Skip to main content

“உன் கடவுளையும் விடமாட்டேன்!” - காலா பேசும் ‘சுத்த’ அரசியல்!

காலாவை ரஜினி நடித்த படமாகவோ, வெறும் சினிமாவாகவோ பார்க்காமல், கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தியிருக்கும் கருத்துக்களை (வசனம்) மட்டுமே கவனித்தால், மெய்யாலுமே சிலிர்க்கிறது.

 

black rajiniதாராவி மக்களுக்காகப் போராடி உயிரை விட்டவர் வேங்கையன். தந்தை வழியிலேயே, அம்மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு, தாதா பட்டத்தையும் சுமந்து வாழ்கிறார் காலா. தன் மகனுக்குப் புரட்சியாளர் லெனின் பெயரைச் சூட்டிய அவர், அவன் வளர்ந்து பெரியவனாகிவிட்ட நிலையில்,  கருத்து முரண்பாடு ஏற்பட்டு,  “வெளிய போ” என்று சொல்லும் இடத்தில், ‘சுடும் நிஜம்’ பேசுகிறார். மகனும் விவாதிக்கிறான். 

“பணக்காரனுக்கு ஏழைகள் மேல என்னைக்குலே அக்கறை வந்திருக்கு?”

“சுயநலம் பார்க்காம எவன் ஹெல்ப் பண்ண வருவான்? ஒருத்தனை காமிங்க பார்ப்போம்.”

“இதுக்குத்தான் சொன்னேன். ஒரு மண்ணும் செஞ்சு கிழிக்க வேணாம்னு. மண்ணைப் புரிஞ்சிக்காம, மக்களோட மனச புரிஞ்சிக்காம, ரெண்டு புஸ்தகத்த மட்டும் படிச்சிட்டு, மாற்றம் புரட்சின்னு லோலோன்னு திரியுறது. அடிப்படையைத் தெரிஞ்சிக்கணும்” என்று ஆதங்கத்தைக் கொட்டுகிறார். 

 

white nana patekarவர்க்க பேதத்தை, மனிதத்தோல் நிறத்தின் வாயிலாக, வில்லன் ஹரிதாதாவையும், ஹீரோ காலாவையும் வார்த்தைகளால் உரசவிட்டு, காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.

“காலா.. சொல்லும்போதே வாயெல்லாம் கூசுது. இந்தக் கருப்புக் கலர் இருக்கே. பார்க்கவே அசிங்கமா இருக்கு. உறுத்துது என் கண்ணு.”

 

 


“வெள்ளை தூய்மை.. கருப்பு அழுக்கு.. கண்ணு உறுத்துதுல்ல.. எவ்வளவு கேவலமான யோசனை? உன் பார்வையில்தான் கோளாறு இருக்கு. கருப்பு உழைப்போட வண்ணம். தாராவியில வந்து பாரு. அழுக்கு அத்தனையும் வண்ணமா தெரியும். சுத்தம்.. க்ளீன்.. ப்யூர்.. இதெல்லாம் உன் முகமூடி. என்ன வேணும் உனக்கு? நிலமா? நிலம் இன்னைக்கு ஒருத்தன் பேர்ல இருக்கும். நாளைக்கு இன்னொருத்தன் பேர்ல மாறும். செத்தா, ஆறடிகூட நிரந்தரம் கிடையாது. ஏன் இப்படி வெறி பிடிச்சு திரியிற? நிலம் உனக்கு அதிகாரம். நிலம் எங்களுக்கு வாழ்க்கை.”

“புதுசா ஏதாவது சொல்லு. அதிகாரம் மட்டும்தான் என்னோட வாழ்க்கை”

“என்னோட நிலத்தை பறிக்கிறதுதான் உன்னோட தர்மம். உன் கடவுளோட தர்மம்னா, உன் கடவுளையும்கூட விடமாட்டேன்.”

போராட்டம் உச்சத்தில் இருக்கும் காட்சி ஒன்றில், கரும்பலகையில் காணப்படும் எழுத்துக்கள் மூலம்,  காலாவுக்காக திருவள்ளுவரும் 'குறள்' கொடுத்திருக்கிறார். 

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை 

பொருள்: 

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர்,
ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும். 

சத்தியமாகச் சொல்ல முடியும்! காலாவில் ஆன்மிக அரசியல் துளியும் இல்லை! 
 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்