திருப்பூரில் யூ-ட்யூப் வீடியோவைப்பார்த்து இயற்கை மருத்துவ முறையில் கணவனே பிரசவம் பார்த்ததால் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே பதைபதைக்கவைத்தது. இதனைத்தொடர்ந்து, யூ-ட்யூப் வீடியோக்களின்மூலம் பிரபலமான டுபாக்கூர் டாக்டர் ஹீலர் பாஸ்கர், ‘வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்துகொள்ள ஒரு நாள் பயிற்சி’ என்று முகாம் நடத்த திட்டமிட்டதால் அவரை அதிரடியாக கைது செய்தது கோவை மாநகர காவல்துறை. இந்திய மருத்துவர்கள் சங்கமும் சுகாதாரத்துறை கோவை மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் பானுமதி ஆகியோர் கொடுத்த புகார்கள்தான் அதிரடி நடவடிக்கைக்கு காரணம்.
இந்நிலையில், அலோபதி என்னும் ஆங்கில மருத்துவமானது மக்களிடம் கோடி கோடியாய் கொள்ளையடிக்கிறது. சுகப்பிரசவம் ஆகக்கூடிய தாய்மார்களுக்குக்கூட ‘சிசேரியன்’ செய்து தம்பதிகளிடம் பணம் பறிக்கிறார்கள். அதனால், மரபுவைத்தியம் இயற்கை வைத்தியத்தில் வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்துகொள்வதில் என்ன தவறு உள்ளது? அலோபதி மருத்துவர்கள் இல்லாத காலக்கட்டத்தில் மருத்துவச்சிகள்தானே மகப்பேறு மருத்துவம் பார்த்தார்கள்? அதனால், ஆரோக்கியமான இயற்கை மருத்துவத்திற்கு நம்மை அழைத்துச்செல்லும் ஹீலர் பாஸ்கரின் ஆலோசனையில் என்ன தவறு உள்ளது? அவரை ஏன் கைது செய்யவேண்டும்? என்று ஹீலர் பாஸ்கருக்கு ஆதரவான குரல்களும் ஒலித்துக்கொண்டிருக்க… இயற்கை மருத்துவத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்க்கலாமா? என்று சென்னை அரும்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோகா (Bachelor of Naturopathy and Yoga Sciences) மருத்துவக்கல்லூரியின் முதல்வர் டாக்டர் மணவாளனை சந்தித்துப்பேசினோம்…
“மருத்துவத்துறையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் (நேச்சுரோபதி) மற்றும் யோகா, அலோபதி என்னும் ஆங்கில மருத்துவம் என ஆறு விதமான மருத்துவமுறைகளைத்தான் மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. இந்த ஆறு மருத்துவத்தில் அலோபதி என்னும் ஆங்கில மருத்துவம் நமக்கு அந்நிய மருத்துவம். மற்ற, ஐந்து மருத்துவ முறைகளும் இந்திய மருத்துவங்கள். இன்னும் சொல்லப்போனால், இந்திய மருத்துவத்திற்கு மாற்று மருத்துவம்தான் ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதி மருத்துவம்.
அலோபதி மருத்துவத்தைப்போலவே சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, நேச்சுரோபதி அண்ட் யோகா ஆகிய ஐந்துவிதமான இந்திய மருத்துவமும் 5 ½ வருட பட்டப்படிப்புதான்.
இந்த, ஆறுவிதமான படிப்பில் ஏதோ ஒருவித மருத்துவப் படிப்பை முடித்து டாக்டர் பட்டம் பெற்று, அதற்கான கவுன்சிலில் பதிவு செய்தால்தான் டாக்டர். சட்டம்படித்தவர் பார்கவுன்சிலில் பதிவு செய்யவில்லை என்றால் அவர் எப்படி வழக்கறிஞர் கிடையாதோ அப்படித்தான் மருத்துவம் படித்துவிட்டு அதற்கான கவுன்சிலில் பதிவுசெய்தால்தான் டாக்டர். நேச்சுரோபதி அண்ட் யோகா மருத்துவக்கல்லூரியில் 5 ½ வருடம் படித்து பட்டம் பெற்று இந்திய மருத்துவக்கவுன்சிலில் பதிவு பெற்றால் மட்டுமே இயற்கை மருத்துவ டாக்டர். அப்படியிருக்க, ஹீலர் பாஸ்கர் எந்த இயற்கை மருத்துவக்கல்லூரியில் பட்டம்பெற்று, பதிவு செய்து டாக்டர் ஆனார்?
ஹீலர் பாஸ்கருக்கு பரிந்துரை செய்கிறவர்கள் இயற்கை மருத்துவத்தின் மீதான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. அந்த, இயற்கை மருத்துவம் குறித்து சொல்பவர் இயற்கை மருத்துவர்தானா? என்பதுதான் எங்களது கேள்வி.
பி.என்.ஒய்.எஸ். படித்த இயற்கை மருத்துவர்கள் என்ன மாதிரியான சிகிச்சைகளை அளிக்கிறோம் என்பதை மக்களும் இயற்கை ஆர்வலர்கள், மரபுவழி ஆர்வலர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
ஆரோக்கியமாக வாழ முன்னெச்சரிக்கை வழிகளை சொல்லிக்கொடுக்கிறோம். நோய் வந்தபிறகு அதை எப்படி தீர்ப்பது? என சிகிச்சை அளிக்கிறோம். குறிப்பாக, சர்க்கரைவியாதி, உடல்பருமன், தோல்வியாதிகள், லைஃப் ஸ்டைல் பிரச்சனைகள் என பல்வேறு நோய்களுக்கு இயற்கை உணவுமுறைகளை சாப்பிடவைத்து சிகிச்சை அளிக்கிறோம்.
இயற்கை உணவு என்றால் என்ன? ஆர்கானிக் ஃபுட் எனப்படும் இயற்கை வேளாண்மையில் விளைந்த உணவு எல்லாமே இயற்கை உணவு அல்ல. உதாரணத்திற்கு, அரிசி இயற்கை உணவு. அதை, வேக வைத்துவிட்டால் அது இயற்கை உணவு அல்ல. அப்படியென்றால், எது இயற்கை உணவு? பச்சை காய்கறிகள், பழங்கள், முளைக்கட்டிய பயிறு, கீரைகள் போன்றவற்றை சமைக்காமல் சரியான விகிதத்தில் சாப்பிடுவதுதான் இயற்கை உணவு. அதாவது, நேச்சுரல் டயட்.
நீர்சிகிச்சை, மண் சிகிச்சை, உணவுமுறை சிகிச்சை, மசாஜ் தெரபி, அக்குபஞ்சர் அண்ட் அக்குபிரஷர் (இயற்கை மற்றும் யோகா கல்லூரிகளைத் தவிர அக்குபஞ்சர் அண்ட் அக்குப்பிரஷர் படிப்பு வேறு எங்கும் அங்கீகரிப்படவில்லை) அரோமா தெரபி, ஹீலியோ தெரபி, காந்த சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளை செய்கிறோம்” என்றவரிடம் மகப்பேறு சிகிச்சைகளை இயற்கை மற்றும் யோகா மருத்துவத்தில் எப்படி சிகிச்சை அளிக்கிறீர்கள்? என்று நாம் கேட்டபோது…
“பிரசவம் என்பது இயற்கையான நடைமுறை. இயற்கையாக அதாவது சுகப்பிரசவம் செய்துகொள்ள இயற்கை மற்றும் யோகா மருத்துவத்தில் பல வழிமுறைகள் உள்ளன. உதாரணத்திற்கு, முதல் மாதம் தொடங்கியதுமே உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான உணவு முறைகளை சிகிச்சையாக அளிக்கிறோம். குறிப்பாக, முருங்கை ஜூஸ், கருவேப்பிலை ஜூஸ், கொத்தமல்லி ஜூஸ், கேரட் ஜூஸ், மாதுளை ஜூஸ் வெல்லம் கலந்து கொடுக்கப்படுகிறது. ஷுகர் அதாவது வெள்ளைச் சர்க்கரை கண்டிப்பாக நாங்கள் பரிந்துரை செய்வதில்லை.
