ஜப்பானின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் ஜப்பான் வந்தது. அதற்கு முன்பிருந்தே, ஜப்பான் ஜனத்தொகை அதிகரித்திருந்தது. 1894-95 முதல் சீனா-ஜப்பான் போரின் போதே, ஜப்பானியர்கள் கொரியாவின் பல நகரங்களில் குடியேறத் தொடங்கியிருந்தனர்.
ஜப்பானின் கிராமப்புறங்களில் மக்கள் தொகை அதிகரித்திருந்தது. ஜப்பானிய விவசாயிகள் வெளியேறி வேறு நாடுகளில் குடியேறலாம் என்று அந்த நாட்டு அரசு அறிவித்திருந்தது. 1910 ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பானில் இருந்து வெளியேறி வேறு நாடுகளில் குடியேறிய மக்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரம் பேர். வேற்று நாடுகளில் அதிகபட்சமாக குடியேறிய ஒரு நாட்டின் குடிமக்கள் என்றால், அன்றைய நிலையில் ஜப்பானியர்களாகத்தான் இருந்தார்கள்.
கொரியாவில் ஜப்பானியர்கள் விவசாய நிலங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். ஜப்பான் கட்டுப்பாட்டில் கொரியா வந்து, ஜப்பானியர் நிலம் வாங்குவதை சட்டபூர்வமாக்குவதற்கு முன்பே, கொரியாவில் குடியேறிய ஜப்பானியர் நிலம் வாங்கிக் குவித்திருந்தார்கள். அவர்கள் கொரியர்கள் பயன்படுத்திய நிலங்களை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கினார்கள். ஆனால், கொரியாவில் நிலம் பூர்வீக உரிமையாளர்களிடம் இருந்தது. அங்கு எழுத்துப்பூர்வமாக பத்திரப்படுத்தும் பழக்கம் நடைமுறையில் இல்லை.
1906 ஆம் ஆண்டு, கொரியாவுக்கான ஜப்பான் கவர்னர் ஜெனரல் டெரவ்ச்சி நிலச்சீர்திருத்த சட்டத்தை பிறப்பித்தார். அதன்படி, கொரியாவில் நில அளவை தொடங்கியது. பெரும்பகுதி நிலம் பாரம்பரிய உரிமையாளர்களிடம் இருந்தது. வாய்மொழியாக நிலத்தை வாங்கியவர்கள்தான் அதிகம். புதிய நிலஅளவை சட்டத்தின்படி, எழுத்துப் பூர்வமான பத்திரங்களோ, உரிமைப் பத்திரங்களோ, ஆவணங்களோ இருந்தால் மட்டுமே பயன்படுத்தியோருக்கு உரிமை அளித்தது. அப்படி ஆவணங்கள் எதுவும் இல்லாதோரின் நிலம் ஜப்பானிய நில உரிமையாளருக்கும், ஜப்பானின் வர்த்தக நிறுவனமான ஓரியண்டல் டெவலப்மெண்ட் கம்பெனிக்கு சொந்தமாக்கப்பட்டது.
இந்த ஓரியண்டல் டெவலப்மெண்ட் கம்பெனி, பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனியைப் போல வர்த்தகத்திற்காக தொடங்கப்பட்டது. கொரியாவின் சியோல் நகரில்தான் முதன்முதலில் இந்த கம்பெனி தொடங்கப்பட்டது. குடியேற்ற நாடுகளை ஏமாற்றும் கொள்கையை அமல்படுத்துவதற்காக ஜப்பான் பேரரசால் 1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தொடக்கத்தில் கொரியா பேரரசுக்கும், ஜப்பான் பேரரசுக்கும் சொந்தமாக இருந்த இந்த நிறுவனம், 1917 ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தலைமையகம் கட்டப்பட்டதும், ஜப்பான் பேரரசின் கட்டுப்பாட்டுக்கு மாறியது.
