Skip to main content

ரஜினியின் கதை முடிக்க பாஜகவே போதும்!

Published on 09/01/2018 | Edited on 09/01/2018
ரஜினியின் கதை முடிக்க பாஜகவே போதும்! 

ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரிப்பவர்கள் யாரென்று பார்த்தால், அவர் யாருடைய ஆள் என்பது ரொம்பவும் வெளிப்படையாகவே தெரிகிறது. அதாவது, ரஜினியின் புதிய ஆன்மிக அரசியலை,  ரஜினி என்ற பசுத் தோலை பாஜக புலி போர்த்தி வருவதாகவே அரசியல் பார்வையாளர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

ஆன்மிக அரசியல் என்றவுடனேயே ரஜினியின் அரசியலை கேலியாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், பாஜக தலைவர்களான தமிழிசையும், எச்.ராஜாவும், பாஜகவின் ஊதுகுழல் விமர்சகர்களும் ரஜினியை வரவேற்கத் தொடங்கிவிட்டார்கள்.



‘சோவை மிஸ் பண்றேன்’ என்கிறார் ரஜினி. சோ இடத்தை நிரப்பத் துடிக்கும் குருமூர்த்தியோ ரஜினியின் ஆன்மிக அரசியலை ‘நல்ல தேர்வு’ என்று பார்ட்டுகிறார். தமிழகத்தில் கடவுள் மறுப்பு அரசியல் முன்னிலையில் இருக்கிறது. எனவே, ரஜினியின் ஆன்மிக அரசியல் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மத நம்பிக்கையாளர்களை ஈர்க்கும் என்கிறார் குருமூர்த்தி.

மத உணர்வு அதிகரித்து வருகிறது எனும் குருமூர்த்தி, எந்த மத உணர்வு என்று சொல்லாமல் விடுகிறார். ஆனால், அவர் இந்து மத உணர்வையே சொல்கிறார் என்று நாம் எடுத்துக்கொள்வோம். அப்படியானால், ரஜினி இந்து மத ஆன்மிகத்தை மட்டுமே முன்னிலைப் படுத்துகிறார் என்று குருமூர்த்தியே ஒப்புதல் தருகிறார்.

தமிழ்நாட்டில் மத உணர்வுகளோ, கடவுள் நம்பிக்கையோ எப்போது குறைந்திருந்தது என்பது குருமூர்த்திக்கே வெளிச்சம். தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியில் அதிமுகவினர் மண் சோறு சாப்பிட்டார்கள். அலகு குத்தினார்கள். மொட்டையெடுத்தார்கள். திமுகவினரும் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கவில்லை. எல்லாக் கட்சிகளிலும் இறை நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆன்மிகத்தை ஆரியம் உரிமை கொண்டாடுவதையோ, ஆரிய வழிப்பட்ட ஆன்மிகத்தை கடைப்பிடிப்பதையோ தமிழர்கள் புறக்கணித்திருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். அப்புறம் இன்னொன்றையும் ரஜினிக்கு ஆதரவாக சொல்கிறார் குருமூர்த்தி.

அதாவது, 2019 மக்களவைத் தேர்தலுக்கு 37 லட்சம் புதிய வாக்காளர்கள் வருகிறார்களாம். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு மேலும் 23 லட்சம் புதிய வாக்காளர்கள் தயாராகிறார்களாம். இவர்கள் அனைவரும் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ரஜினியை நோக்கி படையெடுக்க வாய்ப்பிருக்கிறது என்று கணக்குப் போடுகிறார் குருமூர்த்தி.



ஆடிட்டரின் இந்தக் கணக்கைத்தான், கடந்த 2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும் சொன்னார்கள். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக சுமார் 1 கோடி புதிய வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று அவர்கள் பிரச்சாரத்தில் கூறினார்கள். ஆனால், தமிழக மக்களோ அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மட்டுமே வாக்குகளை அளித்து மற்றவர்களை தோற்கடித்தார்கள்.

பாஜகவைக் காட்டிலும் வெளிப்படையாக ஆன்மிகத்தையும், சாதி, மத உணர்வுகளையும் தூண்டிவிட்டது வேறு யாருமில்லை. ஆன்மிக அடிப்படையிலும், மத அடிப்படையிலும் தமிழக வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்றால் பாஜகவிற்கு டெபாசிட் வாங்கும் அளவுக்காவது வாக்குகளை அளித்திருப்பார்கள். இதுவரை அதுவே சாத்தியமில்லையே ஏன் என்பதை ஆடிட்டர் கணக்குப்போட்டு சொல்வாரா?

புதிய வாக்காளர்கள் எல்லோரும் ரஜினியை எப்படி விரும்புவார்கள் என்று இவர் எதிர்பார்க்கிறாரோ தெரியவில்லை. புதிய வாக்காளர்கள் திமுக எதிர்ப்பாளர்கள் என்றும் இவரே ஒரு கணக்கை தப்பாகப் போட்டு சொல்கிறார். இளம் தலைமுறையை முட்டாள்கள் என்று நினைக்கிறரா குருமூர்த்தி என்பதும் புரியவில்லை.

ஒரு பொய்யைச் சொன்னாலோ, புதிய கருத்தை சொன்னாலோ அடுத்த வினாடியே உலகம் முழுவதும் பரவி, அந்த பொய்யையும், கருத்தையும் சகட்டுமேனிக்கு பிரித்து மேயும் தலைமுறையிடம் எதையும் பொருந்துமாறு சொல்ல வேண்டும். குருமூர்த்தி ரொம்ப காலம் பின்னால் தள்ளியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஆரியத்துக்கோ, பாஜகவுக்கோ, பாஜகவின் பினாமிகளுக்கோ இடமே கிடைக்காது என்பது மட்டும் உறுதி. 

பிரதமர் மோடியை தனது நெருங்கிய நண்பர் என்கிறார் ரஜினி. இரண்டுமுறை ரஜினியை சென்னையில் சந்தித்திருக்கிறார் மோடி. பாஜகவின் ஆள்தான் ரஜினி என்று பல முனைகளில் இருந்தும் அவர் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. ஆனால், இதுவரை பாஜகவுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று ரஜினி கூறவே இல்லை. பாஜகவின் நிழலில்தான் ரஜினி தஞ்சம் புகுந்திருக்கிறார் என்பது ரொம்பவும் வெளிப்படையாகவே தெரிகிறது. 



மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பாராட்டியவர்தான் ரஜினி. கமலும்கூட பாராட்டியவர்தான். ஆனால் பின்னர், தனது தவறான மதிப்பீட்டுக்கு மன்னிப்புக் கேட்டார் கமல். ரஜினி இப்போதுவரை பாஜகவின் ஆள்தான் என்ற குற்றச்சாட்டை மறுக்கவே இல்லை என்பதே அவருடைய வீழ்ச்சிக்கு வழி அமைத்துவிடும். இதுதான் அரசியல் விமர்சகர்களின் கருத்து.

- ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்