Skip to main content

இவர்தான் நிஜ 'அறம்' நயன்தாரா?

Published on 18/11/2017 | Edited on 18/11/2017
இவர்தான் நிஜ  'அறம்' நயன்தாரா?  

அரசியலுக்காக ஐ.ஏ.எஸ் பதவியை துறந்தவர் 





'அறம்' திரைப்படம் மக்களால் அரவணைத்துக்   கொள்ளப்பட்டிருக்கிறது. நயன்தாராவின் நேர்த்தியான நடிப்பு, படத்தில் பேசப்பட்ட மக்கள் அரசியல், அறிவியலின் தோல்வி, எளிய மக்களின் புறக்கணிப்பு, ஒடுக்கப்பட்டோர் உயிருக்கிருக்கும் மதிப்பு என அனைத்தின் நீட்சியும் வெளியில் தொடர்ந்து பேசப்படுகிறது. படம் சொல்லும் கருத்துகளைத் தாண்டி, விறுவிறுப்பும் சிறந்த ஆக்கமும் உடைய வெற்றிப்படமாகவும் நடைபோடுகிறது கோபி நயினாரின் 'அறம்'. 






இது அத்தனையும் தாண்டி, அதிகம் பேசப்படாத ஒன்று இருக்கிறது. 'அறம்' படத்தின் இறுதியில், மக்களுக்கான சேவைகளுக்கும் செயல்பாட்டுக்கும் தடையாக இருக்கும் தன் பதவியைத் துறந்துவிட்டு, அதற்கு தேவையான அதிகாரத்தைப் பெற அரசியலில் நுழைவார் மதிவதனி ஐ.ஏ.எஸ் (நயன்தாரா). இதே போல 2008 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலில் ஈடுபட தன் ஐ.ஏ.எஸ் பதவியை துறந்தவர்   சிவகாமி ஐ.ஏ.எஸ். 1980ம் ஆண்டு தொகுப்பில் ஐ.ஏ.எஸ் பதவியேற்ற இவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகவும் பின்னர் பல உயர்ந்த பொறுப்புகளையும் வகித்தவர். பல்வேறு நாடுகளுக்கு இந்திய அரசு பணிகளுக்காக பயணித்தவர். தன் பதவியிலும், அரசு பணிகளிலும் சாதி ரீதியான ஏற்ற தாழ்வுகளை சந்தித்து, அதனைப் பற்றி, நாவல், குறும்படங்கள் வடிவில் பேசியவர். 1986இல் இவரது  முதல் நாவலான 'பழையன கழிதலும்' வெளியானது. 1990இல் 'ஊடாக' எனும் குறும்படத்தை இயக்கினார். பணியிலும், வெளியிலும் ஒடுக்கப்பட்டோருக்கான குரலாகத் திகழ்ந்த இவர் 2003இல் இருந்து 'தலித் நிலஉரிமை இயக்கத்தில்' தீவிரமாக செயலாற்றினார். 

தான் விரும்பிய மாற்றத்தை சாதிக்க தன் அரசு  பணி  போதாது, அதைத் தாண்டிய அதிகாரம் வேண்டுமென   உணர்ந்த இவர், 2008இல் விருப்ப ஓய்வு பெற்று, பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து, 2009இல் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றிய இவர், 2009இல் 'சமூக சமத்துவ படை' என்ற கட்சியைத் துவங்கினார். தருமபுரியில் தலித்துகள் குடியிருப்பில் நடந்த தாக்குதல், டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை உட்பட பல பிரச்சனைகளிலும் உறுதியாகக் குரல் கொடுத்தவர், செயலாற்றி வருபவர். இவரது தந்தை பழனிமுத்து ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தலித்துகளுக்கு வழங்கப்படாத நிலத்தையும், அவர்களுக்கென ஒதுக்கி செலவழிக்கப்படாத நிதியையும் கேட்டு  தொடர்ந்து குரல் கொடுப்பவர். இந்த விஷயத்தில் திராவிட கட்சிகளையும், திருமாவளவனையும் கூட விமர்சித்தவர்.  






இப்படி அரசியல்வாதிகளின் அழுத்தத்தைத் தாண்டிய  தைரியமான பெண், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பணி, அதற்காக பதவியை துறந்தது என பல வகையிலும் சிவகாமி ஐ.ஏ.எஸ்ஸைப் போல இருக்கிறார் மதிவதனி ஐ.ஏ.எஸ் என்ற 'அறம்' நயன்தாரா. ஆனால், ஒரே ஒரு மிகப்பெரிய முரண் இருக்கிறது. நயன்தாராவின் பாத்திர பெயரான மதிவதனி, 'விடுதலை புலிகள்' தலைவர் பிரபாகரனின் மனைவி பெயர். சிவகாமி, சில ஆண்டுகளுக்கு முன் கலந்து கொண்ட ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், 'விடுதலை புலிகள், அமைப்பின்  பெண்களை தவறாக பயன்படுத்திக்கொண்டனர்' என்ற குற்றச்சாட்டை போகிற போக்கில் வைத்து கடும் விமர்சனங்களுக்கு ஆளானார் என்பது தான் அது.

வசந்த் 

சார்ந்த செய்திகள்