தமிழ் சினிமாவில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை, பாடல்கள், நடிப்பு என எல்லா ஏரியாவிலும் கைவைத்து ஜொலித்தவர்கள் சிலருண்டு. டி.ராஜேந்தர் அவற்றில் பிரதானமானவர். ஆனால் ஒரே நேரத்தில் பல்வேறு பொறுப்புகளில், பல பதவிகளை வகிக்கும் ஒரு அரிய அதிகாரியைப் பார்த்திருக்கிறீர்களா?'…அவரைப் பற்றியதுதான் இந்த செய்தி.
நக்கீரனைத் தொடர்புகொண்ட வாசகர் ஒருவர், ""என் பெயர் ஜிலானி, நான் தனியார் மருந்து கம்பெனியில் மார்கெட்டிங்கில் வேலை செய்து வருகிறேன். என் மனைவி ஃபரிதாபேகம், காஞ்சிபுரத்தில் தனியார் மருத்துவமனை செவிலியர். எங்களின் இரு மகள்களின் படிப்புக்காக சென்னை தாம்பரத்தில் தற்காலிகமாக குடியிருக்கிறேன். சொந்த ஊரான காஞ்சிபுரம் அசோக் நகரில் நீண்ட நாட்களாக வாடகை வீட்டில் இருந்துவந்தோம். புரோக்கர் ஒருவர் மூலம் அதே பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல்தளத்தில் ஒரு வீடு விற்பனைக்கு வந்தது. கடந்த ஜனவரி மாதம் வீட்டைப் பார்க்க என் மகளும், மனைவியும் போனார்கள்.
அதன்பின் எங்கள் நம்பருக்கு பேசிய ஜெயக்குமார் துரைசாமி, "நீங்கள் வாங்கப்போகும் வீட்டின்மேல் வழக்கு உள்ளது. நேரில் வந்தால் பேசலாம்' என்று கூறினார், ஜனவரியில் 26-ஆம் தேதி அவர் வீட்டில் நேரில் சந்தித்தோம்.
நான், ஜெயக்குமார் துரைசாமி, தமிழக லோக் ஆயுக்தா தலைவர்...’என்று தொடங்கி இன்னும் பல புரியாத பதவிகள் பற்றி கூறினார். அவர் வீட்டு வாசலில் பல பதவிகளில் இருப்பதாக போர்டு எல்லாம் மாட்டியிருந்தது. "நீங்கள் வாங்கப்போகும் வீட்டின்மேல் வழக்கு இருக்கு. அதையெல்லாம் வாபஸ் பெற எனக்கு இரண்டரை லட்சம் கொடுக்கவேண்டும், நான் அழைத்தால் எஸ்.பி., ஐ.ஜி. எல்லாரும் வீட்டுக்கே வந்து பதில்கூறுவார்கள். என்னை பகைத்தால் யாரையும் வாழ விடமாட்டேன்'’என்று மிரட்டினார்.
வீட்டு உரிமையாளர் கதிரவனை நேரில் சந்தித்து விவரத்தைக் கூறினோம். அவரோ, "அவன் ஓர் டுபாக்கூர், அவன் வழக்கறிஞரே கிடையாது'’என்று கூறி விளக்கினார். வீடு பிடித்திருந்ததால் பன்னிரண்டு லட்சத்திற்கு வீட்டை வாங்கினோம். கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி, இரவு 10 மணிக்கு என் மனைவிக்கு வாட்ஸப் மெசேஜ் அனுப்பி மிரட்டிய ஜெயக்குமார், அடுத்தநாள் என் வீட்டு கதவில் பல ஆண்டுகளாக மெயிண்டனன்ஸ் பாக்கி தரவில்லை என்பதால் இந்த கதவைத் திறக்கக்கூடாது என்று "ஃபியுப்புல் ஃபோரம் ஆப் இந்தியாவின் தேசியத் தலைவர்' (PEOPLE FORUM OF INDIA ) என்று பச்சை மையில் கையொப்பமிட்டு கதவில் நோட்டீஸ் ஒட்டியிருந்தார்.
நாளுக்கு நாள் தொல்லை அதிகமானதால் அவர் கூறிய விவரங்களைச் சரிபார்த்தபோது, லோக் ஆயுக்தாவின் தமிழக தலைவர் முன்னாள் நீதிபதி தேவதாஸ்னு தெரியவந்தது. சரி வழக்கறிஞர்னு சொன்னாரேனு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்டால் "இந்த ஆளு வழக்கறிஞரே கிடையாது'னு பதில் வந்துச்சு. அடுத்த அவதாரம் டாக்டர் பட்டம். எந்த பல்கலைக்கழகம் வழங்கியதென்றே தெரியவில்லை. லெட்டர் பேடுல எம்.டி., எம்.பி.ஏ., எல்.எல்.பி. பட்டங்களும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தேசிய உறுப்பினர், பி.எஃப்.ஐ. தேசிய சேர்மேன், தமிழக லோக் ஆயுக்தா தலைவர் என போட்டிருக்கும் பட்டியலைப் பார்த்தா விவரம் தெரியாத அப்பாவிங்க மிரண்டு போயிடுவாங்க.
பேஸ்புக்ல முஸ்லிமா மதம் மாறி ஹஜ்க்கு போனமாதிரி போட்டோ வைச்சிருக்கார். எண் கணிதம், ஜோதிடம் மற்றும் மருத்துவ ஜோதிட ஆராய்ச்சியாளர்னு ஒரு லேபிள். அனைத்து நீதிமன்றங்களின் தன்னார்வ சட்டப் பிரதிநிதி வேற... பி.இ., பி.டெக். பட்டப் படிப்பு, தேசிய மற்றும் மத்திய அரசு சார்பு பத்திரிகை குற்றப்பிரிவு நிருபர், ஆல் மீடியா, பிரஸ் ஜர்னலிஸ்ட் துணைத் தலைவர் பதவி ஐ.டி. கார்டு, "தனி அரசாங்கம்' என்ற தலைப்பில் சிறப்பு தலைவர் பதவி, தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணை யத் தலைவர் பதவி...…மொத்தத்துல நான் கடவுள்னு மட்டும்தான் போட்டுக்கலை. இவர் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பா காஞ்சிபுரம் தாலுகா காவல் ஆய்வாளர் பாஸ்கரனிடம் புகாரளித்தும் பலனில்லை. அதேபோல காஞ்சி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தோம், பேருக்கு வழக்குப் பதிவானதே தவிர, கைது செய்யவில்லை'' என்கிறார் வருத்தமாக.
இந்த மோசடிமன்னன் மீது புகார்கள் குவிந்து வருகின்றன. இவரைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவர், ஜெயக் குமார் பெண்ணை மிரட்டியது, டாஸ்மாக்கை மிரட்டியது போன்ற பல கதைகளைப் பேசினார்.
தமிழக லோக் ஆயுக்தாவின் உறுப்பினர் ராஜாராமிடம் பேசினோம், "இந்த பெயரில் லோக் ஆயுக்தாவில் யாரும் கிடையாது'’என்றார். "லோக் ஆயுக்தா தலைவர்' என்று சொல்லி மோசடியில் ஈடுபடுவதால், தமிழக லோக் ஆயுக்தா பிரமுகர்களே இந்த டுபாக்கூர் மீது புகார் கொடுத்து உள்ளே தூக்கி வைக்கலாமே!