இந்தக் கம்பெனி கொரியாவின் நிலத்தை தனதாக்கி, ஜப்பானிலிருந்து கொரியாவில் குடியேறும் ஜப்பானியருக்கு நிலத்தை விவசாயத்திற்கு கொடுத்தது. கொரியாவின் ஏழில் ஒரு பங்கு நிலம் இந்தக் கம்பெனி வழியாக ஜப்பானியர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. அப்படிக் கொடுக்கப்பட்ட நிலத்தை கொரியாவின் பூர்வ குடிகளுக்கு குத்தகைக்கு விவசாயம் செய்ய கொடுத்தார்கள். அதாவது, சொந்த நிலத்திலேயே குத்தகைதாரர்களாக மாறினார்கள்.1924 ஆம் ஆண்டுவாக்கில் இப்படி கம்பெனியிடமிருந்து நிலம்பெற்ற ஜப்பானியர் 2 லட்சத்து 46 ஆயிரத்து 767 பேர்.
ஜப்பான் அரசின் நில அளவை சட்டத்தின்படி, 1920 ஆண்டு வாக்கில் கொரியாவின் மொத்த விளைநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த கம்பெனிக்கு சொந்தமானது. இந்த நிலத்தில் குத்தகைக்கு விவசாயம் செய்யும் கொரியர்கள் விளைச்சலில் 50 சதவீதத்தை ஜப்பானியருக்கு கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்யப்பட்டனர். ஜப்பானியர் வசம் ஒப்படைக்கப்படும் நிலத்தின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தது. ஜப்பானிய அதிகாரிகளால் கொரியர்களிடம் இருந்து அதிகபட்சமாக வரி வசூலிக்கப்பட்டது. விரைவிலேயே கொரியாவின் பூர்வகுடி விவசாயிகள் நில உரிமையை மொத்தமாக இழந்தனர். வறட்சி, வெள்ளம், பூச்சித் தாக்குதல்களால் விளைச்சல் இல்லாவிட்டாலும் குத்தகையைக் கட்டவேண்டும், அப்படிக் கட்டாவிட்டால் குத்தகை உரிமையும் இழக்க நேரிடும்.
இப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்த்து கொரியா விடுதலை இயக்கத்தினர் போராடினர். ஜப்பானின் ஆதிக்க வெறிக்கு எதிராக, சியோலில் உள்ள ஓரியண்டல் டெவலப்மெண்ட் கம்பெனி அலுவலகத்தில் 1927 ஆம் ஆண்டு குண்டு வெடித்தது. இதில் பல ஜப்பானிய மேனேஜர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை நடத்தியவர் கொரியா விடுதலை இயக்கத் தலைவர் நா சியோக்-ஜு. இவர் கொரியாவில் உள்ள சாயெர்யோங் மாகாணத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெரிய பையன் ஆனதும் மன்சூரியாவுக்கு சென்று 4 ஆண்டுகள் ராணுவப் பயிற்சி பெற்றார். பயிற்சியை முடித்து, சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு ஒரு ஸ்டோர் நடத்தினார். அந்தச் சமயத்திலேயே தலைமறைவு விடுதலைக் குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்தார்.
1919 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் ஆண்டு கொரியாவின் நிஜ பேரரசர் கோஜோங் மரணம் அடைந்தார். அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பரவலாக சந்தேகம் எழுந்தது. அவரைக் கொல்ல முன்பு நடந்த சம்பவங்களை கொரியர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். பேரரசருக்கு நெருக்கமான அதிகாரிகள் அனைவரும் ஜப்பான் கூலிப்படையினரால் கொல்லப்பட்டிருந்தனர். 1919, மார்ச் மாதம் 1 ஆம் தேதி 33 விடுதலைப்போராட்ட வீரர்கள் சியோலில் உள்ள உணவு விடுதி ஒன்றில் கூடினார்கள். அவர்கள் கொரியாவின் விடுதலைப் பிரகடனத்தை வாசித்தார்கள். பின்னர் அந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டு, ஒரு நகலை கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பி வைத்தார்கள்.
