Skip to main content

பிரதமர்-கவர்னர் சந்திப்பு!  பதட்டத்தில் எடப்பாடி!

Published on 08/12/2018 | Edited on 08/12/2018

                                

modi


 

பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கையும் சந்தித்து விவாதித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்! இந்த சந்திப்பைத் தொடர்ந்து எடப்பாடி தரப்பில் ஏகத்துக்கும் பதட்டம் தெரிகிறது. 

 

காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணையை கட்டுவதற்கான திட்ட வரையறைக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் முடிவை கண்டிக்கும் வகையில், மத்திய பாஜக அரசுக்கு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானத்தை கடந்த 6-ந்தேதி நிறைவேற்றியது எடப்பாடி அரசு.
 


மத்திய மோடி அரசை நேரடியாக பகைத்துக்கொள்ளும் வகையில் இதுவரை எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை முதல்வர் எடப்பாடி. ஏன், கடிதம் கூட கண்டித்து எழுதப்பட்டதில்லை. அப்படிப்பட்ட சூழலில், கர்நாடக அரசு கட்டத்துடிக்கும் மேகதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. உடனடியாக இந்த தீர்மானம் டெல்லிக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. 

 

இந்த நிலையில்தான், வெள்ளிக்கிழமை (7-ந் தேதி) பிற்பகலில் டெல்லிக்கு விரைந்து பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் கவர்னர் பன்வாரிலால். 

 

அவரது டெல்லி பயணம் குறித்து விசாரித்தபோது, ’’ மோடி அரசுக்கு தெரிவிக்கும் தீர்மானமாகட்டும், எழுதப்படும் கடிதமாகட்டும் மத்திய அரசை கண்டிக்கும் வகையில் இது வரை வார்த்தைகளைப் பயன்படுத்தியதில்லை எடப்பாடி பழனிச்சாமி. முதன்முறையாக கண்டன வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். இதனை மத்திய அரசு ஜீரணிக்கவில்லை. சமீபத்தில் டெல்லி சென்ற எடப்பாடி, மோடியை சந்தித்து வைக்கப்பட்ட தனிப்பட்ட கோரிக்கைகளிலும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதனால், மத்திய அரசு தன்னைப் புறக்கணிப்பதாக கருதுகிறார் அவர். இந்த நிலையில், தமிழக நலன்களுக்கு எதிரான விசயத்தில் மென்மையானப் போக்கினை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என தீர்மானித்ததன் விளைவுதான் மத்திய அரசை தீர்மான வடிவில் எதிர்க்கத் துவங்கியிருக்கிறார் எடப்பாடி. இதனை மோடி அரசு எதிர்ப்பார்க்கவில்லை. இந்த நிலையில்தான் கவர்னரை டெல்லி அழைத்தது.

 

eps



 
தன்னை சந்தித்த கவர்னரிடம், தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் ட்ராப்ட் உங்களுக்கு முன்கூட்டி காட்டப்பட்டதா? தீர்மானத்தின் வரிகளைப் படித்துப் பார்த்தீர்களா? என கேட்டிருக்கிறார் பிரதமர் மோடி. அதற்கு கவர்னர், மேகதாது அணைக்கான ஒப்புதலை தந்த மத்திய அமைச்சகத்தின் முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதற்கான தீர்மானம்தான் நிறைவேற்றப்படவிருக்கிறது என முதல்வர் தரப்பிலிருந்து சொல்லப்பட்டது. கண்டனம் தெரிவிப்பதாக என்னிடம் சொல்லவில்லை என தெரிவித்திருக்கிறார். 

 

இதனையடுத்து மாநிலத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து கேட்டறிந்தார் மோடி. அப்போது, கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துமளவுக்கு நிலைமை தமிழகத்தில் இருப்பதையும் சமீபத்தில், 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தையும் விவரித்துள்ளார் கவர்னர்.  மேலும், வைகோ உள்ளிட்ட பலர் மீது காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டிருப்பதையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார் கவர்னர். 
 

rajnathwsigh



அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரதமர், ராஜ்நாத்தை சந்தித்து விவாதித்துவிட்டு சென்னைக்கு செல்லுங்கள் என கவர்னருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜ்நாத்தை சந்தித்தார் கவர்னர். இந்த சந்திப்பில், தமிழக அமைச்சர்கள் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசு சேகரித்து வைத்துள்ள தகவல்கள், முதல்வர் எடப்பாடிக்கு எதிராக சு.சாமி கொடுத்துள்ள புகார், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு , 7 பேர் விடுதலை என பல முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது ‘’ என விரிவாக சுட்டிக்காட்டுகின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள். 

 

’’எடப்பாடி அரசுக்கு எதிராக சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவே இந்த சந்திப்பு உணர்த்துகிறது. இனி வரும் நாட்கள் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்தும்‘’  என்கிறார்கள் தமிழக தலைமைச்செயலக அதிகாரிகள்.  இதற்கிடையே, கவர்னரின் டெல்லி பயணத்தில் நடந்தவைகளை அறிந்து கொள்ள டெல்லியிலுள்ள சோர்ஸ்களை அணுகியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.