இடைத்தேர்தல் நடைபெறயிருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிவாண்டி தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை அதிமுக தலைமை இன்று காலை அறிவித்தது. இதில் நாங்குநேரி தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ரெட்டியார்பட்டி நாராயணன் அறிவிக்கப்படுவார் என்று கட்சியினர் யாரும் எதிர்பார்க்கவில்லையாம். காரணம் சீட் கேட்டு வரிசைகட்டியவர்கள் பெரும் தலைகளாம்.
இதில் முதலில் எதிர்பார்க்கப்பட்டவர் மனோஜ்பாண்டியன். அதன்பிறகு கடந்த முறை நாங்குநேரியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அடுத்து முன்னாள் எம்.பியும் நெல்லை புறநகர் மாவட்டச் செயலாளருமான பிரபாகரன் மற்றும் நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் கணேசராஜா.
இதே போல் திரைப்பட இயக்குனரும் பேச்சாளருமான பி.சி அன்பழகன் மற்றும் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அடுத்து அதிமுக வேட்பாளர் நான் தான் என்று தொகுதி முமுவதும் ரவுண்ட் அடித்து தொகுதியில் பல இடங்களில் இலவச குடிநீர் தொட்டி மற்றும் பள்ளிகூடங்களில் இலவச கட்டிடங்கள், ஊருக்கு ஊர் விளையாட்டரங்கம் கட்டி கொடுத்து சீட் கேட்டு இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் ஸை சுற்றி சுற்றி வந்த அதிமுக மாநில சிறுபான்மை அணி துணைச்செயலாளர் காபிரியேல் ஜெபராஜன்.
இந்த நிலையில் இதில் ஒருவருக்கு தான் வாய்ப்பு என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு சீட் கிடைத்தது. இவர் ஒபிஎஸ் தீவிர ஆதரவாளர். கடந்த முறையும் ஒபிஎஸ் சொல்லி தான் ரெட்டியார்பட்டி நாராயணன் சீட் கேட்டு பணம் கட்டியிருந்தார். ஆனால் ஜெயலலிதா ஒன்றிய செயலாளர் விஜயகுமாரை செலக்ட் செய்தார். அதற்கு பரிகாரமாக தான் ரெட்டியர்பட்டி நாராயணனுக்கு சீட் கொடுத்தியிருக்கிறார் ஒபிஎஸ்.
நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 1986-ல் அதிமுக வில் இணைந்து தொடர்ந்து அந்த கட்சியிலே இருந்து வருகிறார். ஜெயலலிதா முதல்வாரன 1991-ல் இருந்து 1996 வரை கிளைச்செயலாளர், 1996-ல் ரெட்டியார்பட்டி பஞ்சாயத்து தலைவர், 2004-ல் பாராளுமன்ற தேர்தலில் பாளையங்கோட்டை தேர்தல் பணிக்குழு உறுப்பினர், 2009 பாராளுமன்ற தேர்தலில் நாங்குநேரி சட்டமன்ற தேர்தல் பணிக்குழு உறுப்பினர், அதன்பிறகு 2009-ல் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணைச்செயலாளர் மற்றும் 2011-ல் புறநகர் தெற்கு மா.து.செ. அதனைத் தொடர்ந்து 2013-ல் இருந்து எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பவளச்செல்வி காவல்துறை உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்தில் ரெட்டியார்பட்டி நாராயணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் அதிமுகவில் இணைந்தார்.