Skip to main content

போட்டுத்தள்ள ஸ்கெட்ச்! ஸ்மெல் செய்து தூக்கிய போலீஸ்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

rowdy gang arrested by cholavaram police

 

ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகளின் எண்ணிக்கையும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. பார்த்திபன் கொலை, ரெட்ஹில்ஸ் பகுதியில் மூன்று கொலைகள் என நடக்கும் தொடர் கொலைகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையடுத்து ரவுடிகளின் நடமாட்டத்தையும், செயல்பாட்டையும் தடுக்க, ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சோழவரம் போலீசார் ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடிகள், அவர்களது கூட்டாளிகள், மீஞ்சூர் பைபாஸ் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இந்த கைது நடவடிக்கைகளின் பின்னணியில் கஞ்சா விவகாரம் மட்டும் இல்லையாம். அடுத்த கொலைக்கான ஸ்கெட்ச் தயாராகியுள்ள விவரம் அறிந்து போலீசார் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்களாம்.

 

கஞ்சா விற்பனையில் சிக்கிய அர்னால்ட் சரவணன், ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி. இவர் சேது என்கிற சேதுபதி எனும் சரித்திரப் பதிவேடு ரவுடிக்கு மிக நெருக்கமானவர். இந்த சேதுபதி, எண்ணூர் ரவுடி டீம் உதவியோடு ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை, தொழிலதிபர்களை மிரட்டிப் பணம் பறிப்பதை வேலையாகக் கொண்டுள்ளார்.

 

ரியல் எஸ்டேட், மணல் விற்பனையாளர், தொழிலதிபர்களாக இருப்பவர்களின் முழு விவரங்களையும் எடுத்து அவர்களை வேவுபார்த்து அந்த விவரங்களை எடுத்துக்கொடுப்பது, ரவுடிகளுக்கு சிம்கார்ட் வாங்கிக் கொடுத்தல், கத்தி செய்துகொடுக்க ஆட்களை தயார் செய்தல் போன்றவை அர்னால்ட் சரவணன் வேலையாக இருந்து வந்துள்ளது. இதற்காக ஒரு தொகையை அர்னால்ட் சரவணன் சேதுபதி டீமிடமிருந்து பெற்றுக்கொள்வாராம்.

 

அர்னால்ட் சரவணன், முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாவதாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் சரவணன் மனைவிக்குத் தெரிந்ததும், அவர் தன்னுடைய தம்பியும் ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடியுமான ராஜேஸ் என்கிற கட்டாரி ராஜேஸிடம் அழுதபடி சொல்லியிருக்கிறார். தன்னுடைய அக்காவுக்கு இப்படி ஒரு நிலையா என கோபமடைந்த கட்டாரி ராஜேஸ், அர்னால்ட் சரவணனுடன் தொடர்பில் இருந்த அந்தப் பெண்ணை மிரட்டி தொடர்பை கட் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் ராஜேஸுக்கும் சரவணனுக்கும் வாக்கு வாதம் பெரிதாக வெடித்து எதிரும் புதிருமாக மாறினார்கள்.

 

rowdy gang arrested by cholavaram police

 

தன்னை அவமானப்படுத்திய கட்டாரி ராஜேஸை போட்டுத்தள்ள திட்டம் போட்ட சரவணன், பாலாஜி என்கிற சுப்புவிடம் உதவி கேட்டுள்ளார். இந்த பாலாஜி (எ) சுப்பு, முத்துசரவணன் டீம். முத்து சரவணனுக்கும் சேதுக்கும் ஒரு பழைய பகை உள்ளது. சேதுவின் மச்சான் பிரசாந்தை முத்துசரவணன் டீம் போட்டுத் தள்ளவே.. சேது, முத்துசரவணனை போட்டுத்தள்ள சில நாட்களாகவே திட்டம் தீட்டி வந்திருந்தார். எப்படியாவது அதற்குள் நாம் முந்திக்கொள்ளவேண்டும் என யோசித்த முத்துசரவணனுக்கு, சேதுவுக்கு நெருக்கமான அர்னால்ட் சரவணன், பாலாஜியிடம் உதவி கேட்டு வந்ததை முத்துசரவணனிடம் சொல்லியிருக்கிறார். அர்னால்ட் சரவணன் சொன்னால் அந்த இடத்திற்கு சேது வருவான் என்பதால், முத்துசரவணன் பாலாஜியிடம் சொல்லி, அர்னால்ட் வேலையை முடித்துக்கொடு என உத்தரவிட்டுள்ளார்.

