இதோ தோள் மேல் கை வைத்துவிட்டது 2022...
இன்னும் 12 மாதங்களுக்கு இதனுடன்தான் நடக்கப்போகிறோம் நகரவும் போகிறோம்... ஆனால் விட்டு செல்லத் துடிக்கும் 2021 நமக்கு கொடுத்த பல நம்பிக்கைகளையும் சில ஏமாற்றங்களையும் கடந்துதான் இவ்விடத்திற்கு வந்துள்ளோம். இனியும் கடக்கப்போகிறோம். 2020 தொடக்கத்தில் 'கரோனா'... சரியாக ஒரு வருட இடைவெளியில் 'ஒமிக்ரான்'... இப்படி சுகாதார சிந்தனைகள் சூழ்ந்தவாறே வருடம் ஓடிவிட்டது. இந்த இடைப்பட்ட 12 மாதங்களில் நிறைய மனிதர்களையும் இழந்துவிட்டோம். அப்படி நாம் இழந்தவர்களை பற்றிய நினைவுகளை மீண்டும் ஒருமுறை நினைவில் ஏந்திக்கொள்ளவே இத்தொகுப்பு.
2021 ல் நாம் இழந்தவர்கள்...
பழங்குடிகளின் 'காட் ஃபாதர்'
தனது 70 வருட வாழ்க்கையை பழங்குடி மக்களுக்காகவே அர்ப்பணித்தவர். அடிப்படையில் தமிழர். பழங்குடியின உரிமை செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி. ஆதிவாசிகளுக்கு எதிராக அடக்குமுறை நிகழ்த்தப்பட்ட போதெல்லாம் அதற்கெதிராக பலர் குரல் கொடுத்தனர். அவர்களில் முக்கியமாக ஒருவர் ஸ்டேன் சாமி. திருச்சியில் பிறந்து இந்தியா முழுவதும் பழங்குடியின மக்களுக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். ஆதிவாசிகளுக்கு எதிரான சுரண்டல்களின் விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்த ஸ்டேன் சுவாமி, அரசு மற்றும் சில கார்பரேட் நிறுவனங்களால் பறிபோகும் ஆதிவாசிகளின் உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கில் உறுதியாக நின்றவர்.
அவரது வாயை அடைக்க அதிகாரங்கள் முயலாமல் இல்லை. ஆனாலும், விடாமல் கருத்து சண்டையிட்ட ஸ்டேன் சுவாமி, 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் நாள் பீமா கோரேகான் வன்முறை மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயியம்) அமைப்புடனான தொடர்பு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டார். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த 83 வயதான ஸ்டேன் சாமிக்கு மகாராஷ்டிரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது உடல்நிலை சரியில்லாமல் போனது. 2021 சூலை 4 அன்று, உடல்நிலை மோசமடைந்ததால், மும்பையின் ஹோலி பேமிலி மருத்துவமனையில் வென்டிலேட்டர் படுக்கையில் அனுமதிக்கப்பட்டார். மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு முன்னதாகவே 2021 ஜூலை 5 அன்று தனது 83 வது வயதில் தனது போராட்டங்களை அடுத்த தலைமுறைக்கு விட்டுவிட்டு இளைப்பாற சென்றார் ஸ்டேன்.
