தமிழகம் முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மே மாதம் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கில், 25 மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சில விதிவிலக்குகள் கொடுக்கப்பட்டு, நடைமுறையிலுள்ள தடைகள் தொடரும்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதில் கடந்த 55 நாட்களாகச் சொல்ல முடியாதத் துயரங்களை அனுபவித்து, வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும்; அதுவும் போர்க்கால அடிப்படையில் இதனைச் செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடிக்கு கோடிக்கை வைத்துள்ளார் காங்கிரஸ் செயல் தலைவர் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி.!
இது குறித்து கோரிக்கை வைத்துள்ள அவர், ‘’ சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவுகள் முழுமையாகத் தொடரும் என அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த 12 மாவட்டங்களும் வட தமிழகத்தில் இருக்கின்றன. இதனைக் கண்டு அதிர்ச்சியும், சந்தேகமும் வருகிறது.
காரணம், சென்னையைத் தவிர்த்து மற்ற 11 மாவட்டங்களும் ஆரம்பம் முதலே நோய்த் தொற்று இல்லாத மாவட்டங்களாக இருந்து வந்த நிலையில், திடீரென்று இப்போது நோய்த் தொற்று அதிகமாக இருப்பதாக அறிவிப்பதுதான்.
மேலும், தென் தமிழகத்தைச் சேர்ந்த 25 மாவட்டங்கள் ஆரம்பித்திலிருந்தே நோய்த் தொற்று அதிகரித்தே இருந்ததாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. தற்போது அந்த மாவட்டங்களில் தொற்று குறைந்திருப்பதை வரவேற்றாலும், வட தமிழகத்தில் திடீரென தொற்று அதிகரிக்க என்ன காரணம் என்பது தான் மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
முதல்வர் மற்றும் அதிகாரமிக்க அமைச்சர்கள் கோலோச்சும் மாவட்டங்களில் ஆரம்பத்தில் நோய் தொற்று அதிகமாக இருந்த நிலையில், அனைத்து அதிகாரத்தையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி அந்த மாவட்டங்களில் கரோனா பரவுதலைக் குறைத்திருக்கலாம். அல்லது பரிசோதனைகளைச் சொற்ப அளவிலேயே எடுத்து தொற்றின் தாக்கம் குறைந்திருப்பதாகக் காட்டியிருக்கலாம்.
எப்படியிருப்பின், அதிகாரம் மிக்க அமைச்சர்கள் கோலோச்சும் மாவட்டங்களில் காட்டப்பட்ட அக்கறை வட தமிழக மாவட்டங்களில் காட்டப்படவில்லை; இந்த மாவட்டங்களை மாற்றான் தாய் மனப்பான்மையோடு தமிழக அரசு கைவிட்டுவிட்டதாகவே கருத வேண்டுயதிருக்கிறது. கல்வி, பொருளாதாரம், விவசாயம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளில் வடதமிழக மாவட்டங்கள்தான் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாக நிறைய புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
மேலும், நாட்டு நலன்களை முன்னிறுத்தி கல்பாக்கம் அணுமின் நிலையம், நெய்வேலி அனல் மின் நிலையம் உள்ளிட்ட மின்சாரம் உற்பத்தி நிறுவனங்கள் அமைவதற்கு, எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், தங்களின் விவசாய நிலங்களை வாரி வழங்கியது வட தமிழகத்தில் இருக்கும் எங்களின் முன்னோர்கள்தான். அவர்கள் இன்றைக்குக் கூலி வேலையாளாகவும், உடல் உழைப்புத் தொழிலாளர்களாகவும் தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். கரோனாவால் அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பசியிலும் பட்டினியிலும் வாடி வதங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
வட தமிழகத்தில் வாழ்வாதாரம் இழந்துள்ள எம் மக்களுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தொகுப்பினை வழங்குவதுடம் 10,000 ரூபாய் நிதி உதவியையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு வழங்க வேண்டும் ‘’ என வலியுறுத்திக்கேட்டுக் கொண்டிருக்கிறார் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி. !