2011ல் தொடங்கிய சிரியா மீதான யுத்தம் உலகின் மிகக் கொடூரமான அகதிகள் பிரச்சனையை உருவாக்கியது. இந்த யுத்தத்தால் சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் அகதிகளாக மாறினார்கள்.
அவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சனையால் பல நாடுகள் அவர்களை அனுமதிக்கவே மறுத்தன. இப்படிப்பட்ட கொடூரமான அகதிகள் வாழ்க்கையை ஓரளவு வசிதியாக மாற்றும் வகையில் புதிய கூடாரம் ஒன்றை கனடாவில் குடியேறிய ஜோர்டான் நாட்டு பெண் கட்டுமான நிபுணர் அபீர் செய்காலி நிறைவேற்றியிருக்கிறார்.
“வீவிங் எ ஹோம்” அதாவது “நெய்யப்படும் இல்லம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கூடாரத்தின் உச்சியில் மழைநீரை தேக்க வசதி இருக்கிறது. பிளாஸ்டிக்கால் வடிவமைக்கப்படும் இந்த கூடாரம் எல்லா கால நிலையையும் தாங்கும் வகையில் அமைக்கப்படுகிறது. பயணத்துக்கும், எளிதில் இடம் மாற்றுவதற்கும் வசதியாக இருக்கிறது.
அடிப்படைத் தேவைக்கான தண்ணீரை மட்டுமின்றி, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையிலும் இந்தக் கூடாரம் உருவாக்கப்படுகிறது. டிசைன் நிறைவு செய்யப்பட்டாலும், உற்பத்தி தொடங்கவில்லை. உற்பத்தி தொடங்கப்பட்டால் இனி அகதிகள் வாழ்க்கை கஷ்டமில்லை என்ற நிலை உருவாகும். யாரும் அகதிகளாகக் கூடாது என்ற நிலையையே நாம் விரும்புவோம்.