அது ஒரு அழகான 60களின் மத்திய பகுதி, நாட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் நேரு தான் காரணம் என்று எவரும் கூறாத காலகட்டம் அது, பீகாரின் மிக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இளைஞனுக்கு காவல்துறையில் மிக முக்கிய பொறுப்பு கிடைக்கிறது. தாய் தந்தையர்கள் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். உற்றார் உறவினர்கள் கொண்டாடுகிறார்கள். அந்த இளைஞன் தனக்கு மிகவும் பிடித்த கயிற்று கட்டில் அமர்ந்துகொண்டு ஒரு நிமிடம் அந்த அழைப்பு கடிதத்தையே பார்த்தான். மக்களை பாதுகாக்கும் பொறுப்பை வேலையாக செய்யாமல் வாழ்க்கையாக செய்ய வேண்டும் என்று அந்த கணம் முடிவெடுத்தான்.
தன்னை போன்று அடிதட்டில் இருந்து வரும் இளைஞர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்த அவன், கடிதத்தை தூக்கி எறிந்துவிட்டு சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி தன்னுடைய பார்வையை செலுத்தினார். நாடாளுமன்றம் அவனை கட்டி அணைத்தது எட்டு முறை, நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்து புதிய சாதனை படைத்தான். ஆடம்பரத்துக்கு அடிபணியாதவர், அன்புக்கு கட்டுப்பட்டவர், வாழும் வரை தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவரை நாம் இழந்துள்ளோம். ஆம், பீகாரின் ஒடுக்கப்பட்ட மக்களின் கதாநாயகன்களில் ஒருவரான ராம் விலாஸ் பாஸ்வானை நாம் இழுந்துள்ளோம்.
பீகார் பெரிய பெரிய அரசியல் தலைவர்களை தொடர்ந்து நாட்டுக்கு தந்து வருகிறது என்பது எவ்வளவு உண்மையோ, அதைவிட பெரிய அதிசயம் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளின் மீது வைத்திருக்கும் தீரா காதல். தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முடிவெடுத்த அவர் 1969ம் ஆண்டு எந்த பெரிய கட்சிகளின் சார்பாகவும் அவர் சட்டமன்ற தேர்தலில் நிற்கவில்லை. சாதாரணமாக எவ்வித படாபடோமும் இன்றி தனியாக கொள்கையை சொல்லி தேர்தலில் நின்றார், அபார வெற்றியும் பெற்றார். தன்னுடைய வெற்றி தன்னுடைய மாநிலத்திலேயே சுருங்கி விடக்கூடாது என்று தனது பார்வையை நாடாளுமன்றத்தை நோக்கி செலுத்தினார். 77ம் ஆண்டு தொடங்கிய அவரின் பயணம் 2020 வரை தொடர்ந்தது. கிட்டதட்ட 6 பிரதமர்களின் கீழ் அமைச்சராக இருந்துள்ளார்.
தமிழகத்தின் மீது தீராத காதல் கொண்டவர். சேலம் உருக்காலை விஷயம் சம்பந்தமாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, மத்திய அரசு எடுத்த கடினமான முடிவை தடுத்தார். இந்தியாவில் எப்போதும் சமூகநீதி இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கூறி மகிழ்ந்தவர். தன்னை எப்போதும் தாழ்த்தி கொண்டவர் இல்லை அவர், தன் தன்மானத்து இழுக்கு வரும் போதெல்லாம் அதனை எதிர்த்து நின்றவர். அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த வாரம் தன் கட்சிக்கு கூட்டணியில் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறி தன்னுடைய நீண்ட கால கூட்டணி தோழனான பாஜகவிடம் இருந்து பிரிந்து வெளியேறி, தன் சுய மரியாதையை எப்போதும் விட்டுகொடுக்க மாட்டேன் என்பதை இந்தியாவுக்கு மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். இன்று நம்மைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். அவரின் நாடாளுமன்ற இடத்தை வேண்டுமானால் வேறு ஒருவர் நிரப்பலாம், ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் மீது அவர் கொண்ட அன்பை மற்றொருவர் நிரப்புவது என்பது மிக கடினமான ஒன்று என்பதை காலம் நமக்கு உணர்த்தும். போய் வாருங்கள் பாஸ்வான்...