Skip to main content

“தனி விமானத்தில் நானும் ரஜினியும் பயணித்தோம்” - நக்கீரன் ஆசிரியர்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

"Rajini and I traveled in a separate plane" - Nakeeran Author

 

மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையொட்டி தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அம்பத்தூர் கிழக்கு பகுதி கொரட்டூர் - சுவாதி மஹாலில் அமைச்சர் சேகர்பாபு கலைஞர் நூற்றாண்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில்  நக்கீரன் ஆசிரியர், நடிகர் நாசர், பேராசிரியர் அருணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

அதில் பேசிய நக்கீரன் ஆசிரியர், “2018 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி அன்று கலைஞரின் உடல்நிலை குறித்த தகவல் வந்ததும், அன்றைய முன்னாள் அமைச்சர்கள் உள்பட நான் அனைவரும் கலைஞர் வீட்டிற்கு சென்றோம். இரவு 12 மணிக்கு கலைஞர் நன்றாக இருக்கிறார் என்று கூறியதற்கு பின் தான் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றோம். வீட்டிற்கு சென்ற பின் தொலைக்காட்சியை பார்த்த போது அதில், கலைஞரின் உடல்நலம் மோசமானதால் ஸ்டாலின் கோபாலபுரத்திற்கு சென்றார் என்று செய்தி வருகிறது. மீண்டும் நாங்கள் அனைவரும் கலைஞரின் வீட்டிற்கு சென்ற போது அங்கு கிட்டத்தட்ட 5000 தொண்டர்கள் குவிந்துவிட்டனர். 

 

காவேரி மருத்துவமனைக்கு செல்வதற்காக கலைஞரை வீட்டின் மாடியில் இருந்து கீழே கொண்டு வந்தோம். அப்போது அவரின் இதயத்துடிப்பின் அளவு 30 என இருந்தது. அங்கு இருந்த 5000 தொண்டர்களும் ‘எழுந்து வா தலைவா’ என்று வானம் முட்ட கோஷம் இடுகிறார்கள். இதனையடுத்து கலைஞரை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தபோது கோபாலபுரத்தில் இருந்த அத்தனை தொண்டர்களும் மருத்துவமனைக்கு வந்து ‘எழுந்து வா தலைவா’ என்று மறுபடியும் கோஷமிடுகிறார்கள். 2 மணி நேர சிகிச்சைக்கு பின் ஆ.ராசா அறையில் இருந்து வெளியே வந்து தலைவர் தப்பித்து விட்டார் என்று சொல்கிறார். கலைஞரின் அப்போதைய இதயத் துடிப்பு அளவு ஆரோக்கியத்துடன் இருக்கும் மனிதரின் அளவுக்கு இருந்தது. இதற்கு காரணம் எழுந்து வா தலைவா என்ற உடன்பிறப்புகளின் அந்த கோஷம் தான் கலைஞரை மீண்டும் கொண்டு வந்தது.

 

கன்னட நடிகர் ராஜ்குமார் விசயத்தில் கிட்டத்தட்ட 108 நாட்கள் அந்த மீட்பு போராட்டம் நடந்தது. அந்த 108 நாட்களும் கலைஞர் ஒரு வேளை உணவு  மட்டும் தான் சாப்பிட்டு வந்தார். ஏனென்றால், என்னுடைய ஆட்சிக்காலத்தில் கர்நாடகாவில் இருக்கும் ஒரு தமிழரின் உயிர் கூட போய்விடக் கூடாது என்ற ஒரு விசயத்தை மட்டும் கலைஞர் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாமல், தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகளைக் கூப்பிட்டு, கோபால் என்ன சொல்கிறாரோ அதை செய்யுங்கள் என்று கூறினார். எந்த முதல்வரும் அப்படி செய்யமாட்டார். 

 

ராஜ்குமாரை மீட்பதற்காக கலைஞரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நடிகர் ரஜினிகாந்த் என்னை தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு, கலைஞரோ, நக்கீரனோ யாரும் கர்நாடகாவுக்கு வரவில்லை என்ற வருத்ததில் இருக்கிறார்கள். இந்த செய்தியை கலைஞரிடம் தெரிவித்து விடுங்கள் என்று கூறுகிறார். நானும் கலைஞரிடம் இதை பற்றி சொன்ன போது கலைஞர் என்னிடம், நீங்களும் ரஜினிகாந்தும் கர்நாடகாவுக்கு சென்று பேசுங்கள் என்று கூறினார். கலைஞரே ரஜினிக்கும் போன் செய்து நக்கீரன் கோபாலுடன் பெங்களூரு போய்ட்டு வாங்க என்று சொன்னார். 

 

பிறகு நான் ரஜினியை தொடர்பு கொண்டு ‘நான் சதாப்தியில் நாளை வந்துவிடுகிறேன். நீங்க பெங்களூருவுக்கு வந்துடுங்க’ என்றேன். அதற்கு ரஜினி, ரயிலிலா? என்று சொல்லிவிட்டு ஒரு போன் செய்தார். மறுநாள் நாங்கள் செல்ல ஒரு தனி விமானம் தயாரானது. அதில் நானும் ரஜினிகாந்தும் பெங்களூருவுக்கு சென்றோம். பெங்களூர் வந்து இறங்கிய போது அங்கு 40 சைரன் வைத்த கார்களும், ஒரு குண்டு துளைக்காத காரும் இருந்தது. எதற்காக இதுவெல்லாம் என ரஜினிடம் கேட்டேன். அப்போது ரஜினி, உங்கள் உயிருக்கு  ஆபத்து ஏற்படுத்தி இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி கலைப்பு நடத்துவது என்ற பெரிய சதி நடக்கிறது. அதனால் தான் இந்த ஏற்பாடு என்று கூறினார்.

 

பிறகு அந்த மாநில முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதனையடுத்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிக்கும் போது இரவு 2 மணி ஆகியது. அது முடிந்தவுடன் கலைஞர் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, “ரொம்ப நன்றாக இருந்தது. நாளைக்கு நான் வருகிறேன் என்று சொல்லுங்கள்” என்று கூறினார். கொடுத்த வேலையை செய்ததுக்கு பாராட்டுவது என்பது மிகப்பெரிய செயல். அதனைவிட நாங்கள் பேட்டி கொடுத்து முடிக்கும் வரை கொடுத்த வேலையை சரியாக செய்கிறோமா என்றும் கலைஞர் பார்த்திருக்கிறார்” என்றார்.