இரவு 12.20... சென்னை... தி.நகர்... பகலில் பரபரப்பாக இருக்கும் ரங்கநாதன் தெருவுக்கு சற்று தள்ளி... ஒரு சைக்கிளில் கேனுடன் நின்று கொண்டிருந்தவரை சுற்றி ஒரு பத்து பேர்... திடீரென அந்த வழியே பைக்கில் சென்றவர்கள் இருவர், ‘போலீஸ்... போலீஸ்’ என்று கத்திவிட்டு செல்ல, கல்லெரிந்து கலைக்கப்பட்ட பறவை கூட்டம் போல அங்கிருந்தவர்கள் சிதற, சைக்கிளை சடாரென சந்துக்குள் திருப்பி மறைந்தார் அவர். சில நிமிடங்களில் போலீஸ் வரவில்லை எனத் தெரிந்து ‘இப்படித்தான் வெளாடுவானுக...’ என்று சிரிப்போடும் கடுப்போடும் மீண்டும் வந்து வியாபாரத்தை தொடர்ந்தார். அப்படி என்ன விற்கிறார்? தேனீர்... நம் தேசிய பானம்தான், வேரொன்றுமில்லை.
இரவு நேர சென்னையில் பதினோரு மணிக்கு மேல் என்னதான் நடக்கும் சென்னை சாலைகளில் என்றறிய ஒரு ரௌண்டு வந்தோம். அப்போதுதான் இந்தக் காட்சியை கண்டோம். இருளில் நடக்கும் மர்மம், குற்றங்கள் எல்லாம் வேறு வகை. நம்ம அதுக்கு சரிப்பட்டு வர மாட்டோம். இன்னொரு பக்கம், நம்மை போலவே, எந்தத் தீங்குமில்லாத, சாதாரண மக்களில் இருந்து ஒரு கூட்டம், இரவில் சுற்றுகிறது. அவர்களுக்கு ஆதரவாக, அடைக்கலமாக இருப்பவர்கள் டீக்கடைக்காரர்கள். பகலில் இயங்கும் கடைகள் அல்ல இவை. நீங்கள் சாலைக்கு வந்தால் போதும். உங்களை தேடி டீ மட்டுமல்ல, டீக்கடையே வரும்... ஏன் ஒன்றுக்கும் மேற்பட்ட டீக்கடைகள் கூட வரும்.
ஆம்! நடமாடும் டீக்கடைகள். இந்த டீக்கடைகள் அமைந்திருப்பது, பெரும்பாலும் சைக்கிள்களில், சில மோட்டார் சைக்கிள்களில். சைக்களில் தானே வருகிறார்கள், டீ மட்டும்தான் இருக்கும் என நினைத்துவிட வேண்டாம். உண்மையில் உள்ளே ஒரு டீக்கடை இருக்கும். சாதா டீ, இஞ்சி டீ, காபி என அந்த டீக்கடைகளில் கிடைக்கும். அது மட்டுமா? சமோசா, சிப்ஸ் பாக்கெட்கள், பிஸ்கட், சிகரெட் என அத்தனையும் இந்த நடமாடும் டீக்கடைகளில் கிடைக்கும். நடமாடும் இந்த டீக்கடைகளின் வாடிக்கையாளர்கள் பல வகை. இரவு நேரத்தில் தூக்கம் வராமல் சுற்றுபவர்கள். வெளியூர் போக பேருந்துக்காகக் காத்திருப்பவர்கள், காரில் வெளியூர் போய்விட்டு சென்னை திரும்புபவர்கள், லாரி டிரைவர்கள், லோட் ஏற்றி இறக்குபவர்கள் என பெரிய கூட்டமே இருக்கிறது. ஏன் பல வேலையில்லாத பட்டதாரிகளுக்கு, இந்தக் கடைகளின் டீயும் சிப்ஸும்தான் இரவு உணவே. ஒரு நாளைக்கு 50 கப்கள் ஓடும். வியாபாரம் நன்றாக இருந்தால் 60 கப்கள் ஓடும் என்றார் ஒரு டீ கடைக்காரர்.