பின்னர், தங்களுடைய நடவடிக்கை குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து கைது செய்தனர். இதையடுத்து, ஒரு மாணவன் இந்த விடுதலை பிரகடனைத்தை பொகாடா பார்க் அருகே நின்று உரத்த குரலில் வாசித்தான். அப்போது ஒரு கூட்டம் திரண்டது. பின்னர் அது ஊர்வலமாய் புறப்பட்டது. அது பிரமாண்டமாய் வளர்ந்தது. உடனே ஜப்பான் அதிகாரிகள் உஷாராயினர். அதற்குள் கொரியா முழுவதும் 1500 இடங்களில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராடினர். இது ஜப்பான் அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ராணுவத்தையும் கப்பற்படையையும் அழைத்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கொரியர்களை கொன்று குவித்தனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். பலர் பொது இடங்களில் தூக்கிலிடப்பட்டனர்.
வரலாற்றில் மிகக் கொடூரமான ஒடுக்குமுறையைத் தொடர்ந்து அந்த விடுதலை இயக்கம் முடிவுக்கு வந்தது. கொரியாவுக்கு உதவும்படி அமெரிக்காவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வல்லாதிக்க நாடுகளை பகைத்துக்கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை. கொரியாவை ஜப்பானின் காலனி என்றே அமெரிக்கா ஒப்புக்கொண்டது. கொரியா விடுதலை இயக்கத்துக்கு அமெரிக்கா உதவுவதாக ஜப்பான் கருதிவிடக்கூடாது என்று உட்ரோ வில்ஸன் தனிப்பட்ட வேண்டுகோள் விடுத்தார்.
ஜப்பானின் இந்த அட்டூழியத்தை எதிர்த்து, மன்சூரியாவில் வாழ்ந்த நாடுகடத்தப்பட்ட கொரியா விடுதலை இயக்கப் போராளிகள், அங்கிருந்த ஜப்பானிய ராணுவத்துடன் சண்டையிட்டனர். அதுவும் ஒடுக்கப்பட்டது.
கொரியா விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்ட நிலையில் ஜப்பானிய அதிகாரிகள் பலரை கொன்று, ஜப்பானிய கைக்கூலி என்று கருதிய கொரியர் ஒருவரையும் கொன்றுவிட்டு, நா சியோக்-ஜு சீனாவின் ஷாங்காய் நகருக்கு தப்பினார். அங்கு, கொரியா அரசாங்கத்தை நிறுவி அதன் பாதுகாவலராக செயல்பட்டார்.
ஜப்பானிய அட்டூழியத்துக்கு பழிதீர்க்கத் திட்டமிட்ட சியோக் ஜு, மன்சூரியாவிலிருந்து, 1927 ஆம் ஆண்டு சியோலுக்கு வந்தார். பல்வேறு மாறுவேடங்களில் கொரியாவுக்குள் ஊடுருவிய அவர், 1927 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி ஓரியண்டல் டெவலப்மெண்ட் கம்பெனி மீது தாக்குதலுக்கு தயாரானார். அலுவலகத்திற்கு நுழையும்போதே கடன் வழங்கும் இடத்தில் ஒருகையெறி குண்டை வீசினார். அதில் பலர் உயிரிழந்தநர். பின்னர் சரமாரியாக சுட்டபடியே முன்னேறினார். இதில் பல ஜப்பானிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கட்டடத்திற்குள் வெடிகுண்டுகளை வீச முயன்றபோது அது வெடிக்கவில்லை. அவரைக் கைது செய்ய வந்த போலீஸ் அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொன்றார். அதற்குள் நிறைய போலீஸார் அவரைச் சுற்றி வளைத்தனர். தப்பிக்க முடியாத சியோக் ஜு தனது மார்பில் மூன்றுமுறை சுட்டுக்கொண்டு கீழே சாய்ந்தார். அன்று மாலை அவர் உயிரிழந்தார்.
முந்தைய பகுதி:
ஜப்பான் குரங்கு விழுங்கிய கொரியா அப்பம்! கொரியாவின் கதை #7