணையில் இருவிரல் சோதனை நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது” என்று தெரிவித்தார்.