அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் சென்று ஐய்யப்பனைத் தரிசிக்கலாம் என்ற தீர்ப்பை கடந்த 2018 செப்.28- ஆம் தேதி உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வெளியிட்டது. கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தவிர மற்ற அனைத்து தரப்பு மக்களும், இந்தத் தீர்ப்பை எதிர்த்தனர். ஆகம விதிகளை மீறி பெண்கள் நுழைய முற்பட்டால், கோவில் நடையைச் சாத்திவிடுவோம் என்று சபரிமலை மேல்சாந்தி எச்சரித்தார். பந்தளம் மன்னர் குடும்பமும், பெண்களை அனுமதிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு காட்டியது. ஆனாலும், அசைந்து கொடுக்கவில்லை கேரள முதல்வர் பினராயி விஜயன்.
“உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே தீருவோம். மதத்தின் பெயரால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நாட்டைத் துண்டாட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று அப்போது பினராயி விஜயன் ‘ஸ்டேட்மென்ட்’ விட்டார்.
பெண்ணியவாதிகள் என்று சொல்லும் பிந்து அம்மினி,ரெஹானா ஃபாத்திமா போன்றவர்களை போலீஸ் பாதுகாப்புடன் கடந்த ஆண்டு சபரிமலைக்கு அழைத்து வந்தனர். அதிரடிப்படை சூழ அழைத்துச் செல்லப்பட்ட பெண் பத்திரிக்கையாளர்கள், போராட்டக்குழுவின் மிரட்டல் காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தை நாடறியும். கல்வீச்சு, தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என கலவர பூமியாக மாறியது கடவுளின் தேசம்.
பின்வாங்கிய பினராயி!
இந்த முறை தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டது பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு. நாடாளுமன்ற தேர்தல் தோல்வி காரணமாக இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என்ற முந்தைய உத்தரவு தொடரும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இருப்பினும் "சபரிமலைக்கு 10 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் வந்தால் எங்களால் பாதுகாப்பு அளிக்கமுடியாது..” என்று வெளிப்படையாகவே அறிவித்த தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், “பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் உத்தரவு ஆணை வாங்கி வந்தால் அதுபற்றி பரிசீலிப்போம்" என்றார். உச்சநீதிமன்ற நீதிபதிகளோ “சபரிமலையில் வன்முறை ஏற்பட நாங்கள் விரும்பவில்லை" என்று கூறிவிட்டனர்.
அண்மையில் சபரிமலைக்குச் செல்ல முயன்ற பிந்து அம்மினியை, இந்து அமைப்பினரின் எதிர்ப்பு காரணமாக கொச்சியில் வைத்தே திருப்பி அனுப்பியது கேரள காவல்துறை. இந்த நிலையில் சபரிமலை கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை நேரில் அறிய பயணத்தை தொடங்கினோம். “சாமியே! சரணம் ஐயப்பா!” என சரண கோஷம் எழுப்பி, சபரிமலையை நோக்கி அலை அலையாய் பாய்ந்த பக்தர்கள் கூட்டத்தில் கலந்தோம்.
பாவம் போக்குமாம் பம்பை!
எரிமேலியில் இருந்து பெருவழிப்பாதையில் பயணத்தைத் தொடங்கி பம்பையை அடைந்தோம். பக்தர்களின் பாவத்தைப் போக்கும் எனச் சொல்லப்படும் பம்பை நதியில் பாதத்தைக் கூட முழுமையாக நனைக்கவில்லை. அந்த அளவுக்கு தரையைத் தடவிச் செல்கிறது. ஆனாலும், பரவசத்துடன் நீராடினார்கள் பக்தர்கள்.
வழி நெடுகிலும் பெருமளவில் பக்தர்கள் காணப்பட்டனர். ஆங்காங்கே போலீஸார் தடுப்புகள் அமைத்து, பின்னரே அனுமதித்தனர். அதனால், சரங்குத்தியில் இருந்து சன்னிதானம் செல்லவே 5 மணிநேரத்திற்கு மேலாகிவிட்டது. நைஷ்டிக பிரம்மச்சரியம் என்பது அய்யப்பனின் முக்கிய தத்துவம் என்பதால், இளவயதுப் பெண்களை அங்கே காண முடியவில்லை.10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும், 50 வயதைத் தாண்டிய பெண்களும் ஏராளமானோர் வந்து தரிசித்துச் சென்றனர்.
சுத்தமோ சுத்தம்!
பக்தர்களுக்குத் தேவையான கழிப்பறை, குளியலறை வசதியை திருவிதாங்கூர் தேவஸ்தானம் சிறப்பாக செய்து கொடுத்திருந்தது. அதுபோல், தூய்மைப் பணியும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது. சில இடங்களில் பன்றிகளின் நடமாட்டம் பக்தர்களுக்கு இடையூறு செய்தது. மகரவிளக்கு பூஜை நெருங்குவதால், நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தே வருகிறது. அதனால், கடைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடை முன்பு குப்பை கொட்டப்பட்டு இருந்தால், கடை உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அதனால், பல இடங்களும் சுத்தமோ சுத்தம்!
முத்தான ஓட்டல் சேவை!
ஐய்யப்ப பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் தேவஸ்தானம் சார்பில் வழங்கப்படுகிறது. இதுதவிர்த்து, ஓட்டல்களில் உணவுப் பண்டங்கள் தரமாக இல்லை. விலையும் சற்று உயர்வு. தேனியைச் சேர்ந்த முத்து என்பவர், ஸ்ரீஹரி என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். அங்கே தரமான உணவு, கட்டுபடியாகும் விலையில் கிடைக்கிறது. ஆரம்பத்தில் அந்த ஓட்டலில் டீ எடுத்துச் செல்லும் பையனாக வேலைக்குச் சேர்ந்த அவர், இன்று அந்த ஓட்டலை ஏற்று நடத்துகிறார். முத்தான சேவை என்பதால், தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் அந்தக் கடைக்கு விசாரித்துச் சென்று சாப்பிடுகின்றனர். டோலி தூக்கும் தொழிலாளர்களும் சபரிமலையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸாரும் முத்துவின் கடையின் ரெகுலர் கஸ்டமர்கள். அவர்கள் பசியாறுவதெல்லாம் அங்கேதான்!
ஒரு வழியாக சன்னிதானத்தில் ஐய்யப்பனின் நெய் அபிஷேகத்தை தரிசனம் செய்துவிட்டு, மலையில் இருந்து கீழே இறங்கினோம். பல மைல் தூரத்திற்கு நெய் வாசம் நாசியில் குடி கொண்டிருந்தது. நிலக்கல் வந்து காரில் பயணிக்கும்போது, பக்கவாட்டில் பார்த்துக் கொண்டே வந்தோம். ஒரு இடத்தில் கூட பிளாஸ்டிக் பையோ, காகிதமோ, காலி தண்ணீர் பாட்டிலோ கண்ணுக்குத் தெரியவில்லை. பிறகுதான், இவையெல்லாம் தெரிந்தது. ஆம். நாம் பயணித்த கார், கேரள எல்லையைத் தாண்டி தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்டது.
இயற்கைச் செழிப்பு மிக்க கேரளம் கடவுளின் தேசமென்றால், தமிழ்நாடு என்னவாம்? ஏன் இந்த ஓரவஞ்சனை?