மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளரும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி ஒன்றில், "ராணுவம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. தேசத்துக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு அமைப்பு தான் ராணுவம். ஒரு கட்சிக்கு சொந்தமானது இல்லை. இன்றைக்கு பாஜக ஆட்சி செய்யலாம். நாளைக்கு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி செய்யலாம். அப்போது ராணுவம் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவார்களா என்றால் அப்படி இல்லை. இதுவரைக்கும் சுதந்திரம் அடைந்ததில் இருந்து ராணுவத்தை ராணுவமாகத் தான் பார்த்தோம். ராணுவத்தை ஒரு கட்சியின் பிரிவாகப் பார்த்தது இல்லை. ஆனால் பாஜகவினர் எப்பொழுது ஆட்சிக்கு வந்தார்களோ அப்போதிலிருந்து ராணுவத்தை அவர்களின் ஒரு பிரிவாகத் தான் பார்க்கிறார்கள்.
இன்றைக்கு ஸ்ட்ராஜிகல் ஸ்டிரைக் என்பதை கூட புதிதாகச் சொன்னார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் எந்த யுத்தமும் நடந்தது இல்லையா. பாகிஸ்தானுடன் யுத்தம் செய்தது இல்லையா. இந்திரா காந்தி ஆட்சியில் பாகிஸ்தானுடன் யுத்தம் செய்து வங்கதேசத்தையே பிரித்து தனி நாடாக அறிவிக்கவில்லையா. சீனாவுடன் யுத்தம் செய்யவில்லையா. எத்தனையோ யுத்தங்களை நடத்தினாலும் ஸ்ட்ராஜிகல் ஸ்டிரைக் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லையே. பிரதமர் மோடி வந்துதான் புத்தம் புதுசா ஸ்ட்ராஜிகல் ஸ்டிரைக் என்பதை கண்டுபிடித்தது மாதிரியும், இப்போது தான் இந்திய ராணுவம் யுத்தம் செய்வது போன்றும் சித்தரிப்பது எல்லாம் நாட்டுக்கு நல்லது இல்லை. ராணுவ வீரர்களும் தங்களை பாஜகவினராக காட்டிக்கொள்ள முயற்சி செய்வது இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்தாகும்.
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை சம்பவத்தில், தமிழக அரசு வழக்குப் பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. ராணுவ வீரர் எங்கு பாதிக்கப்பட்டாலும் ராணுவத்தில் இருந்து வந்து புலன் விசாரணை செய்வார்கள். ராணுவத்திற்கு என்று தனி நீதிமன்றம் உள்ளது. உயிரிழந்த ராணுவ வீரருக்கு பாஜக 10 லட்சம் கொடுத்தால் மட்டும் போதுமா. ஒன்றிய அரசு 1 ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும். இந்த தேசத்துக்காக உடல், பொருள், ஆவியை அர்ப்பணிக்கும் வீரருக்கு ஒன்றிய அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் கொடுங்கள் யாரும் மறுக்கமாட்டார்கள். ராணுவ வீரர்களை வைத்து பாஜக உண்ணாவிரதம் நடத்துவது என்பது கேலிக்கூத்து. ராணுவமே குடியரசு தலைவர் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
ராணுவ வீரர்களுக்கு ஏன் பாஜகவின் சாயத்தை பூசுகிறீர்கள். இதனால்தான் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். பாஜகவினர் ராணுவத்தை காவி மயமாக்க பார்க்கிறார்கள். அது இந்த தேசத்துக்கு கேடு. இது மிகப்பெரிய தவறு. ராணுவம் எல்லோருக்கும் பொதுவானது. இந்த தேசத்தை காக்க வேண்டிய இடத்தில் ராணுவம் உள்ளது. சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகள் இப்படித் தானே வைத்து இருந்தோம். அதில் பாஜகவினர் கலப்படம் செய்ய நினைப்பதில் நியாயம் இல்லை என்பதே என் கருத்து" எனத் தெரிவித்தார்.