சிரிப்புக்கு பதிலாக சோகம் தந்த 'சின்னக்கலைவாணர்'
இப்படி நடக்கும் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. எல்லா நேரங்களிலும் சிந்திக்க வைத்து சிரிக்க வைத்தவர், லட்ச கணக்கில் மரங்கள் நடும் அளவிற்கு இறக்கையை நேசித்தவர், நடிகர் விவேக். 2021 ஏப்ரல் 15 ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பேசியதுதான் விவேக்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு. அதில் பேசிய அவர், ''நான் ஏன் தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டேன் என்றால், அரசு மருத்துவமனை தான் பெரும்பாலான ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வருகிறது. நிறைய மக்களுக்கு இந்த தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாமா வேண்டாமா என நிறைய கேள்விகள் இருக்கும், அதேபோல் வதந்திகளும் இருக்கும். இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்வதாக அரசு மருத்துவமனையில் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டேன்'' என்றார். இந்த நிகழ்விற்கு அடுத்தநாளே மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டதாக வந்த தகவல் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்த, 2021 ஏப்ரல் 17 எல்லோருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்து மாரடைப்பால் மறைந்தார். அவர் மறைவுக்கு தமிழகத்தில் பல இடங்களில் மரங்களை நட்டு அஞ்சலி செலுத்தினர் பொதுமக்கள். தன் வாழ்நாள் முழுக்க சிரிப்பையும் சமூக கருத்துகளையும் ஒருசேர கொடுத்த சின்னக்கலைவாணர் இவ்வாண்டில் மறக்க முடியா சோகத்தை மக்களுக்கு கொடுத்துவிட்டார்.
90 அரசியலில் பரபரப்பு தந்த மதுசூதனன்
அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவர், பூசலுக்குப்பின் திமுகவிலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் அதிமுக என்ற தனிக்கட்சியை தொடங்கிய அதேகாலத்தில் வடசென்னையில் கோலோச்சிக் கொண்டிருந்தவர் மதுசூதனன். எம்ஜி.ஆர் காலம் மட்டுமில்லாது ஜெயலலிதா தலையெடுத்த காலத்திலும் தொண்டர் பலத்தை கூட்டுவதற்கு தேவைப்பட்டவர் மதுசூதனன் தான். 1991-ல் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வென்ற மதுசூதனனுக்கு கைத்தறி துறை அமைச்சர் பதவியை கொடுத்தார் ஜெயலலிதா. அதேபோல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மீதான ஆசிட் வீச்சில் கைது செய்யப்பட்ட மதுசூதனன் பின்னர் விடுவிக்கப்பட்டார். இப்படி 90 அரசியலில் பரபரப்பாக இருந்தவர். சமீபத்திய இரட்டை தலைமை தலையெடுப்பினாலும், வயது மூப்பினாலும் ஓரங்கட்டப்பட்டதாக அவரது கட்சியினராலே கூறப்பட்ட நிலையில் அதிமுகவின் அவைத்தலைவராகவே 5 ஆகஸ்டு 2021 உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் 'மூத்த அரசியல்வாதி' மதுசூதனன்.
நன்னிலத்து கவிக்குயில் சூடிக்கொண்ட 'பிறை'
திருவாரூரின் நன்னிலத்திலிருந்து சென்னைக்கு பறந்த கவிக்குயில். கலைத்தாயின் அரவணைப்பில் கலைத்துறைக்கு வாழ்நாள் முழுவதும் கலைப்பணி செய்தவர். எதையுமே வெளிப்படையாக பேசிவிடும் குணம் கொண்டவர், கூடவே சுயமரியாதை மிக்கவர். வெறுமனே பாடலாசிரியர் என்றுமட்டும் சொல்லவிட முடியாது. கவிஞர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகம் கொண்டவர். கவிஞர் பிறைசூடன்.
'சிறை' படத்தில் பாடலாசிரியராக ௭ம்.௭ஸ் விஸ்வநாதனுடன் பயணத்தை தொடங்கிய பிறைசூடன் கடைசியாக ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில் நடிகராகவும் நின்றார். ‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ பாடலில் இசையுடன் இவரின் வரிகள் காதல் தோல்வியின் வலியில் நனைத்தது. 'கோபுர வாசலிலே' படத்தில் ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’, உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன் படத்தில் ‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’ உள்ளிட்ட பாடல் வரிகள் மூலம் 80, 90 களில் டீக்கடை பெஞ்சுகளை ஹவுஸ்ஃபுல் ஆக்கியவர்.‘செம்பருத்தி’ படத்தில் அவர் எழுதிய ‘நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி படுத்தால் ஆறடி போதும்' என்ற பாடலின் படியே எளிமையுடன் வாழ்ந்து 8 அக்டோபர் 2021 அன்று கலை உலகிற்கு இறுதி வணக்கம் வைத்தார்.