 

அடுத்தகட்டமாக முத்துசரவணன் டீம், கட்டாரி ராஜேஸுக்கு ஸ்கெட்ச் போட்டதுடன், இடைப்பட்ட காலத்தில் கஞ்சா விற்பனை செய்யவும், அர்னால்ட் சரவணனுக்கு சரக்கு கொடுத்துள்ளார். அந்த கஞ்சா விற்பனையின் போதுதான் தகவலறிந்த சோழவரம் இன்ஸ்பெக்டர் சாய்கணேஷ் டீம், அர்னால்ட் சரவணனையும் பாலாஜியையும் பிடித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

வழக்கமாக காவல்துறை ரவுடிகளைப் பிடித்தபின் பாத்ரூமில்தான் வழுக்கிவிழுவார்கள். ஆனால் இந்த இரு ரவுடிகளும் காவல்துறையிடமிருந்து தப்பித்து ஓடும்போது பாலத்திலிருந்து தவறிவிழுந்து கைமுறிவு ஏற்பட்டுள்ளது.

 

ஆவடி சிட்டி லிமிட்டில் சோழவரத்தில் மட்டுமே 140-க்கு மேற்பட்ட சரித்திரப் பதிவேடு ரவுடிகள் உள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் எண்ணூர், மீஞ்சூர், ரெட்ஹில்ஸ் வருகின்றன. ரவுடிகளுக்கும் போலீஸில் சிலருக்குமான வெளியே தெரியாத நட்பின் காரணமாகவே பலசமயங்களில் குற்றவாளிகள் தப்பிக்க சில காவல்துறையினர் உதவி செய்கிறார்கள்.

 

இதனால் ரவுடிகளுக்கு காவல்துறை உதவி செய்தது தெரிந்தாலோ, தகவல் வந்தாலோ உடனடியாக அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி இணை கமிஷனர் விஜயகுமார் அறிவித்துள்ளார். அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், சேலம் மாவட்டத்தில் கலக்கிய இன்ஸ்பெக்டர் ஜெகனை எண்ணூருக்கும், ரெட்ஹில்ஸுக்கு ராஜா ராபர்ட்டையும், சோழவரத்திற்கு ஏ.ஜி.ஓ.டி. எனும் ஆன்டிகேங்ஸ்டர் ஆபரேஷன் டீமிலிருந்த சாய்கணேஷையும் பணிநியமனம் செய்து, ரவுடிகளை வேட்டையாட முழுமூச்சோடு ஜே.சி. விஜயகுமார் களம் கண்டுள்ளாராம்.

 

"கமிஷனரின் உத்தரவுப்படி ரவுடிகளை ஒழிக்க, ஒவ்வொரு காவல்நிலையத்திலும் ரவுடிகளைக் கண்காணிக்க தனி ஒரு காவலரை நியமிக்கவுள்ளோம். நிலுவையிலுள்ள வழக்குகளை மீண்டும் நடத்தவும், தமிழ்நாடு எல்லைப் பகுதிகளில் சிறப்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ரவுடிகளை 360 டிகிரி அளவில் முழுமையாக எங்கள் பார்வையில் கொண்டுவந்து அவர்களது மீதான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது'' என்றார் இணை கமிஷனர் விஜயகுமார்.