ஒரு டீ 10 ரூபாய், காபி 15 ரூபாய் என்பது இந்தக் கடைகளின் பொது விலைப்பட்டியல். சிகரெட்டுகள் மட்டும், வழக்கமான பெட்டிக் கடைகளை விட இரண்டு ரூபாய் அதிகம். ஆனாலும் இது கடைகளை பொறுத்து மாறும். வழக்கமான டீக்கடைகளில் கூட நீங்கள் காசு எடுத்து சென்றுதான் டீ குடிக்க வேண்டியதிருக்கும். ஏன் சில்லறை எடுத்து செல்வது கூட கட்டாயமாக இருக்கும். ஆனால் சில நடமாடும் டீக்கடைகளில், அது தேவையே இல்லை. ஏனென்றால் சைக்கிள் வேண்டுமானால் பழையதாக இருக்கலாம். ஆனால் அதன் உரிமையாளர்கள் அப்டேட்டடாக இருக்கிறார்கள், கூகுள் பே, போன் பே, QR கோடு ஸ்டிக்கர்களை சைக்கிளின் பின்னால் ஓட்டுமளவுக்கு. அந்த ஸ்டிக்கர்கள், டிஜிட்டல் இந்தியாவின் 'பணமில்லா பொருளாதாரம்' என்ற வார்த்தை முழுவதுமாக பயன்பாட்டிற்கு வந்துவிட வாய்ப்பு இருக்கிறதென்பதை என்பதை சொல்லாமல் சொல்கின்றன.
இரவு நேரத்தில், காபியோ டீயோ கிடைக்குமாவென யோசிப்பவர்களுக்கு, அவற்றை சுட சுட கொண்டுவந்து தரும் இவர்கள், முழு நேரமும் டீ விற்பவர்கள் அல்ல. வருமானத்திற்காக இரவு நேரத்தில் அவர்கள் எடுக்கும் தற்காலிக அவதாரமே அது. ஆட்டோ ஓட்டுனர்கள், பகலில் ஓட்டல்களில் பராட்டோ மாஸ்டர்களாக இருப்பவர்கள் என வேறு வேறு தொழில் செய்பவர்கள் இவர்கள். இவர்களுக்கு டீ தயார் செய்து தருவதற்கு என ஒரு கம்பெனியே உள்ளது என்பதுதான் ஆச்சரியமான விஷயம். இரவில் டீ விற்கும் சிலர் மட்டுமே தங்கள் வீட்டிலேயே டீ, காபி தயார் செய்து விற்பனைக்குக் கொண்டு வருகிறார்கள்.
"சாயங்காலம் 3 மணிவரை ஆட்டோ ஓட்டிட்டு, நைட்ல டீ விப்பேன் சார்... சில சமயம் ஆட்டோ ஓட்டிட்டு வர்றப்ப டயர்டா இருக்கும். அன்னைக்கெல்லாம் போய் படுத்துருவேன். ரொம்ப டயர்டா இருக்கதுனால ஒரு நாளு விட்டு ஒரு நாளு விக்கிறேன்" என்றார் ஒரு அண்ணன். இவ்வாறு கஷ்டப்படுபவர்கள் போலீசாரையும் சமாளிக்க வேண்டியுள்ளது. பொதுவாக டீ விற்கும்போது போலீஸ் வந்தால் அருகிலுள்ள சந்து பொந்துகளில் சென்று மறைந்து விடுவார்கள். இதை அடிக்கடி கவனிக்கும் இரவு நேர வாகன ஓட்டிகள், வேண்டுமென்றே போலீஸ் வருவதாக கத்தி, கிண்டல் செய்துவிட்டு செல்வார்கள். அந்தளவிற்கு போலீசார்க்கும், இவர்களுக்கும் அப்படி ஒரு உறவு. ஆனால் சிலசமயங்களில் போலீசாருக்கு முன்பே நின்று டீ விற்பதும் உண்டு.
