Skip to main content

குஜராத் தொடர் வெற்றிக்குக் காரணம் - சித்தாந்தமா? மோடியா?

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

ghk

 

இந்த ஆண்டிற்கான உச்சக்கட்ட பரபரப்பு இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகள் எல்லாம் இந்த முறையாவது ஏதாவது மாற்றம் நடைபெறுமா அல்லது எப்போதும் போலவே பாஜகதானா? என்கிற ஆவலோடு காத்திருக்கிறார்கள் குஜராத் சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கி. கிட்டதட்ட 24 வருடங்களாக ஆறு சட்டப்பேரவை தேர்தல்களாக பாஜகவே இங்குத் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறது.

 

கடந்த முறை பாஜகவின் வெற்றி என்பது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று கூறப்பட்டாலும், அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத் தகுந்த வெற்றியை மாநில பாஜக பதிவு செய்தது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. 

 

இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட இருக்கிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே இத்தனை ஆண்டுகள் ஒரு கட்சி தொடர்ந்து ஆட்சி செய்வது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் ஜனநாயக கட்சித் தலைவர் பவன் குமார் சாம்லிங் தொடர்ந்து 24 வருடம் 165 நாட்கள் முதல்வராக இருந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு அடுத்தாக மேற்கு வங்கத்தில் ஜோதி பாசு 23 வருடம் 137 நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். 

 

இவர்கள் இருவரும் தற்போது பதவியில் இல்லாத நிலையில் 22 வருடம் 249 நாட்களாக முதல்வராகத் தொடர்ந்து இருந்து வருபவர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். இவர் மட்டுமே தற்போது 20 வருடத்தைக் கடந்து முதல்வராகப் பதவியில் இருக்கும் ஒரே நபர். இந்த பதவிக்காலம் 2024ம் ஆண்டு வரை இருப்பதால் ஆட்சிக் காலம் நிறைவடையும்போது இந்தியாவில் அதிக காலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனை அவர் படைத்திருப்பார்.

 

இந்த சாதனைகள் எல்லாம் இந்த குறிப்பிட்ட மூன்று முதல்வர்களை முன்னிறுத்திப் பெற்றதாக இருந்தாலும், குஜராத்தில் அரசியல் நிலைமை என்பது முற்றிலும் வேறாகவே இன்றளவும் இருக்கிறது. 2001ம் ஆண்டு கேஷூபாய் பட்டேல் குஜராத் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை அடுத்து தற்போதைய பிரதமர் மோடி அப்போது முதல்வராகப் பதவியேற்றார்.

 

அன்றிலிருந்து கிட்டதட்ட 13 ஆண்டுகள் அவர் முதல்வராகத் தொடர்ந்து நீடித்து வந்தார். மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு நடைபெற்ற அடுத்த இரண்டு சட்டப்பேரவை தேர்தல்களிலும் பாஜகவைச் சேர்ந்தவரே முதல்வராக வெற்றி பெற்றுள்ளார். தனிப்பட்ட நபரையும் தாண்டி சித்தாந்தமாகவே குஜராத் மக்கள் பாஜகவை விரும்புகிறார்களோ என்ற கேள்வியையும் தொடர்ச்சியாக அவர்கள் பெறும் வெற்றி எழுப்பி வருகிறது.