Skip to main content

உ.பி என்ன மாநிலமா அல்லது பெண்களை கொல்லும் சுடுகாடா..? - எவிடென்ஸ் கதிர் காட்டம்!

Published on 02/10/2020 | Edited on 02/10/2020
ரகத

 

உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார். பட்டியல் இனத்தை சேர்ந்த அந்த பெண்ணை இரவோடு இரவாக காவல்துறையினர் எரித்து அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியது.

 

இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய அரசியில் கட்சி தலைவர்களும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தின் வடுவே இன்னும் ஆறாத நிலை இன்று காலை மற்றொரு பெண் அதே போல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பலாத்காரங்கள் ஏன் தொடர்ந்து நடைபெறுகிறது, இதற்கும் சாதிக்கும் தொடர்பு உள்ளதா, இதனை எப்படி தடுப்பது போன்ற பல்வேறு கேள்விகளை நாம் சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் அவர்களிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

உத்தரபிரதேசத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் நேற்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். எலும்பு உடைக்கப்பட்டு, நாக்கு வெட்டப்பட்டு கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. அதையும் தாண்டி அந்த பெண்ணின் சடலத்தை அவர்களின் பெற்றோரிடமே காட்டாமல் எரித்துள்ளனர். இதற்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள், காவல்துறையின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறீர்களா? இதுதொடர்பாக நீங்கள் காட்டமாக கருத்து தெரிவித்து இருந்தீர்களே?

 

வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை நான்கு உயர் சாதியை இளைஞர்கள் கடத்திச் சென்று சென்று பூட்டிய வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். எந்த நாட்டிலாவது இந்த மாதிரியான கொடூர சம்பவங்கள் தற்காலத்தில் கேள்விப்பட்டுள்ளீர்களா? இளம் பெண்ணை மனித வதை செய்து கொன்றுள்ளார்கள். அந்த பெண்ணை நாக்கை அறுத்து, கழுத்தை காயப்படுத்தி, முதுகு தண்டை உடைத்து கொடுமையான முறையில் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே 22 வயது இளம் பெண் கொடுமையான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். அப்படி என்றால் அங்கு என்ன நடைபெற்று வருகின்றது, பெண்களுக்கு அந்த மாநிலத்தில் ஏதாவது பாதுகாப்பு இருக்கின்றதா? உத்தரபிரதேசம் என்ன நாடா? அல்லது சுடுகாடா?  அங்கு பெண்கள் வாழ முடியாதா, இது சுதந்திர நாடா அல்லது கொடுங்கோல் நாடா என்பது தெரியவில்லை. 

 

அந்த மாநில முதல்வர் யோகி ஒரு கேவலமான நிர்வாகி, உலகத்தில் இந்த மாதிரியான ஒரு கேவலமான ஆட்சியை இதுவரை யாரும் கொடுத்திருக்க மாட்டார்கள். பெண்களை பலாத்காரம் செய்பவர்களை காப்பாற்றும் ஒரு ஆட்சியை இவர்கள் தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள். தன் மக்கள் மீது மற்றொரு பிரிவினர் தாக்குதல் நடத்துவதை இவர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள். அண்மையில் சிறுமி ஒருத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்டார். இதுவரை அது தொடர்பாக எந்த ஒரு சரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக ஒரு காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார், அந்த கும்பத்துக்கும் இறந்து போன பெண்ணின் குடும்பத்துக்கும் ஏதோ முன்விரோதம் இருந்தது, அதனால் தான் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது என்ற தொணியில் அவர் தெரிவித்துள்ளார். முன்விரோதம் இருந்தால் கொலை செய்யலாம் என்று கூறுகிறாரா என்று தெரியவில்லை. மாநில அரசு அந்த மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு தர மறுப்பதோடு மட்டுமில்லாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றது என்பது மட்டும் நிஜம்.