போலீசாரை கண்டு சில சமயங்களில் ஓடி ஒளிப்பவர்கள், சில சமயங்களில் அவர்கள் முன்பே நின்று விற்கும் மர்மமும் என்ன என பெரியதாக நாம் யோசிக்க வேண்டியதில்லை. டீ கடைகாரர் ஒருவரே மர்மத்தை விளக்கினார். வழக்கம் போல ஒரு வாகன ஓட்டி, போலீஸ் போலீஸ் என கத்திவிட்டு செல்ல, அவர் அதுக்கெல்லாம் பயப்படமாட்டேன் என்றார். "சென்னை ரோடு என்ன அவன் அப்பன் வீட்டு சொத்தா?' என பஞ்ச் டயலாக் பேசுவார் என பார்த்தால், அடுத்து அவர் சொன்னது ஆர்வத்தை தூண்டியது. "வெள்ள வண்டி வந்தால் ஓடுவேன், சிவப்பு வண்டிய பாத்தெல்லாம் ஓடமாட்டேன்" என்றார். காரணத்தையும் அவரே சொன்னார். "வெள்ள வண்டில வர்றவங்க பாத்தா வண்டிய ஸ்டேஷன் கொண்டுபோயி கேஸ் போடுவாங்க, 500 ரூபா கேப்பாங்க. சிவப்பு வண்டில வரவங்களுக்கு டெய்லி 100 ரூபா கொடுக்குற நா ஏ பயப்படணும்" என்றார். நல்ல டீலிங் இல்ல?
இரவு நேரத்தில் டீ விற்பவர்களை ஏன் போலீஸ் தடை செய்யவேண்டும்? இன்னொரு டீ கடைக்காரரிடம் கேட்டபோது "இப்போ கோர்னா (கரோனா ) பரவுதாம், அதுனால விரட்டுறாங்க" எனக் கூறிவிட்டு, "இப்போ கரோனானு யாரும் வீட்ட விட்டு வராமயா இருக்காங்க?" என அவர் தரப்பு நியாயத்தை சொன்னார். மேலும் அவர் "இல்லீகலா (illegal) நெறய சம்பவம் நடக்குது. அதுனால போலீஸ் எல்லாரையும் மடக்கி விசாரிக்கிறாங்க. நெறைய பெரு வெளில வரப்ப டீ குடிக்கப் போறான்னு சொல்றாங்களாம். அதுனால எங்கள டீ விக்கக் கூடாதுன்னு சொல்றாங்க. டீதான் விக்கலையே, இப்போ எங்க போறன்னு அவங்கள திரும்ப அனுப்புவங்களாம்” என்றார். இவ்வாறு சொன்னவரின் சைக்கிள் ஒரு முறை போலீசால் ஸ்டேஷன் வரை எடுத்து செல்லப்பட்டு, பின்பு லோக்கல் கட்சி ஆட்களின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டுள்ளது.
இரவில் சென்னை வேறு மாதிரி இருக்கிறது. பகலின் சென்னை அவசரங்கள் மிகுந்தது. அந்த சென்னையில் இயங்குபவர்கள் வேறு மாதிரி. இரவின் சென்னை கொஞ்சம் அமைதி, கொஞ்சம் இருள், கொஞ்சம் மர்மம், கொஞ்சம் சாகச மனநிலை எல்லாம் கலந்தது. இந்த சென்னையில் இயங்குபவர்கள் வேறு மாதிரி. இரவுச் சென்னையின் முக்கியமான அம்சமாக இருக்கிறார்கள் இந்த டீக்கடைக்காரர்கள். கண்ணசந்து தூங்கி விழும் சென்னையை தட்டி எழுப்பி டீக்கொடுத்து இயங்க வைக்கிறார்கள்.