சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களை அவரின் குடும்பத்தினர் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக பேராசிரியர் கருணானந்தன் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது...
"சில விஷயங்கள் அப்படியே கடந்து போக முடியாது. அது போல ஒரு சம்பவம்தான் மாணவி பாத்திமாவின் மரணம். தமிழகம் போன்ற இடங்களில் தன்னுடைய மகள் பாதுகாப்பாக இருப்பாள் என்று நினைத்துதான் அவளை தமிழகத்திற்கு அனுப்பினேன் என்று மாணவியின் அம்மா சொல்லியிருக்கிறாள். ஏனென்றால், தமிழகம் பெரியார் மண், ஜாதி ஏற்றதாழ்வுகளை காலங்காலமாக எதிர்த்துவரும் இடம். அதனை நம்பி அவர்கள் அவ்வாறு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நடந்து என்ன, அவர்களின் நம்பிக்கை எவ்வாறு பொய்து போனது, அதற்கு என்ன காரணம், யார் காரணம் என்று கேள்வி எழுகிறது. அந்த கல்லூரியில் பாத்திமா மரணமடைகிறார், அதற்கான காரணங்களையும் அவள் கடிதமாக எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். இது தற்கொலை என்று முதலில் சொல்லவே கூடாது. முதற்கட்டமாக யார்மீது புகார் சொல்லப்பட்டதோ அவர்கள் மீது இதுவரை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்றால் அப்படி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து விசாரணை மேற்கொள்வது தானே ஒரு குறைந்த பட்ச நேர்மையாக இருக்கும். அதை ஐஐடி நிர்வாகம் இதுவரை செய்ததா என்றால், அதற்கான முயற்சியை கூட அவர்கள் எடுக்கவில்லை என்பதே நூறு சதவீதம் உண்மை.
இதற்கு பிறகு காவல்துறையினர் விசாரணை என்பது தனியாக நடக்கும். ஆனால் அந்த மாணவியால் குற்றச்சாட்டு உள்ளான ஆசிரியர் தலைமறைவாக இருக்கிறார். நம்முடைய எஸ்.வி சேகரை போல. கண்ணுக்கு முன்னாடி இருந்தாலும் தலைமறைவாக இருப்பதாகத்தான் சொல்வார்கள். இங்குதான் ஜாதிக்கு ஒரு நீதி இருக்கிறதே. இதே இந்த குற்றச்சாட்டுக்கு வேறு ஒருவர் ஆளாகி இருந்தால் அவரின் நிலைமை என்ன என்பது நமக்கு தெரியும். காவல்துறையினர் அவர்களை எப்படி கவனிப்பார்கள் என்பது கூட நமக்கு தெரியும். ஆட்கள் மாறும்போது அதற்கான நீதியும் மாறும் என்பது நமது இந்தியாவின் சாபக்கேடாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த ஐஐடி கூட காமராஜர் ஆட்சியில் காடாக இருந்த அந்த பகுதியை கல்லூரிக்காக அப்போது தமிழக அரசு கொடுத்தது. அந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தமானது.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டது. அதற்கு எந்த ஜாதியினரும் உரிமை கொண்டாட முடியாது. அதில் தற்போது ஜாதி பிரவினை உச்சத்தில் இருக்கிறது என்பதுதான் வேதனையான ஒரு நிகழ்வாகும். இதற்காகதான் தேசிய கல்விக்கொள்கையை கூட நாம் எதிர்கிறோம். இந்த மாதிரியான ஜாதி ஏற்றதாழ்வு சித்தாந்தங்களை அதன் வாழியாக நம்மிடம் திணிக்க பார்க்கிறார்கள். அதன் காரணமாகவே அதற்கு தமிழகத்தில் இருந்து அதிகப்படியான எதிர்ப்பு எழுந்துள்ளது. அதனை நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டால் பல பாத்திமாக்களை நாம் இழக்க நேரிடலாம். இந்த விஷயத்தில் நாம் அஜாக்கிரதையாக இருந்துவிட கூடாது என்பதே அவரின் மரணம் நமக்கு சொல்லும் படமாகும்" என்றார்.