நடுமுதுகில் ஐஸ்கட்டியைச் செருகியதுபோல் இந்தியாவையே அதிர வைத்த வழக்கு நிர்பயா பாலியல் கொலைவழக்கு. நிர்பயாவுக்கு நடந்தது வெறும் பாலியல் அத்து மீறல் மட்டுமல்ல. அத்துமீறியவர் கள், பாதிக்கப்பட்ட பெண் வெளியே வந்து தங்களைக் காட்டிக்கொடுத்துவிடக்கூடாதென குரூரமாக நடந்துகொண்ட விதம் பெண் சமூகத்தையே அதிர்ச்சியில் உறையவைக்கக் கூடியது.
அந்த நிர்பயா வழக்கில்தான், குற்றவாளிகளின் கருணை மனு ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு, பிப்ரவரி 1 ஆம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கென நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. குற்றவாளிகளின் கடைசி ஆசை என்னவென கேட்கப்பட்டாயிற்று. குற்றவாளிகளில் ஒருவரான பவன்குமாரின் மேல்முறையீடு மனுமீதான தீர்ப்பு மட்டுமே தூக்குக் கயிறை குற்றவாளிகளின் கழுத்தில் இறுகிவிடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
நிர்பயா என்றால் "பயமற்றவள்' என்பது பொருள். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் எத்தகைய பின்னணியைக் கொண்டிருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற நிச்சயம் வரும் போதுதான் பெண் பயமற்றவளாவாள். ஆண்கள் இத்தகைய குற்றத்தில் ஈடுபடத் தயங்குவார்கள். அதற்கு பாலியல் குற்றத்தில் ஈடுபடும் ஒவ்வொருவர் மீதான வழக்கும் விரைந்து விசாரிக்கப்பட்டு அவர்களுக்கு நீதிவழங்கப் படவேண்டும். எனவே பெண்கள் மீது பாலியல் வன்முறையைப் பிரயோகிப்பவர்கள் தப்பிவிடமுடியாதென ஒரு ஆசுவாசம் பரவும்வேளையில்… பொள்ளாச்சி பாலியல் வழக்குடன் தொடர்புடைய அடிதடி வழக்கில், ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கையை கைவிடுவதாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக கடந்தாண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். கிணறுவெட்ட பூதம் கிளம்பியது போல், அந்தப் புகாரைத் தொடர்ந்து பல பெண்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக வீடியோக்கள் பல வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, இந்த வழக்கில் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். வழக்கில் தேடப்பட்டு வந்த திருநாவுக்கரசு என்பவர் மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
புகாரளித்த இரண்டு நாட்கள் கழித்து, பெண்ணின் சகோதரர்மீது 26 ஆம் தேதி பொள்ளாச்சி ஜோதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே தாக்குதல் நடத்தப்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் பாபு, செந்தில், வசந்தகுமார் ஆகிய 3 பேர் முதலில் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மணிவண்ணன் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தொடர்ந்து, மணிவண்ணனுக்கு பாலியல் வழக்கிலும் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, பாலியல் வழக்கிலும் சேர்க்கப்பட்டார்.
முதலில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரும் ஜாமீனில் விடுவிக்கப் பட்டதும், இந்த வழக்கில் உள்ளவர்களுக்கு அரசியல் கட்சியோடு தொடர்பில்லை என டி.எஸ்.பி. பாண்டியராஜன் தன்னிச்சையாக ஊடகங்களுக்குப் பேட்டிகொடுத்ததும், முதல் தகவலறிக்கையில் பெண்ணின் பெயர், கல்லூரி உள்ளிட்ட விவரங்களை வெளிப்படையாக பதிந்ததும் சர்ச்சைகளைக் கிளப்பியது.
குற்றவாளிகளை விட்டுவிட்டு, செய்தியை அம்பலப்படுத்திய நக்கீரன் ஆசிரியரை விசாரணை என்ற பெயரில் உளவியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிய நிலையில் பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்பு வந்ததையடுத்து, சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வந்த இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. நக்கீரன்தான் இந்த விவகாரத்தை துணிவுடன் வெளியில் கொண்டு வந்தது என்பதால் சி.பி.ஐ.யிடம் நமது ஆசிரியர் ஆவணங்களை வழங்கினார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மற்றும் அடிதடி என இரு வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரித்து வந்தது. இதில், அடிதடி வழக்கில் ஆதாரம் இல்லாததால் மேல் நடவடிக்கையைக் கைவிடுவதாக சி.பி.ஐ. கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இறுதி வாதம் நடைபெற்று தீர்ப்பு தேதி அறிவிக்க வாய்ப்புள்ளது.
முன்னதாக, அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட பார் நாகராஜ், இந்த அடிதடி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வருகிற ஜனவரி 27 ஆம் தேதி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைக்கு வருகிறது. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
"பாதிக்கப்பட்ட பெண்ணொருவர், துணிச்சலாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததுதான் பொள்ளாச்சி கொடூரம் வெளிவரக் காரணமாக அமைந்தது. அப்படி வழக்குப் பதிவு செய்ததற்காகத்தான் அவரது சகோதரர் பொது இடத்தில் வைத்துத் தாக்கப்பட்டார்.
அந்த வழக்கிலே போதுமான ஆதாரங்கள் இல்லையென சம்பந்தப்பட்டவர்கள் விடுவிக்கப்படும் பட்சத்தில், அரசியல் பின்னணியும், முன்வந்து புகார் கொடுத்தால் பேர் கெடுவதோடு, அரசியல் பெருந்தலைகளின் தாக்குதலுக்கு ஆளாவோம் என பாதிக்கப்பட்டவர்கள் தயங்கக்கூடிய பாலியல் குற்றவழக்கில் எந்தவிதமான தீர்ப்பு வெளிவரும் என்பது யோசனைக்குரியதுதான். நீதி மீது நம்பிக்கை உள்ளது. பொறுத்திருந்துதான் ஆகவேண்டும்'' என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.