கண்ணீர் கடலில் கர்நாடகா... காரணமான புனித் ராஜ்குமார்...
நடிகர் விவேக்கின் மறைவு எப்படி எதிர்பார்க்கப்படாததோ அதேபோல் கர்நாடகாவிலும் நிகழ்ந்தது ஒரு பெரும் இழப்பு. 20 லட்சத்திற்கு அதிகமான ரசிகர்கள் திரள, திடல் கண்ணீர் கடலாகவே காட்சியளித்தது. காரணம் புனித் ராஜ்குமார். கன்னட திரையுலகின் மறைந்த சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். 1975ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி அன்று சென்னையில் பிறந்தவர் புனித் ராஜ்குமார். 1976 முதல் 1989 வரை கன்னட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். 'பெட்டாடா ஹுவு' படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை புனித் ராஜ்குமார் பெற்றார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர். பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், 29 படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு 'அப்பு' என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். புனித் ராஜ்குமாருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். நடிகராக மட்டுமல்லாமல் முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கான கல்விச் செலவுகளை ஏற்பது போன்ற சமூக சேவைகளையும் திரைக்குப் பின்னே செய்து வந்தார். 'ஜேம்ஸ்', 'வித்வா' ஆகிய படங்களில் தற்போது நடித்து வந்த நிலையில் புனித் ராஜ்குமார் எதிர்பாராத விதமாக மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 2021 அக்.29 அன்று உயிரிழந்தார். கன்னட ஊடகம் ஒன்றில் அவர் இறந்துவிட்ட செய்தியை வாசிக்க முற்பட்ட பெண் செய்தி வாசிப்பாளர் நேரலையிலேயே கண்ணீர் விட்டு அழுதது அவர் மீதான மக்களின் பாசத்திற்கு சான்றானது.
இந்தியாவின் பாதுகாப்பு இதயம் தென்னகத்தில் சாய்ந்தது
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது என்ற செய்தி அடுத்த சில நிமிடங்களிலேயே இந்தியாவை பரபரப்பாக்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு. இந்த விபத்தில் மொத்தம் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்த நிலையில் கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். பெங்களூரில் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் உற்று கவனிக்கப்பட்ட இந்த விபத்து குறித்து இந்திய ராணுவம் விசாரித்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூரை அடுத்து இந்தியாவின் பாதுகாப்பு இதயம் நீலகிரியில் சாய்ந்தது.
கலைஞனை இழந்து கைம்பெண்ணான கேமரா...
பத்திரிகையாளராக பேனாவுடன் கைகோர்த்து, ஸ்டில் கேமராவை காதலித்து, ஒளிப்பதிவாளராக சினிமாவில் முதல் பற்று வைத்து, இயக்குநராக சினிமா கடலில் மையம் கொண்டவர் கே.வி.ஆனந்த். கோபுர வாசலிலே’, ‘மீரா’, ‘அமரன்’, ‘திருடா திருடா’ உள்ளிட்ட பல படங்களில் பி.சி.ஸ்ரீராமின் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.வி. ஆனந்த், நடிகர் கமல்ஹாசனின் திரைப் பயணத்தில் மிக முக்கிய படமாகப் பார்க்கப்படும் ‘தேவர் மகன்’ படத்திலும் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தொடர்ந்து ஒளிப்பதிவாளராக வலம்வந்த கே.வி. ஆனந்த் ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’, ‘கவண்’, ‘காப்பான்’ என இயக்குநராகவும் ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து, எளிய மக்களுக்கும் புரியும்படி அதைப் படமாக்கி, அதில் வெற்றியும் கண்டார். அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்திற்கான கதையை கே.வி.ஆனந்த் எழுதி வந்த நிலையில் திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஏப்ரல் 30, 2021 அன்று உயிரிழந்தார்.
அவருடன் பல படங்களில் பணியாற்றிய நடிகர் சூர்யா கே.வி.ஆனந்தின் மறைவிற்கு உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த கடிதத்தில், ''கே.வி ஆனந்த் சார்... இது பேரிடர் காலம் என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது.
