
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட தீபா, பல்வேறு அரசியல் சமரசங்களுக்கு மத்தியில் காணாமல் போனார். இதனால் அ.தி.மு.க.விலும், ஜெயலலிதாவின் சொத்துகளிலும் எந்தப் பிடிமானமும் இல்லாத நிலையில் நாட்களை நகர்த்தி வந்தார். அ.தி.மு.க.வினரும் தீபாவை சுத்தமாக மறந்து போயிருந்தனர்.
தற்போது, தீபாவும் அவரது சகோதரர் தீபக்கும் ஜெயலலிதாவின் வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள சூழலில் மீண்டும் அரசியல் காய் நகர்த்தல்களைத் துவக்கியிருக்கிறார் தீபா. இதற்காக, ஜெயலலிதாவுக்கு நெருக்கமான மூத்த வழக்கறிஞர் ஒருவரைச் சந்தித்து சுமார் 2 மணி நேரம் விவாதித்திருக்கிறார். அந்தச் சந்திப்பில் பல்வேறு ஆலோசனைகள் தீபாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா- தீபக்கை அறிவிக்க சட்டப்பூர்வமான வழிகள் இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டதால்தான், போயஸ் கார்டன் பங்களா எந்தச் சூழலிலும் அவர்கள் வசம் போய்விடக் கூடாது என அதனை நினைவு இல்லமாக மாற்றும் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்து அதற்கு கவர்னரின் ஒப்புதலையும் பெற்றார் எடப்பாடி.
வாரிசுகளாக ஜெயலலிதாவின் அண்ணன் குழந்தைகளை நீதிமன்றம் அறிவித்ததில் அதிருப்தியடைந்துள்ள எடப்பாடி, இது குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அரசு வழக்கறிஞர்களிடம் ஆலோசித்தார். அதன்படி, மேல்முறையீடு செய்ய தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில்தான், ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவரும் அவரது வழக்குகளை ஒரு கட்டத்தில் கவனித்திருந்தவருமான மூத்த வழக்கறிஞரைச் சந்தித்து நீண்ட நேரம் விவாதித்துள்ளார் தீபா. காஞ்சி சங்கரமடத்தின் பின்னணியிலேயே இந்தச் சந்திப்பு நடந்ததாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
இது குறித்து உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, "அ.தி.மு.க. தலைவர்கள் மீது மத்திய அரசு நம்பிக்கை இழந்துவிட்டது. அ.தி.மு.க.வை தற்போதைய தலைவர்கள் வசம் விடுவதற்கு பா.ஜ.க. தலைவர்களுக்கு விருப்பமில்லை. அதாவது, தங்கள் சமூகத்தைச் சேர்ந்த ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட அ.தி.மு.க.வை முழுமையாகக் கையிலெடுக்க வேண்டுமென்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மறைமுக அஜெண்டா. அதற்குப் பிராமணர் சமுக வி.வி.ஐ.பி. யாரும் தமிழகத்தில் மக்கள் செல்வாக்குடன் இல்லை. அதனால்தான் ஜெயலலிதாவின் குடும்பத்திலிருந்தே ஒருவரை கொண்டுவர வேண்டும். அதுவும் பெண்ணாக இருந்தால் மிக நல்லது என யோசித்து ஆர்.எஸ்.எஸ். எடுத்த வியூகம்தான் தீபா. ஏற்கனவே அரசியலில் அவர் குதித்து, அவருடைய தவறான அணுகு முறையாலும், ஜீரணிக்கவே முடியாத எதிர்பார்ப்புகளாலும், அவரைச் சுற்றி நடந்த விரும்பத்தகாத வில்லங்கங்களாலும் தீபாவால் அரசியலில் நிலைத்து நிற்க முடியவில்லை.

