Skip to main content

"இன்று மணிப்பூரில் நடப்பது நாளை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம்" - முனைவர் ராமசுப்ரமணியம் விளக்கம்!

Published on 25/07/2023 | Edited on 25/07/2023

 

Ramasubramaniam Interview

 

மணிப்பூர் விவகாரம் குறித்த தன்னுடைய கருத்துக்களை விரிவாக மூத்த அரசியல் விமர்சகர் முனைவர். ராமசுப்பிரமணியன் எடுத்துரைக்கிறார் 

 

மணிப்பூர் விவகாரம் என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை. முதலில் பிரதமர் நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும். இது குறித்த விவாதம் நடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர். பிரதமர் நேரடியாகப் பதிலளிக்க வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு. ஐரோப்பிய யூனியனில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இது குறித்துப் பேசியுள்ளார். உலகமே இப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதித்து வருகிறது. அதனுடைய முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

காங்கிரஸ் ஆட்சியில் நிர்பயா விவகாரம் நடந்தபோது அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் தொலைக்காட்சியில் வந்து மக்களுக்கு வாக்குறுதியையும் நம்பிக்கையையும் அளித்தார். ஆனால், மணிப்பூர் விவகாரத்தில் இத்தனை நாட்கள் கழித்துப் பிரதமர் மோடி வெறும் 30 நொடிகள் பேசுகிறார். பெண்களை நிர்வாணமாகத் தெருவில் இழுத்து வரும் காட்சிகள் மனதைப் பதைபதைக்க வைத்தன. மணிப்பூரில் மெஜாரிட்டியாக இருக்கும் மெய்தேய் இன மக்களுக்கு ஆதரவாக அங்குள்ள முதலமைச்சர் இருக்கிறார். இவ்வளவு நடந்தும் அவர் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. இப்போது குக்கி பழங்குடியின மக்கள் மியான்மரில் இருந்து வந்தவர்கள் என்று பாஜகவினர் கதை கட்டி வருகின்றனர். 

 

அரசுக்குச் சம்பந்தமே இல்லாத நிர்பயா விஷயத்தில் பாஜகவினர் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தினர். மணிப்பூர் விஷயத்தில் இந்த வீடியோ மட்டும் வெளிவராவிட்டால் ஒட்டுமொத்த வன்முறையையும் மூடி மறைத்திருப்பார்கள். இது போன்ற நூற்றுக்கணக்கான விஷயங்கள் நடந்திருக்கின்றன என்று அந்த மாநில முதலமைச்சரே சொல்கிறார். உள்துறை அமைச்சருக்கு இது எதுவுமே தெரியாதா? இன்று மணிப்பூரில் நடப்பது நாளை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். மெஜாரிட்டி இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.

 

அனைத்து மதங்களும் தழைத்தோங்கும் நாடு இந்தியா. இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் இருப்பதால் அமெரிக்காவுக்கு மோடி சென்றபோது அவருடைய பேச்சைச் சிலர் புறக்கணித்தனர். ஒபாமாவும் இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை குறித்து விமர்சித்தார். மற்ற மாநிலங்களிலும் குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் ஒரு இனத்தையே அழித்துவிட வேண்டும் என்கிற வகையில் வன்முறைகள் நடப்பதில்லை. மணிப்பூரில் இப்போது குக்கி இன மக்கள் உயிருக்குப் பயந்து வாழ்ந்து வருகின்றனர். வானதி சீனிவாசன் எப்போதும் கட்சி சார்ந்து தான் பேசுவார். 

 

குஷ்பூ ஒரு சிறந்த நடிகை. தன்னை திமுகவைச் சேர்ந்த ஒரு பேச்சாளர் விமர்சித்து விட்டார் என்று அவ்வளவு கோபப்பட்டார். ஆனால் பெண்களுக்கு ஒரு பிரச்சனை நடந்தால் குரல் கொடுக்க அவர் வருவதில்லை. நடிப்பையே தன்னுடைய வாழ்க்கையாக அவர் மாற்றிக்கொண்டுள்ளார். ஸ்மிருதி இராணியும் அப்படித்தான். உச்சநீதிமன்றம் மணிப்பூர் விவகாரம் குறித்துப் பேசிய பிறகுதான் பிரதமர் பேசுகிறார். மணிப்பூரில் இருக்கும் கிறிஸ்தவர்களை அழிக்க வேண்டும் என்று இவர்கள் நினைக்கின்றனர். இதற்கான எதிர்வினை நிச்சயம் இருக்கும்.
 

மணிப்பூர் பிரச்சனை தொடர்பான முனைவர் ராமசுப்ரமணியம் முழு கருத்தினை காண வீடியோ லிங்கை கிளிக் செய்யவும்...