உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 50-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.பலரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவரவர்களுக்கு முடிந்த வகையில் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர் இது தொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாகப் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உலகம் முழுவதும் கரோனா தொடர்பான அச்சம் உணர்வு மேலோங்கி கிடக்கிறது.உலகமே முடங்கியுள்ளது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை உள்ளது.மருத்தவர்கள் சுகாதாரத்தையும், தனித்திருத்தலை பற்றியும் பேசி வருகிறார்கள்.அவர்களின் அந்த முயற்சியை நாம் வரவேற்போம்.அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றபடி, கைகளைச் சோப்பு போட்டு நன்கு கழுவுவோம்.முகக் கவசங்களைத் தவிர்க்க முடியாமல் வெளியில் செல்லும் போது அணிந்து கொண்டு செல்வோம். நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. பயந்து கொண்டு இருப்பதால் எதையும் சாதித்து விட முடியாது.பயமே ஒரு பெரிய நோய் போன்றது.ஆகையால் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை. சுகாதரமான முறையில் இருப்போம். நோயை நம்மை விட்டு விரட்டுவோம்" என்றார்.