இதனால் தீபா விசயத்தை சில காலம் தள்ளி வைத்தது ஆர்.எஸ்.எஸ். குறிப்பாக, சங்கரமடம். தற்போது சட்டமன்ற தேர்தலுக்கான காலம் நெருங்கி வருவதால் இரண்டாவது இன்னிங்ஸாகக் கையிலெடுக்கப்பட்டிருக்கிறார் தீபா. ஜெயலலிதாவின் வாரிசு என்கிற சட்டப்பூர்வ அடையாளம் இருந்தால் நல்லது என எதிர்பார்த்த நிலையில், சட்டரீதியாகவே தீபா, தீபக் தான் வாரிசாக வர முடியும் என்பதால், உயர்நீதிமன்றத்தின் தற்போதைய பிரகடனம் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் திட்டத்திற்கு வலு சேர்த்துள்ளது'' எனச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேலும் விசாரித்தபோது, "ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு மட்டுமல்ல, அ.தி.மு.க.வின் வாரிசாகவும் தன்னை அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்கிற எதிர்கால திட்டத்தில் இருக்கிறார் தீபா. மூத்த வழக்கறிஞருடனான சந்திப்பின்போது இத்தகைய ஆசையை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் தீபா. அந்தச் சந்திப்பில், அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டால் அதனை எதிர்த்து என்ன மாதிரி சட்டபோராட்டங்களை நடத்துவது என்பதையும், அரசியல் ரீதியாக எப்படிப்பட்ட காய்களை நகர்த்துவது என்பதையும் விவாதித்துள்ளனர்.
அப்போது, அ.தி.மு.க.வில் இணைவதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பு வந்தது. கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி கொடுப்பதாகவும் அ.தி.மு.க. தலைவர்கள் உங்களுக்கு வாக்குறுதி தந்தனர். இதைப் பயன்படுத்தி கட்சிக்குள் நுழைந்திருக்க வேண்டும். அப்படி நுழைந்திருந்தால் வாரிசு உரிமையைக் கட்சிக் குள்ளும் உருவாக்கியிருக்க முடியும். ஆனால், அதை விட்டு விட்டு முதல்வர் நாற்காலியை நீங்கள் குறி வைத்ததுதான் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு. நடந்ததை விட்டுத்தள்ளுங்கள்.
தற்போது நீதிமன்றமே, நீங்கள் தான் வாரிசு எனச் சொல்லியிருப்பது உங்களுக்குப் பலம். மேல்முறையீட்டில் அரசுத் தரப்பில் என்ன மாதிரியான நடவடிக்கைகளை சட்டரீதியாக முன்னெடுக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து நாமும் நடவடிக்கை எடுப்போம். அரசியல்ரீதியாக பா.ஜ.க.வின் தேசிய தலைமையின் உதவியை நாடுங்கள். அ.தி.மு.க.வில் அரசியல் செய்ய அவர்கள் வழியமைத்து தருவார்கள் என அட்வைஸ் செய்திருக்கிறார் மூத்த வழக்கறிஞர். இந்தச் சந்திப்பின் பின்னணியில் சங்கரமடம் இருப்பதால் தெம்பாக இருக்கிறார் தீபா'' என்றும் விவரிக்கின்றனர் உளவுத்துறையினர்.

ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துகள் என்னென்ன இருக்கின்றன? எங்கெங்கு இருக்கின்றன? என்பதைத் திரட்டி வரும் தீபா, ஆர்.எஸ். எஸ். மற்றும் பா.ஜ.க.வின் ஆதரவுகளுடன் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு மட்டுமல்ல அவரின் அரசியல் வாரிசாகவும் அதிரடி கிளப்பி அ.தி.மு.க.வுக்குள் நுழைவதே தீபாவின் எதிர்கால திட்டமாக இருக்கிறது. இதுகுறித்து கருத்தறிய அவரது மொபைலில் தொடர்பு கொண்டபோது நமது லைனை அவர் அட்டெண்ட் பண்ணவில்லை. அவர் தனது கருத்துகளைத் தெரிவித்தால் அதனை வெளியிட நக்கீரன் தயாராக உள்ளது.