Skip to main content

வைகுண்டர் வரலாறு பேசும் ‘அகிலத் திரட்டு அம்மானை சுவடி’ கண்டுபிடிப்பு

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

Discovery of "Akilam thirattu Ammanai Suvadi" where Vaikuntar history speaks

 

தமிழ்நாடு முதலமைச்சர் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் இருக்கின்ற அரிய ஓலைச்சுவடிகளையும் செப்புப் பட்டயங்களையும் அடையாளம் கண்டு பராமரித்துப் பாதுகாக்கவும் அட்டவணைப்படுத்தி நூலாக்கம் செய்யவும் 12 பேர் கொண்ட சுவடித் திட்டப் பணிக்குழுவை நியமித்துள்ளார். இத்திட்டப்பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் தலைமையில் சுவடியியலாளர்கள் நியமிக்கப்பட்டு திருக்கோயில்கள் தோறும் கள ஆய்வு செய்ய வழிப்படுத்தி வருகின்றனர். 

 

இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள திருக்கோயில்களின் வரலாற்றையும், வழிபாட்டு மரபையும் காக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள சுவடித்திட்டப்பணி குறித்து ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது...

 

சுருணை ஏடுகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழர் வரலாற்றை மீட்டெடுக்க உருவாக்கிய சுவடித்திட்டப்பணியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மிகச்சிறப்பாக நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அதன்படி இதுவரை 207 திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து 1,80,247 சுருணை ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சுருணை ஏடுகளில் நில ஆவணக் குறிப்புகள், குத்தகை முறைகள், கோயில் திருவிழாக்கள், ஆபரணங்கள், தெய்வ வாகனங்கள், கோயில் அலுவல் குறிப்புகள், பூசை முறைகள், வரவு செலவு குறிப்புகள், மன்னர் குறிப்புகள், காலக் குறிப்புகள் முதலிய பல்வேறு செய்திகள் காணப்படுகின்றன.

 

Discovery of "Akilam thirattu Ammanai Suvadi" where Vaikuntar history speaks

 

இலக்கியச் சுவடிகள்
அது போல 348 இலக்கியச் சுவடிக்கட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இலக்கியச் சுவடிகள் தமிழ், தெலுங்கு மொழியிலும் கிரந்த எழுத்து வடிவிலும் கிடைக்கின்றன. கிரந்த எழுத்து வடிவில் அதிகமான இலக்கியச் சுவடிகள் கிடைக்கின்றன. மேலும், 26 பழமையான செப்புப் பட்டயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதோடு 5 தாள் சுவடிகளும் கண்டறியப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளைப் பராமரித்து பாதுகாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுவரை 45,510 ஏடுகள் பராமரித்து பாதுகாக்கப்பட்டுள்ளன.

 

நூலாகும் சுவடிகள்
ஓலைச்சுவடிகளை நூலாக்கும் பணியினை விரைவுபடுத்திட இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் கே.வி.முரளிதரன் இ.ஆ .ப, கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதன் அடிப்படையில் மாந்துறை க்ஷேத்திரமான்மியம், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் சுருணை ஆவணங்கள், அகிலாண்டேஸ்வரி தோத்திரம், சம்புலிங்கமாலை ஆகிய நூல்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன. பதிப்பாசிரியர் முனைவர் ஜெ.சசிக்குமார் பதிப்புப் பணிக்கான முன்னெடுப்பைச் செய்து வருகிறார்.

 

Discovery of "Akilam thirattu Ammanai Suvadi" where Vaikuntar history speaks

 

அகிலத் திரட்டு அம்மானைச் சுவடி
இந்நிலையில் குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் ஊரில் அமைந்துள்ள அருள்மிகு நாராயணசுவாமி திருக்கோயிலில் சுவடித் திரட்டுநர் மா.பாலசுப்பிரமணியன், கு.பிரகாஷ்குமார் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். கள ஆய்வில் 'அகிலத் திரட்டு அம்மானைச் சுவடி' ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. அகிலத் திரட்டு அம்மானைச் சுவடியைப் படியெடுத்தவர் நரியன்விளை ச.திருமால் நாடார் மகன் த.சுதர்சனன் என்ற குறிப்பு சுவடியில் காணப்படுகிறது.

 

Discovery of "Akilam thirattu Ammanai Suvadi" where Vaikuntar history speaks

 

ஐயா வைகுண்டரின் வாழ்வும், அருள்வாக்கும்
சுவடி படி எடுக்கப்பட்ட காலம் கி.பி. 1977 ஆம் ஆண்டு என்ற குறிப்பு உள்ளது. "அகிலத் திரட்டு அம்மானை" ஐயா வைகுண்டரின் வாழ்வையும் அருள்வாக்கையும் எடுத்துரைக்கிறது. ஐயா வைகுண்டர் 19 ஆம் நூற்றாண்டில் சமூகப் புரட்சி செய்தவர் ஆவார். ஐயா வைகுண்டரின் வரலாற்றைப் பேசும் அகிலத் திரட்டு அம்மானை கி.பி. 1939 ஆம் ஆண்டே பதிப்பாகி வெளிவந்துள்ளது. எனினும் தற்பொழுது கிடைத்துள்ள சுவடி நல்ல நிலையில் முழுமையாக உள்ளதால் மூலப் பாடப் பதிப்பிற்கு உதவும் என்பதன் அடிப்படையில் பராமரித்து பாதுகாக்கவும், புகைப்பட நகலி எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.