நீதிமன்றங்களில் அரசியல் மேடைகள்!
-கோவி.லெனின்
”முரண்பாடான காரணங்களைக் கூறி, வழக்குகள் தொடர்ந்து, இந்த உயர்நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க முயற்சிக்கிறார்” என்ற கருத்தைத் தெரிவித்து, தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் கிரிராஜன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ராஜேஷ்.

நீதிமன்றங்கள் அரசியல் மேடைகளாவது புதிதன்று. ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான நீதிமன்றத்தின் வாயிலாக அரசியல் கருத்துகளை எடுத்து வைப்பது போராட்ட முறைகளில் ஒன்று என்பது நெடுங்கால வரலாறு.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1929 ஏப்ரல் 8 அன்று நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில் பகத்சிங்கும் அவரது தோழர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது பகத்சிங், “நாங்கள் யாரையும் கொல்கின்ற நோக்கத்தில் குண்டுகளை வீசவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை குறி வைத்தே வீசப்பட்டன. மக்களை ஏமாற்றி வரும் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது. நீடிக்கவும் விடமாட்டோம் என்பதே எம் நோக்கம்” எனத் தன் அரசியல் பார்வையை நீதிமன்றத்தில் முழங்கினார். அதே மனஉறுதியுடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டு உயிர்த் தியாகம் செய்தனர் தோழர் பகத்சிங்கும் அவரது தோழர்களும்.

விடுதலைப் போராட்டக் களத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் நீதிமன்றங்களை அரசியல் மேடைகளாக்கியுள்ளனர். சுதந்திர இந்தியாவில் இடதுசாரி இயக்கத்தினர் நீதிமன்ற வாதங்களை அரசியல் மேடைகளாக்கி, உண்மையாக சமூக-பொருளாதார விடுதலையை வலியுறுத்தியுள்ளனர்.

“இந்த நீதிமன்றம் காங்கிரஸ் அரசாங்கத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. தாங்களும் (நீதிபதி) பார்ப்பன வகுப்பைச் சார்ந்தவர்கள். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைத் திடீரென்று புகுந்த திருடர்களுக்கு ஒப்பிட்டும் கனம் முதல்மந்திரியார் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். அடக்குமுறை காலத்தில் இம்மாதிரி நீதிமன்றங்களில் நியாயத்தை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனமாகும். ஆதலால் இந்த நீதிமன்றத்தின் நியாயத்தில்- இந்த வழக்கில் எனக்கு நம்பிக்கையில்லை. எனவே கோர்ட்டார் அவர்கள் திருப்தியடையும் வகையில் தங்களால் எவ்வளவு அதிக தண்டனை கொடுக்க முடியுமோ அவைகளையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தியடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க இடமுண்டோ அதனையும் கொடுத்து இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்துவிடும்படி வணக்கமாய்க் கேட்டுக்கொள்கிறேன்”

பொதுவாழ்வில் தியாக உணர்வு கொண்ட இயக்கத்தினர் நீதிமன்றங்களை அரசியல் மேடைகளாக்குவது வரலாற்றில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்கிற மத்திய அரசின் நிலையைக் கண்டித்து அரசியல் சட்டத்தின் 17வது பிரிவை எரிக்கும் போராட்டத்தை 1963 நவம்பர் 17ஆம் நாள் அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தியது.

1986ஆம் ஆண்டு மத்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து தி.மு.க நடத்திய அரசியல் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் கலைஞர் உள்ளிட்டோர் கைது
செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது, ‘‘நாங்கள் சட்டத்தின் வாசகங்கள் அடங்கிய நகலைத்தான் எரித்தோம். அதற்காகத் தண்டனை என்றால், புரட்சிக்கவிஞர் பாடியதுபோல, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம்” என்றார். சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேரின் பதவியைப் பறித்த எம்.ஜி.ஆர் அரசு, அவர்களை சிறைப்படுத்தியதுடன், கலைஞருக்கு சிறை சீருடையை அணிவித்தது.



சில வாரங்களுக்கு முன், சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரியைப் பார்வையிடுவதற்காக விமானத்தில் கோவை வந்து தரையிறங்கி, சாலை வழியாக புறப்பட்ட தி.மு.க செயல்தலைவர் கைது செய்யப்பட்டார். அதற்கு நீட் தேர்வு போராட்டத்தைக் காரணம் காட்டியது அரசு. மாலையில் சேலத்தில் நடக்கவிருந்த மனிதசங்கிலி போராட்டத்திற்காக காலையில் கோவையில் கைது செய்ததுதான் அரசியல். இதனை முன்னிறுத்த வேண்டிய நிலையில், “நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற முயற்சித்தது கிடையாது” என்று பேட்டியளிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

போராட்டக் களங்களும்கூட காலை முதல் மாலை வரையான ஒருநாள் பொழுதுபோக்கு சிறைச்சாலைகளாக மாறிவிட்டன. அந்த அடையாள கைது நடவடிக்கைக்குக் காவல்துறையினர் தயாராவதற்கு முன்பே, போராட்டம் நடைபெறும் இடத்தருகே உள்ள ஏ.சி. திருமண மண்டபத்தை ‘புக்’ செய்து வைக்கும் புத்திசாலி நிர்வாகிகள் கட்சி மேலிடத்துக்குப் பக்கத்தில் இருக்கிறார்கள். அரசியல் போக்குகள் மாறும்போது, நீதிமன்றங்களின் கருத்துகள் விமர்சனப் பார்வையுடன் வெளிப்படுகின்றன.
மக்களுக்கானப் போராட்டத்தில் உறுதியாக இருப்பவர்கள் நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்குவது வரலாற்றுத் தொடர்ச்சி. அந்த செயலுக்காக சட்டத்தின் பார்வையில் நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை மனமுவந்து ஏற்பதே பொதுநல அரசியல்.