நீங்கள் எடுத்த புகைப்படங்களில் தான் 'சரவணன் சூர்யாவாக' மாறிய அந்த அற்புத தருணம் நிகழ்ந்தது. முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவனை சரியான கோணத்தில் படம் பிடித்துவிட வேண்டும் என இரண்டு மணி நேரம் நீங்கள் கொட்டிய உழைப்பை இப்போதும் வியந்து பார்க்கிறேன். 'மெட்ராஸ் டாக்கீஸ்' அலுவலகத்தில் அந்த இரண்டு மணி நேரம் ஒரு போர்க்களத்தில் நிற்பதைப் போல உணர்ந்தேன். 'நேருக்குநேர்' திரைப்படத்திற்காக நீங்கள் என்னை எடுத்த அந்த 'ரஷ்யன் ஆங்கிள்' புகைப்படம் தான் இயக்குனர் வசந்த், தயாரிப்பாளர் மணிரத்னம் உள்ளிட்ட அனைவருக்கும் என் மீது நம்பிக்கை வர முக்கிய காரணம். புகைப்படத்தை விட பத்தாயிரம் மடங்கு பெரியதாக முகம் தோன்றும் வெள்ளித்திரையிலும் நடிகனாக என்னை படம் பிடித்ததும் நீங்கள்தான். முதன் முதலில் என் மீது பட்ட வெளிச்சம் உங்கள் கேமராவில் இருந்து வெளிப்பட்டது. அதன் மூலம் தான் என் எதிர்காலம் பிரகாசமானது. என்னுடைய திரையுலக பயணத்தில் உங்களின் பங்களிப்பும் வழிகாட்டலும் மறக்க முடியாதது''என உருக்கமாக கூறியிருந்தார். இப்படி ஒரு கலைஞனை இழந்து கைம்பெண்ணானது கேமரா.
இயக்குநர் இல்லாமலே திரைக்கண்ட 'லாபம்'
'இயற்கை' பெற்றுத்தந்த தேசிய விருதின் மூலம் தமிழ் சினிமாவில் இயற்கையாகவே கவனிக்கப்பட்டவர் எஸ்.பி.ஜனநாதன். தொடர்ந்து 'ஈ', 'பேராண்மை' படங்களின் மூலம் தான் தனித்துவமான இயக்குநர் என்ற பெயருக்கு வலுசேர்த்தவர். இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் 'லாபம்' திரைப்படம் உருவாகி கொண்டிருந்த நேரத்தில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.ஜனநாதன் மார்ச் 14, 2021 அன்று உயிரிழந்தார். அந்த அற்புத கலைஞன் இல்லாமலே திரைக்கண்டது 'லாபம்'
மறைந்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனுக்கு புகழ் சேர்க்கும் விதமாக அவரது முழு உருவச் சிலை மற்றும் படத்திறப்பு விழா அடையாற்றில் உள்ள டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது. விழாவில் எஸ்.பி.ஜனநாதனின் உருவச்சிலையை இந்திய விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஐயா நல்லகண்ணு திறந்து வைத்தார்.
அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிவப்பு கொள்கைக்காரர்!
ஜனசக்தி, பொதுக்கூட்டம் என தீவிரமாக இயங்கிய சிவப்பு கொள்கைக்காரர். தா.பா என்ற சுருக்கெழுத்தில் அரசியல் வட்டாரத்தில் சுறுசுறுப்பாக இயங்கியவர். தா.பாண்டியன்.
1932ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள வெள்ளைமலைப்பட்டியில் எனும் சிறு கிராமத்தில் தாவீது - நவமணி தம்பதிக்கு பிறந்த நான்காவது மகனே தா.பாண்டியன். பெற்றோர் ஆசிரியர்கள் என்பதால் பள்ளி, கல்லூரி படிப்புகளுக்கு பின், பெற்றோர் வழியை பின்பற்றி, படித்த அதே காரைக்குடி அழகப்பா கல்லூரியிலேயே ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் கம்யூனிஸ கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தா.பா முழுநேர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டராகவே மாறினார்.
