மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் பற்றி சமூக செயற்பாட்டாளர் ஓவியா நம்முடன் விரிவாக பகிர்ந்துகொண்டார். அவை..
மீண்டும் குலக்கல்வியை கொண்டுவரும் முயற்சி தான் விஸ்வகர்மா திட்டம். மோடியே இதை அப்படித்தான் சொல்லியிருக்கிறார். குரு-சிஷ்ய முறையிலான கல்வி முறையை பலப்படுத்தவும், பாரம்பரிய குடும்பத் தொழில்களை மேம்படுத்தவும் தான் இந்தத் திட்டம் என வெளிப்படையாகவே அவர் தெரிவித்துள்ளார். 18 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளை தொழிலாளர்களாக வைத்து வேலை வாங்கக்கூடாது என்பது தான் சட்டம். குடும்பத் தொழில்களுக்கு உதவுகிற குழந்தைகளை தொழிலாளிகள் என்கிற வரம்புக்குள் கொண்டுவரக் கூடாது என்கிற சட்டத்திருத்தத்தை இவர்கள் கொண்டுவந்தனர். இந்த விஸ்வகர்மா திட்டம் வந்தபிறகு இதையும் அந்த சட்டத்திருத்தத்தையும் இணைத்துப் பாருங்கள். இவர்களுடைய நோக்கம் என்ன என்பது புரியும். ‘உன்னுடைய பிள்ளையைப் படிக்க அனுப்பாதே. குலத்தொழில் செய்ய வை. அரசாங்கம் உனக்கு கடன் வழங்கும்’ என்பதைத் தான் இவர்கள் வெளிப்படையாகவே சொல்கிறார்கள். அனைவரும் கல்வி கற்பது அடிப்படை உரிமை என்று நம்முடைய சட்டத்தில் இருக்கிறது.
பெண்களைப் படிக்க வைத்தால், திருமணத்துக்கு அரசு உதவி செய்யும் என்று கலைஞர் சட்டம் கொண்டுவந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மக்களைப் பள்ளிக்குள் அழைத்து வந்தது. அதற்கு நேர் எதிரான வழிமுறையை பாஜக எடுக்கிறது. குழந்தைகளைப் படிக்க வைக்கவில்லை என்றால் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும் என்று சொன்னால் பல பெற்றோர்கள் குழந்தைகளின் படிப்பை நிறுத்திவிடுவார்கள். அதைத் தான் பாஜக விரும்புகிறது. கல்வியின் முக்கியத்துவத்தை தமிழ்நாட்டின் பெற்றோர்கள் உணர்ந்துள்ளனர். ஆனால் வடஇந்தியாவில் இதுபோன்ற திட்டங்கள் மூலம் குழந்தைகளைக் கல்வியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
கைத்தொழிலை வளர்ப்பது தான் உங்கள் நோக்கம் என்றால், குடும்பத் தொழில் என்கிற வார்த்தையை சேர்க்க வேண்டிய அவசியம் எங்கே வந்தது? சமுதாயத்தை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் செல்ல வேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கம். அவர்களைப் பொறுத்தவரை மனுதர்மம் தான் உண்மையான தர்மம். சாதி என்பது ஒரு அழகிய சொல் என்கிறார் அன்புமணி ராமதாஸ். சாதிய அமைப்பு வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். எதற்காக சாதி என்பது ஒரு அடையாளமாக இருக்க வேண்டும்? சாதியின் நோக்கமே ஏற்றத்தாழ்வு தான். விஸ்வகர்மா என்பதே ஒரு சாதிய சொல்லாடல் தான். ஏற்கனவே நடைபெற்ற நல்ல மாற்றங்களை சிதைத்து, பின்னோக்கி அழைத்துச் செல்வதற்கு தான் மத்திய அரசு முயற்சி செய்கிறது” என்றார்.