
'ஆட்டுக்குத் தாடியும், மாநிலத்திற்கு ஆளுநரும் எதற்கு' என சுயாட்சி பேசும் மாநிலங்கள் முழங்கி வரும் வேளையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மக்களவை தேர்தலையொட்டி பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தை மறைமுகமாகத் தொடங்கி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.
புது டில்லியில் கடந்த செப்டம்பர் திங்களில், 18வது ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்தியது. அந்த மாநாட்டில் பேசப்பட்ட சங்கதிகள் குறித்து, 'ஜி20 முன்னோக்கு பகுப்பாய்வு' என்ற தலைப்பில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நவம்பர் 23 ஆம் தேதி கருத்தரங்கம் நடந்தது. ஏற்கனவே, துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் உள்ள நிர்வாகிகள் சங்கப்பரிவாரங்களுக்கு ஆதரவு மனநிலையில், பல்கலைக்கழகத்தையே மாற்றி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்நிலையில்தான் ஆளுநர் வருகையையொட்டி, அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களும் கண்டிப்பாக கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது பல்கலை நிர்வாகம். இதனால் பல்கலையில் பணியாற்றி வரும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கருத்தரங்கில் வேறு வழியின்றி கலந்து கொண்டனர். பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் தலைமையில் நடந்த இந்த கருத்தரங்கில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், “வறுமைக் கோட்டிற்குக் கீழ் வசிக்கும் பெண்களுக்கு மத்திய அரசு, உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு வழங்கியுள்ளது. அதேபோல், பெண்களை தொழில்முனைவோராக்கும் நோக்கில் முத்ரா திட்டத்தில் கடனுதவி வழங்கி வருகிறது. இத்திட்டங்களால் பெண்கள் பொருளாதாரம் மேம்படுகிறது. அவர்கள் அதிகாரம் பெற்றவர்களாக ஆகிறார்கள்” என்றார் ஆளுநர். மேலும் அவர் பேசுகையில், “இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 2040 ஆம் ஆண்டுக்குள் உலகளவில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார சக்தி மிக்க நாடு என்ற உயரத்தை எட்டும். வங்கிக் கணக்கு இல்லாத அனைவருக்கும் 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கில் 'ஜன் தன்' திட்டத்தின் கீழ், மத்திய அரசு வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளது. 'பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ' எனப்படும் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், 'ஸ்வச் பாரத்' என்ற தூய்மை இந்தியா திட்டம் ஆகிய திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது,'' என்ற ஆர்.என்.ரவி, முத்ரா திட்டத்தில் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை சிறு கடன் பெற்று, சின்னதாக தேநீர் கடையோ அல்லது சமோசா கடையோ போட்டால்கூட தொழில்முனைவோராகி விடலாம் என்றதுதான் பார்வையாளர்களையே கதிகலங்க வைத்தது. பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குணம் இந்தியர்களின் டி.என்.ஏ.விலேயே இருக்கிறது. அதனால்தான் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள், பிற நாடுகளுக்கு இலவசமாக வழங்கி உதவ முடிந்தது என்றும் கூறினார் ஆர்.என்.ரவி.
கடந்த 2021ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருந்தபோது, தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இந்திய அரசு, பிற நாடுகளுக்கு உதவி செய்த அதேவேளையில், உள்நாட்டிலேயே கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள் பேராசிரியர்கள். இதையெல்லாம் ஆளுநர் பெரிய சாதனை போல பேசுகிறார் என்ற விமர்சனமும் கிளம்பியது. சமோசா கடையும், தேநீர் கடையும் போடலாம் என்ற ஆளுநர், ஏனோ பானி பூரி கடையும், பான் பீடா கடையும் போடலாம் என்று சொல்ல மறந்துவிட்டதாக கிண்டல் பேச்சுகளும் மாணவர்கள் மத்தியில் ஒலித்தன.
ஆளுநர் ரவி, வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டுப் போடுங்க என்றுதான் பச்சையாக சொல்லவில்லையே தவிர, அக்கட்சிக்கு முழுநேர பிரச்சார பீரங்கியாகி விட்டதாகவே சொல்கிறார்கள் பெரியார் பல்கலை பேராசிரியர்கள். கருத்தரங்கில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி இறுதியாக, மத்திய அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அன்பாக வேண்டுகோளும் விடுத்துள்ளார். ஆளுநரே பாஜ கட்சியின் நட்சத்திர பேச்சாளர் போல மாறி வருவது, அந்தப் பதவிக்கு அழகல்ல என பல தரப்பிலும் கண்டனங்களும் எழுந்துள்ளன. இது ஒருபுறம் இருக்க, நவம்பர் 24ம் தேதி, பெரியார் பல்கலையில் இருபத்தி இரண்டாவது பட்டமளிப்பு விழாவை காலை 9 மணிக்கே தொடங்கியது பல்கலை நிர்வாகம். இதுவும் பல தரப்பிலும் அதிருப்தியைக் கிளப்பி இருக்கிறது. பட்டமளிப்பு விழா என்பது பகல் 11 மணியளவில் நடத்தப்படுவதுதான் காலங்காலமாக இருந்து வரும் நடைமுறை. இந்த மரபுக்கு முரணாக காலை 9 மணிக்கே பட்டமளிப்பு விழாவை நடத்தியுள்ளனர்.
மேலும், பதிவாளர் நேர்காணலில் வெளிப்படைத்தன்மை இன்மை மற்றும் விதிமீறல், துணைவேந்தரின் தன்னிச்சையான செயல்பாடு உள்ளிட்ட நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து, செனட் உறுப்பினர்களும், கல்லூரி ஆசிரியர் கழகத்தினரும் மொத்தமாக புறக்கணித்தனர். அதேபோல் சிண்டிகேட் உறுப்பினர்களில் அரசுப் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ள நிலையில், தமிழக அரசின் பல்கலைக்குள் புகுந்து பாஜகவுக்கு ஆதரவாக மறைமுகமாக பரப்புரை செய்துவிட்டுச் சென்றது ஆளுங்கட்சித் தரப்பிலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு உள்ளது.
'சந்திரமுகி' படத்தில், கங்கா பாத்திரத்தில் நடித்த ஜோதிகா, மெல்ல மெல்ல சந்திரமுகியாக மாறியதுபோல், ஆளுநர் என்ற அந்தஸ்தில் இருந்து ஆர்.என்.ரவி, மெல்ல மெல்ல தாமரைக் கட்சியின் பிரச்சார பீரங்கியாகவே மாறிவிட்டதாக அதிருப்தி கிளம்பியுள்ளது. கருத்தரங்கில் கலந்து கொண்ட முனைவர் பட்ட மாணவர்கள், 'என்ன கொடுமை ஆர்.என்.ரவி சார்?' என கிண்டலாக பேசியபடியே அந்த அரங்கத்தை விட்டு வெளியேறினர். ஆளுநரின் கருத்தரங்கு பேச்சை ரகசியமாக பதிவு செய்த நுண்ணறிவுப்பிரிவு மற்றும் எஸ்பிசிஐடி ஆகிய உளவுப்பிரிவு காவல்துறையினர், தமிழக காவல்துறை மேலிடத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர்.