சந்திரயான் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை அடைந்து அங்கு அதன் விக்ரம் லேண்டர் தரையிறங்கி, அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வுகளைத் துவங்கி இஸ்ரோவுக்கு தகவல்களை அனுப்பத் துவங்கியுள்ளது. முன்னதாக சந்திரயான் வெற்றி அடைந்த பிறகு பெங்களுரூவில் பிரதமர் மோடி விஞ்ஞானிகளைச் சந்தித்து அவர்களுக்குத் தனது வாழ்த்தை தெரிவித்தார். இவற்றை எல்லாம் குறித்து வழக்கறிஞர் பாலு நமக்கு அளித்த பேட்டி. இந்தப் பேட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்டவை இங்கு வாசகர்களுக்குத் தந்துள்ளோம்.
இந்தியாவின் அறிவியல் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சந்திரயான் மூலம், அறிவியல் சிகரத்தை அடைந்திருக்கிறது. நிலவில் தேவர்கள் இருக்கிறார்கள் என்று கூறும் நபர்களுக்கு அறிவியல் தான் உயர்ந்தது என்று இந்த நிகழ்வு நிரூபித்துவிட்டது.
ஆம்ஸ்ட்ராங் நிலவிற்குச் சென்று வந்த பின் ஒரு கதையை பரவவிட்டனர். நிலவில் ஆம்ஸ்ட்ராங் இஸ்லாமியர்களின் பாங்கு ஒலியை கேட்டதாகவும் பூமிக்கு வந்தவுடன் இஸ்லாமியராக மதம் மாறிவிட்டார் என்றும் சில கதைகள் பரப்பப்பட்டன. பின்னர் ஆம்ஸ்ட்ராங்கே இந்த கூற்றை மறுத்தார்.
இதேபோன்று நம் நாட்டில் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, சூரியனில் இருந்து ஓம் என்ற சத்தம் வருவதாகக் கூறி ஒரு காணொளியை பகிர்ந்தார். பிறகு நம் மாணவர்கள் பலர் அந்த வீடியோ பொய் என்று நிரூபித்தனர். இது மாதிரியான மூடநம்பிக்கைகளை தகர்த்துவிட்டு அந்த வெற்றிக்கு நமது விஞ்ஞானிகள் கொடிநாட்டி இருக்கிறார்கள். பிரபஞ்சத்தில் பல கோள்கள் இருக்கிறது. அதில் நிலவும் ஒரு கோள். அங்கு அமெரிக்கா முதலில் கால் பதித்தாலும் இந்தியா போன்ற எளிய நாடுகளும், ஹாலிவுட்டில் ஒரு திரைப்படம் எடுக்க செலவாகும் வெறும் 750 மில்லியன் டாலரில் நிலவை அடையலாம் என சாதித்துள்ளனர்.
அமெரிக்காவில் என்டேவர் என்ற ரோபோவை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி ஆராய்ச்சி செய்தார்கள். அந்த ரோபோவிற்கு கட்டளைகளை அனுப்பினால் சேருவதற்கு 6 நிமிடம் ஆகும். அந்த கட்டளை நிறைவேறிவிட்டதா என்று தெரிந்துகொள்ள ஆறு நிமிடம் ஆகும். எனவே இவ்வளவு பொறுமையுடனும், காத்திருத்தலுடனும், பணிச் சுமையுடனும் விஞ்ஞானிகள் பணியாற்றுகிறார்கள் என்பதற்கு சிறிய எடுத்துக்காட்டு. இன்றைக்கு சந்திரயான் நிலவில் இறங்கும் நிகழ்வை எண்பது லட்சம் பார்வையாளர்கள் பார்க்கும் அளவுக்கு இஸ்ரோ விஞ்ஞானமும் வளர்ந்திருக்கிறது.
விஞ்ஞானிகள் ரம்பா, ஊர்வசி, மேனகை இருக்கிறார்களா என்று தேடப் போவதில்லை. நிலவில் மனிதர்கள் வசிப்பதற்கு ஆக்சிஜன், தண்ணீர் இருக்கிறதா என்று அறியப் போகிறார்கள். தொடர்ந்து அங்கு அறிவியல் கூறுகளைப் பற்றி அறியவே லேண்டர் இறங்கியுள்ளது. தற்போது மோடி, லேண்டர் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் வைத்திருப்பதில் சற்று கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கு முன் தோல்வியடைந்த சந்திரயான் -2க்கு திரங்கா என மூவர்ணக் கொடியின் பெயரை சூட்டினார். இப்படி, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் சென்று தங்களின் குறியீடுகளை வைப்பார்கள். நிலவில் பிரிவினையை உண்டு பண்ணுவதை விடுத்து அறிவியலை அறிவியலாக அணுக வேண்டும்.
பிறரது வெற்றியை பிரதமர் தட்டிச் செல்கிறார். பல மாதங்களாக அவர்களுக்கு சம்பளம் பாக்கி இருக்கிறது என காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் சொல்லியிருக்கிறாரே?