இதை, பின்பற்றுவதன் மூலம் தாய்க்கு தேவையானை இரும்புச்சத்து ஆரம்பக்கட்டத்திலேயே கிடைத்துவிடுகிறது. மேலும், கர்ப்பகால சர்க்கரை வியாதியோ இரத்த அழுத்தமோ வராமல் தடுக்கிறது. விஞ்ஞான பூர்வமாக படித்துவிட்டு வருவதால் தாய்மார்களின் இரத்த அழுத்தம், எடை, இரும்புச்சத்தின் அளவு, யூரின் அனாலைசஸ் உள்ளிட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனைகளை இயற்கை மருத்துவர்கள் செய்வார்கள். ஒவ்வொரு மாதமும் தேவையான ‘யோகா’ பயிற்சிகளை கொடுக்கிறார்கள். இதற்கு, Antenatal Yoga எனப்படும்.
இப்படிப்பட்ட சிகிச்சை மற்றும் யோகா செய்வதால் தாய்மார்களின் இடுப்புப்பகுதியிலுள்ள தசைகள் மற்றும் எலும்புகள் இலகுவாகி குழந்தை வெளிவருவதற்கு ஏதுவாகி சுகப்பிரசவம் வருவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. இதற்காக, நாங்கள் வழக்கமாக தாய்மார்களுக்கு வழங்கப்படும் அலோபதி மருந்துகளை வேண்டாம் என்றோ தடுப்பூசிகள் போடவேண்டாம் என்றோ பரிசோதனைகளை செய்யக்கூடாது என்றோ தவறான வழிகாட்டுதல்களை பரிந்துரைப்பதில்லை. சுகப்பிரசவம் ஆவதுதான் எங்கள் குறிக்கோள். ஆனால், அதற்கான பரிசோதனைகள், தடுப்பூசிகள், மருந்துகளையும் அரசு மருத்துவமனைகளில் எடுத்துக்கொள்ளச்சொல்கிறோம். மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
கடைசி ஒன்பதாவது மாதத்தில் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைத்திற்கோ அரசு மருத்துவமனைக்கோ பரிந்துரை செய்து அனுப்பிவிடுவோம். இப்படி, பல தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் ஆகியிருக்கிறது. ஆகிக்கொண்டிருக்கிறது. உண்மையிலேயே இயற்கை வழியில் சுகப்பிரசவத்தை விரும்பும் தாய்மார்கள் போலிகளிடம் சிக்கி ஆபத்தை உண்டாக்கிக்கொள்ளாமல் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இயற்கை மருத்துவம் படித்த டாக்டர்களிடம் செல்லவேண்டும் என்பதுதான் எங்களது அன்பான வேண்டுகோள்.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிகளிலும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் 51 ஆரம்ப சுகாதாரநிலையங்களிலும் உங்களுக்காக இயற்கை மற்றும் யோகா மருத்துவர்கள் ‘சுகப்பிரசவம்’ செய்வது குறித்த வழிமுறைகளைச் சொல்ல காத்திருக்கிறார்கள். இலவசமான ஆலோசனைகளை மட்டுமல்ல, இலவச இயற்கை உணவுவகைகளையும் சாப்பிடலாம்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கே.எம்.சி. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என அரசு மருத்துவமனைகளிலிருந்து பரிந்துரை செய்து அனுப்பப்படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இங்கேயே பயிற்சி அளித்து அனுப்புகிறோம்” என்கிறார் ஆலோசனையாக.
அலோபதியில் ஒரு நோய்க்கு சரியான மருந்தையோ சிகிச்சையையோ அலோபதி மருத்துவர் அல்லாத ஒருவர் பரிந்துரைத்தால் சிகிச்சையளித்தால் அவரை போலி டாக்டர் என கைது செய்துவிடுவார்கள். ஆனால், இயற்கை மருத்துவமே படிக்காத ஹீலர் பாஸ்கர்கள், அக்கு ஹீலர்கள் போன்றவர்கள் தவறான முறையில் இயற்கை மருத்துவத்தை பரிந்துரைத்து உயிருக்கு உலைவைத்தால் குற்றம்தானே? இயற்கையான முறையில் சுகப்பிரசவத்தை தாராளமாக செய்துகொள்ளுங்கள். அதற்கான, உண்மையான இயற்கை மருத்துவர்களின் பரிந்துரைப்படி செய்துகொள்ளுங்கள் தாய்மார்களே ப்ளீஸ்!