Skip to main content

சீல் வைக்கப்பட்ட மேலப்பாளையம்! அத்தியாவசிய பொருட்கள் எப்போது கிடைக்கும்?

Published on 01/04/2020 | Edited on 01/04/2020


திருநெல்வேலி மேலப்பாளையத்தில் 17 பேர் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இவர்களுடன் நெல்லை டவுனில் 4 பேர், பாளையங்கோட்டையில் ஒருவர் என 22 பேர், டெல்லியியில் நடந்த மத மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்களுக்குக் கரோனா பாசிட்டிவ் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.
 

sealed

     

இவர்களில் மேலப்பபாளையத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்பதாலும், அவர்கள் மூலமாக அங்குள்ள பலருக்கும் பரவியிருக்கிறதா என்பதை உறுதி செய்யும் வகையிலும் மேலாப்பாளையத்திற்குச் செல்லும் அத்தனை வழிகளும் நேற்று மூடப்பட்டன. கரோனா தொற்று உள்ளவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் அங்குள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
 

இதற்கு அங்குள்ள தூய்மைப் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பள்ளியிலிருந்து இடம் மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலப்பாளையத்தில் உள்ள யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும், டூவீலர்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்ததுடன், ஒவ்வொரு தெருமுனையிலும் மளிகை-காய்கறி விற்பனை  செய்யப்படும் என்றும், ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மட்டும்  நடந்து வந்து பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும்  என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

     

sealed


இன்று காலையில் வெறிச்சோடிக்  கிடந்த மேலப்பாளையத்தில் காய்கறி, மளிகை விற்பனைக்கான எந்த வசதியும் இல்லை. நாளை முதல் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் வீட்டில் இருக்கிறார்கள் மக்கள்.அரசுத் தரப்பில் கேட்டபோது, அத்தியாவசியப் பொருட்களுக்கான ஏற்பாடுகள் விரைந்து செயல்படுத்தப்படும் என்று பதில் கிடைத்தது. மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதி என்பதால்,   மேலப் பாளையம் வாசிகளுக்கான மளிகை, பால், காய்கறி, இறைச்சி, மருந்து உள்ளிட்டவை உடனடியாகக் கிடைக்கக ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்கிறார்கள் நெல்லை மக்கள்.