Skip to main content

தூத்துக்குடி வாழத் தகுதியற்ற நகரமாக மாறிவிட்டது. காரணம்.... - பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்

Published on 27/03/2018 | Edited on 27/03/2018

தூத்துக்குடி, முத்து நகரம் இன்று மொத்தமாக கெட்டுவிட்டது. நாட்டிற்கு தேவை என்று வீட்டைக் கொளுத்திய கதையாகத்தான் இன்று தூத்துக்குடி உள்ளது. இவையனைத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறப்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்றுதான் மக்கள் தற்போது போராடி வருகின்றனர். இதுகுறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்படும் 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜனிடம் பேசினோம்... 

 

sundarrajan


 

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏன் தடை விதிக்கவேண்டும்?
நாம் முதலில் ஸ்டெர்லைட்டின் வரலாற்றை பார்க்க வேண்டும். முதன்முதலில் மஹாராஷ்ட்டிரா மாநிலம் ரத்தினகிரியில் ஸ்டெர்லைட் ஆலை கட்டப்பட்டது. இந்த ஆலையால், அந்தப் பகுதியின் புகழ் பெற்ற, பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படும் அல்போன்ஸா மாம்பழங்கள் பாதிக்கப்பட்டவுடனே அங்கிருந்த விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் செய்து அந்த ஆலையை அங்கிருந்து துரத்தினார்கள். அதன்பின் பிற மாநிலங்களுக்குச் சென்று அங்கு அனுமதி கூட கொடுக்கப்படவில்லை. அதன்பின்தான் இந்த ஆலை தூத்துக்குடிக்கு வந்தது. நச்சுக்காற்று, மாசு மற்றும் கழிவுகளால் நகரே இப்போது மோசமாகிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே இருக்கும்  ஆலையே பல மோசமான விளைவுகளை கொண்டிருக்கும்போது, அதை விரிவாக்கம் செய்வது சரியாக இருக்காதல்லவா? அதனால்தான் அங்கிருக்கும் மக்கள் விரிவாக்கத்தை எதிர்த்தும், ஏற்கனவே இருக்கின்ற ஆலையை ஆய்வு செய்யவேண்டும் என்றும் போராட்டம் நடத்துகின்றனர். ஏற்கனவே இவர்கள் செய்த தவறுக்கு உச்சநீதிமன்றம் 100 கோடி அபராதம் விதித்துள்ளது. அதனால் கண்டிப்பாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்படவேண்டும்.


தூத்துக்குடி மக்களுக்கு இந்த ஆலையால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது? எதிர்காலத்தில் என்ன விளைவுகள் ஏற்படும்?  
ஏற்கனவே நிலம், நீர், காற்று என்று அனைத்தும் மோசமாகிவிட்டது. மக்களுக்கு கேன்சர்ல இருந்து அனைத்து நோய்களும் வந்துவிட்டது. அங்கிருந்து வரக்கூடிய நச்சுக்காற்று நிச்சயமாக புற்றுநோயை உண்டாக்கும். இதனால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.  தூத்துக்குடி வாழத் தகுதியற்ற நகரமாக மாறிவிட்டது என்று அனைத்து  ஆய்வுகளும் கூறுகின்றது. இதற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் ஒரு முக்கியமான காரணம். ஏற்கனவே வாழ முடியாத நகரமாக ஆன இடத்தை மேலும், மேலும் அசுத்தப்படுத்துவது தேவையில்லாதது.

 

இவ்வளவு நடந்தும் நீதிமன்றம் ஏன் அனுமதி அளித்தது. தடையும் விதிக்கவில்லையே?
இது ஒரு தவறான தீர்ப்பு என்று நாம் அன்றே சொன்னோம். ஆனால் அவர்கள் காப்பர் என்பது நாட்டிற்கு மிக முக்கியமானது என்று கூறி அனுமதி அளித்தார்கள். இப்போது மக்கள் அவஸ்தைப்படுகிறார்கள். இனிமேல் வரும் அரசாவது இதில் கவனம் கொண்டு செயல்பட வேண்டும். ஆனால் அரசோ இதைத் தடுக்கவில்லை, மாறாக விரிவாக்கம் செய்ய அனுமதி அளித்தார்கள். 

 

புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தூத்துக்குடி முதலிடத்தில் உள்ளது. இதற்கு ஸ்டெர்லைட்தான் காரணமா, இதுதவிர வேறு ஏதும் காரணம் உண்டா?
ஸ்டெர்லைட் மட்டும் இல்லை, ஸ்டெர்லைட்டும் ஒரு காரணம். DCW என்ற இன்னொரு ஆலையும் அங்கு இருக்கிறது. அதை எதிர்த்தும் மக்கள் அவ்வப்போது போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர். இப்படி, கழிவுகளில், செயல்முறையில் விதிமீறல்கள் செய்யும், சுற்றுச் சூழலை பாதிக்கும் அத்தனை ஆலைகளும் காரணம்தான். அதற்கெதிராகவும் மக்கள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதனால் கேன்சர், மூச்சுத்திணறல், தோல் உபாதைகள் போன்றவைக வரும்.

 

அங்கு வேலை செய்பவர்களின் நிலை என்ன?
அங்கு வேலை பார்ப்பவர்களும் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியே சொல்வதில்லை. வெளியே சொல்லவிடாமல் மக்களை பிரித்துவிடுகின்றனர். அவர்களுக்கு நிறைய பாதிப்புகள் உண்டாகியிருக்கிறது. 

 

கடலுக்கு எந்தவிதமான பாதிப்புகள் உண்டாக்குகின்றது?
அங்கிருக்கும் கழிவுகள் அனைத்தும் கடலில்தான் கொட்டப்படுகின்றன. இதனால் அந்தக் கடலின் மீன்வளமே போய்விட்டது. இருக்கின்ற மீன்களும் நச்சாகி உண்பவர்களுக்கு நோய்களை ஏற்படுத்துகிறது. கடலோரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுவிட்டது. அந்த தண்ணீர்படும்போது தோல் அரிப்பு போன்ற பல உடல் கோளாறுகள் உண்டாகிறது.