ஜென் கதைகளின் மகத்துவம் குறித்து ஜெய் ஜென் நம்மிடம் விவரிக்கிறார்.
நமக்கு திருக்குறள் எப்படியோ அதுபோல் ஜப்பானியர்களுக்கு, சீனர்களுக்கு, திபெத்தியர்களுக்கு ஜென் தத்துவம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்த நிமிடத்தில் நீங்கள் வாழ்வது தான் ஜென் தத்துவம். சிறுவயதிலிருந்தே நான் ஒரு புத்தக வாசிப்பாளன். அதில் ஒரு புத்தகத்தில் ஜென் கதைகள் குறித்த ஒரு வரி இருந்தது. அதன் பிறகு ஜென் தத்துவம் குறித்து நான் வாசிக்க ஆரம்பித்தேன். மிகக் குறைவான வரிகளில் பெரிய தத்துவங்களைச் சொல்வதுதான் ஜென் தத்துவம். ஒரு வரியில் கூட கதைகள் இருக்கின்றன. உதாரணமாக "மழை பெய்கிறது. குடையை எடுத்துச் செல்வதும் செல்லாமல் இருப்பதும் உன்னுடைய விருப்பம்" என்பது ஒரு ஜென் கதை.
அவர்கள் பேசும் மொழியே கதைகளின் வாயிலாகத் தான் இருக்கும். உலகத்தில் நிலையானது என்பது எதுவுமே இல்லை என்கிறது ஒரு ஜென் கதை. ஜென் தத்துவ ஞானிகளின் வாழ்க்கையே எளிமையானது. அதனால் அவர்களுடைய சிந்தனையும் எளிமையாக இருக்கும். அதன் மூலமே ஜென் கதைகளும் பிறக்கின்றன. 10 ஜென் கதைகளை அறிந்தால் வாழ்க்கையை எளிமையாகக் கடந்து விடலாம். இயற்கையான விஷயங்களின் மூலமாகவே மகிழ்ச்சியாக இருக்கலாம், அதற்காக செயற்கையாக எதையும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது ஜென் தத்துவம்.
ஜென் தத்துவ ஞானிகள் உலக நடப்புகள் அனைத்தையும் அறிந்திருப்பார்கள். ஆனால் தாமரை இலை தண்ணீர் போல் வாழ்வார்கள். அனைத்தையும் தூரத்தில் இருந்தே பார்ப்பார்கள். 'பையா' படத்தில் எதையும் தூரத்தில் இருந்து பார்த்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்று தமன்னாவிடம் கார்த்தி கூறுவார். அது ஒரு ஜென் தத்துவம். இமயமலையில் ஞானிகளை சந்திக்கும்போது அவர்கள் என்னிடம் கூறும் கதைகளை நான் எங்குமே படித்ததில்லை. அதுபோன்ற கதைகளும் என்னோடு பயணிக்கின்றன. பொருத்தமான கதைகளை என்னுடைய பயிற்சி வகுப்புகளில் மாணவர்களுக்கு நான் சொல்கிறேன்.