அந்த கருத்தில் உண்மை இருக்குமானால் அதனை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். ஏனென்றால், பிரதமர் என்னுடைய ஆட்சிக் காலத்தில் தான் இவை நடந்தது என்று சொல்கிறார். இந்த பாஜக அரசு ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையே காட்டப்படுகிறது. இதுபோலவே, மூத்த விஞ்ஞானிகளுக்கு சம்பளம் தரப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவை எல்லாம் தேர்தல் முதலீடு என விமர்சிக்கிறார்களே?
தேர்தல் முதலீடு என்று பார்த்தால் காங்கிரஸ் தரப்பில் இருந்து ஆதாரப் பூர்வமாக நிரூபிக்க வேண்டும். தொடர்ந்து இதனை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதன் பொறுப்பும் காங்கிரஸ்க்கு இருக்கிறது. காங்கிரஸ் சொல்வதில் உண்மை இருக்கின்ற வகையில் ஏற்றுக்கொள்ளப்படலாம். இந்த திட்டத்தினுடைய தலைவர் சோம்நாத் கேரளாவைச் சேர்ந்தவர். வேணுகோபாலும் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதால் ரகசியமாக விஷயம் தெரிந்திருக்கலாம். மாறாக இதையெல்லாம் விடுத்து நாம் இந்த திட்டத்தில் உழைத்த ஒவ்வொருவரையும் எழுந்து நின்று வணங்க வேண்டும்.
சந்திரயான் திட்டத்தில் தமிழர்களின் பங்கு அதிகம் இருக்கிறது. ஆனால் அவர்கள் முறையாக மதிக்கப்பட்டார்களா?
இந்த கேள்வியினை இரண்டு விதமாக நான் பார்க்கிறேன். ஒன்று இந்தத் திட்டத்தில் பங்காற்றிய அனைவரும் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தமிழர்கள். அவர்களின் எளியப் பின்னணியை வைத்து பார்ப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு பெருமையாகத்தான் இருக்கிறது. சந்திரயான் விஷயத்தில் பிரித்துப் பார்ப்பது சரியாகப் படவில்லை. ஏனென்றால், இந்தியாவே கொண்டாடும் விஷயத்தை இஸ்ரோவின் வெற்றி என்றே பார்க்க வேண்டும். ஒருவேளை அவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தில் விருதுகள், பதக்கங்கள் பெற தடைப்பட்டால். நாம் குரல் கொடுக்க வேண்டும். இதைத் தவிர, நமது தமிழர்கள் அங்கு இருக்கிறார்கள் என பெருமைப்படுவது இயல்பு தான்.
இந்த நான்கு தமிழர்களும் தலையில் இருந்து பிறந்தவர்கள் அல்ல. பாகுபாடு பார்ப்பதென்று எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனென்றால், அனைவரும் மோடியை நோக்கி செல்கிறார்களே தவிர நம்பியை போன்றவர்களும் எளியவர்கள் தான் என மறந்துவிடுகிறார்கள். அப்துல் கலாம், நம்பி நாராயணன், மயில் சாமி அண்ணாதுரை, சிவன், அருணன் சுப்பையா, அனிதா சுப்பையா போன்றோரும் அப்படி வந்தவர்களே.
இன்று பேசப்படும் வீரமுத்துவேல், விழுப்புரத்தில் பாலிடெக்னிக் முடித்து சாய் ராம் கல்லூரியில் சேர்ந்து பின்னர் மேற்படிப்பிற்கே ஐ.ஐ.டி. சென்றுள்ளார். ஆகவே, ஆரம்பமே ஐ.ஐ.டி. தான் என எண்ணுவது சரியல்ல. எளிமையான கிராமப் பின்னணியில் பிறந்து வளர்ந்து படித்த இவர்களே தங்களின் மூளையை தீட்டிக் கொண்டு. ஒவ்வொரு நொடியும் இந்தியாவிற்கு பெருமை சேரவேண்டும் என உழைத்துள்ளனர்.
அதிலும் பிரதமர், குடியரசுத் தலைவர், மந்திரிகளை விடவும் துறை சார்ந்த தலைவர்களை விடவும் விஞ்ஞானிகளே அதிகம் உழைத்தனர். ஒருவேளை இந்தத் திட்டம் தோல்வியடைந்திருந்தால் செய்திகள் 6000 கோடி நட்டம் என வந்திருக்கும். அதனையெல்லாம் இவர்கள் உடைத்தெறிந்து இருபத்தி நான்கு மணி நேரமும் உழைத்துள்ளனர். இந்த மாதிரி எளிய பின்னணியில் இருந்து வந்து இந்தியக் கொடியினை உயர்த்தியதில் தமிழர்கள் இருப்பது பெருமை தான்.
அதிலும், வீரமுத்துவேல் முதல்வருக்கு அளித்த பேட்டியில், ஒரு கிராமத்தான் இருப்பான். அதில் கிராமத்து மனிதனுடைய மண்ணின் வாசனைக் கூட மாறியிருக்காது. இந்த மாதிரி செய்திகள் நமக்கு சொல்வது, எளியப் பிள்ளைகளும் அறிவியல் துறையை தேர்ந்தெடுக்கலாம் என்ற நம்பிக்கையை இவர்கள் அளித்துள்ளனர்.
முழு பேட்டி வீடியோவாக: