90ஸ் கிட்ஸின் ஞாபகம் வருதே...
ஒரு சின்ன பின்கதை!

'ஃபேஸ்புக்' பக்கத்தில் உலா சென்றேன் , வழக்கம்போல மீம் பார்ப்பதும்,சிரிப்பதுமாய் இருந்த அதில் சில 'மீம்'களை பார்க்கும்போது சிலிர்த்து சில்லறையை விட்டு எறியலாம் போல இருந்தது. அப்படிப்பட்ட மீம் வகை தான் '90ஸ் கிட்ஸ் ஒன்லி நோ தட் ஃபீல் ', டேக் தட் 90ஸ் கிட்ஸ். இந்த மீம்களெல்லாம் தற்போது 18 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு நினைத்தாலே இனிக்கும் மொமண்ட். இதனைப் பார்த்த பின்னர்தான் நியாபகம் வந்தது. இன்று நவம்பர் 14 குழந்தைகள் தினம் என்று. வேலைக்கு செல்பவர்கள் நிறைய பேர் தன் குழந்தைப் பருவத்தை மிஸ் செய்வது வழக்கம். கல்லூரி படிப்பவர்களுக்கும் விதிவிலக்கு அல்ல. குழந்தைகளாய் இருக்கும்போது அப்படி என்ன சாதித்து விட்டோம், வாருங்கள் 90ஸ் கிட்ஸ் ஒவ்வொருவரும் தன் குழந்தைப் பருவத்தில் என்ன சாதித்தோம் என்பதை யோசிப்போம்.

பொங்கல் பண்டிகைக்காக வீட்டை புதுப்பித்துக் கொண்டு இருப்பார்கள், குழந்தைகளாகிய நாம் தெரு முனைகளில் 10,15 பேர் சேர்ந்து கொண்டு பம்பரம் விட்டுக் கொண்டு இருப்போம். வட்டத்தில் மாட்டும் கட்டையை நண்பன் மீட்டு எடுப்பது, மீட்டு எடுத்தாலும் அபிட்டில் மாட்டிக்கொள்வது ( அபிட் என்பது பம்பரத்தை கீழே சுழற்றி கயிறால் கட்டையை தூக்கி பிடிப்பது. இதில் கடைசியாக பிடிப்பவர் கட்டை உள்ளே போகும்). தற்போதெல்லாம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பட்டம் பெறும் நிலையில், சிறு வயதில் காத்தில் பறக்க விட பட்டம் வாங்குவதும் சிரமமாகவே இருந்தது. அதற்காக பிளாஸ்டிக் (பிளாஸ்டிக் கவர்களை தடை செய்வோம் ) கவர்களை சதுரங்கமாக கிழித்து, சீவங்குச்சிகளை சரியாக வைத்து அதனை நூலால் கட்டி, பல கலவைகளால் மாஞ்சா நூல்கள் செய்து டீல் விடுவோம். டீலில் அறுபட்ட பட்டங்களை புடிக்கப் போய், வன்மத்தில் விழுவோம். ஓடியாடி பல கோடை விடுமுறைகளையும் கழித்துள்ளோம் . நீச்சல் குளத்துக்குச் சென்று நீந்த காசு கொடுக்காமல், ஓடிவரும் ஆற்றில் குதித்து எதிர் நீச்சல் அடித்துள்ளோம் . பள்ளியை முடித்து வெளியே வரும் போது பாட்டி கடையில் விற்கப்படும் தேன் மிட்டாய், கடலை மிட்டாய், ஜவ்வு மிட்டாய்....இன்னும் நிறைய இருக்கிறது, வாங்கித் தின்போம். அதெல்லாம் இப்போதும் கிடைக்கின்றது. ஆனால் அதன் சுவையும், தரமும் பிளாஸ்டிக் கவர்களில் அடைபட்டு விட்டது.

குழந்தைப் பருவத்தில் அப்பாவின் நோக்கியா 1100 கைபேசியில் பாம்பு கேம் விளையாடுவதே அபூர்வமாக இருந்தது. இப்போதெல்லாம் பிறக்கும் குழந்தைகள் செல்ஃபிக்கு போஸ் கொடுத்துக்கொண்டே பிறக்கிறார்கள். பள்ளிக் குழந்தைகளெல்லாம் வெளியில் வந்து விளையாடுவது அரிதாகி வருகிறது. வேகமாகச் செல்லும் இந்த 'க்ளோபலைசேஷன்' உலகில் எல்லாம் மாறிக்கொண்டே வருகிறது. நண்பர்களின் பெயர்கள் கைபேசியில் மட்டும்தான் இருக்கிறது. நினைவுகள் மறந்து கொண்டே செல்கிறது. போகும் போக்கை பார்த்தால், 'ஃபேஸ்புக்' நினைவுகள் மட்டும்தான் ஷேர் செய்ய முடியும் என்ற நிலை வந்துவிடும் போல. இந்த கணினி உலகில் வயதாகி ஃபீல் செய்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும், 'டேக் தட் 2000 கிட்ஸ்'கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.
சந்தோஷ் குமார்