1989க்கு பிறகு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்ட தா.பா., ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் காங்கிரஸ் கட்சியின் கைச் சின்னத்தில் இரண்டு முறை வடசென்னைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்வுசெய்யப்பட்டார். வடநாட்டு தலைவர்கள் தமிழ்நாடு வரும்போது தா.பாண்டியனே அவர்களது பேச்சுகளை மொழிபெயர்ப்பார். அப்படி 1991 மே 21ஆம் தேதி ராஜீவ் காந்தி பேச வேண்டிய ஸ்ரீ பெரும்புதூரில் கூட்டத்திலும் தா.பாண்டியனே மொழிபெயர்ப்பாளராக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். ஆனால், அங்கு நடந்த குண்டுவெடிப்பில் ராஜிவ் இறந்துவிட அந்த விபத்தில் தா.பாண்டியனும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
2005ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலராகத் தேர்வுசெய்யப்பட்ட தா.பாண்டியன் மூன்று முறை தொடர்ச்சியாக மாநிலச் செயலாளராக பதவி வகித்தார். நல்ல பேச்சாளராகவும், நகைச்சுவை உணர்வாளராகவும் இருந்த தா.பா சில ஆண்டுகளாக சிறுநீரக செயலிழப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் தொடர்ச்சியாக அரசியல் நிகழ்வுகள், விவாதங்களில் பங்குபெற்று வந்தார். கடந்த பிப்ரவரி 24ஆம் தேதியன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்ட அவர் பிப்ரவரி 26, 2021 அன்று உயிரிழந்தார்.
90 கிட்ஸ் காதல் தோல்விக்கு மருந்துபோட்ட வெண்கல குரல்!
வாட்ஸப்பும், ஸ்டேட்டஸும் இல்லாத காலத்தில் வந்த பாடல், 'ட்ரெண்ட்' என்ற வார்த்தை ட்ரெண்டாகும் முன்னரே ட்ரெண்ட் ஆன பாடல், 'தேவதாஸும் நானும் ஒரு ஜாதி தானடி'க்கு பிறகு 2000 த்தின் தொடக்கத்தில் பல இளைஞர்களின் காதல் தோல்விக்கு மயிலிறகில் மருந்து போட்டது இவரது ''பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே'' என்ற பாடல் தான். பாடகர் மாணிக்க விநாயகம். 'கட்டுக்கட்டு கீர கட்டு', சின்னா வீடா வரட்டுமா' என இவரது அத்தனை பாடல்களும் இளைஞர்களை கவர்ந்திழுத்த பாடல்களாகவே அமைந்தன. சினிமாவில் குத்து பாடல்கள் மட்டுமல்லாது பக்தி பாடல்களை பாடி, இசையும் அமைத்துள்ளார் மாணிக்க விநாயகம்.
பரதநாட்டிய ஆசிரியரான வழுவூர் ராமையா பிள்ளையின் மகனான மாணிக்க விநாயகம். பாடகராக மட்டுமில்லாமல் திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். நன்கு ஆர்மோனியம் வாசிக்கும் திறமை கொண்டவர். தில், தவசி, கன்னத்தில் முத்தமிட்டால், ரன், ரோஜாக்கூட்டம், ஜெயம், இயற்கை, தூள், ஒற்றன், திருப்பாச்சி, சந்திரமுகி உள்ளிட்ட படங்களில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். திருடா திருடி, யுத்தம் செய், பேரழகன், கள்வனின் காதலி, போஸ், திமிரு படங்களில் நடித்தும் உள்ளார். பருத்தி வீரனில் 'அய்யய்யோ' பாடலில் ''செவ்வெளநி சின்னக் கேணி ஒன்ன சிறை எடுக்கப் போறேன் வா நீ'' என பாடியே ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் தன் குரலால் சிறைபிடித்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த பாடகர் மாணிக்க விநாயகத்திற்கு (73) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது காரணமாக டிசம்பர் 26, 2021 அன்று உயிரிழந்தார்.